1254945 pm modi - 2026

எல்லைக்கு உள்ளும் புறமும்… பிரதமரை குறி வைக்கும் அபாயம்!

உரத்த சிந்தனை அரசியல்
1254945 pm modi - 2026
#image_title

— ஜான்ஸி ராணி ஹிந்துஸ்தானி —

பாரதப் பிரதமரை குறி வைக்கும் அபாயம்? எல்லைக்கு உள்ளும் புறமும் தொடரும் பாதுகாப்பு சவால்கள். உயிரைக் கொடுத்து முறியடிக்கும் பாதுகாப்பு மற்றும் உளவு கட்டமைப்புகள்.

சமீபத்திய நிகழ்வுகளில் சில ஒன்றோடு ஒன்று இணைந்து நம் தேசத்தை சூழும் பாதுகாப்பு அச்சுறுத்தலை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. முதல் விஷயம் பாரத பிரதமரை தொடரும் அச்சுறுத்தல்கள். இரண்டாவது விஷயம் உள்நாட்டில் பாதுகாப்பு கட்டமைப்புகளையே அதிர வைக்கும் வகையிலான போலி அடையாள அட்டைகளோடு சந்தேக நபர்கள் பிடிபடுவது.

மும்பையில் பிரதமர் பங்கேற்க இருக்கும் நிகழ்ச்சி மையத்திற்கு அருகில் கையில் துப்பாக்கியோடும் பிரதமர் அலுவலக அதிகாரி என்ற பெயரில் போலியான அடையாள அட்டையுடனும் இரு நபர்கள் பிடிபட்டுள்ளார்கள்.

கடந்த வாரம் தமிழகத்தில் சில நபர்கள் ஊட்டியில் இருக்கும் ராணுவ பயிற்சி மையத்தின் சார்புடைய அடையாள அட்டைகளுடன் பிடிபட்டுள்ளார்கள். அவர்கள் ஒரு முக்கியமான ராணுவ மையத்திற்குள் நுழைய முயலும் போது சந்தேகத்தின் அடிப்படையில் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது பிடிபட்டுள்ளார்கள்.

இந்த இரு விஷயங்களும் போலி அடையாள அட்டைகள் தயாரிப்பு என்பது கள்ளக்குடியேறிகளுக்கு ஆதார் அட்டைகள் வழங்குவது போலி ஆவணங்கள் வழங்குவது போலி பாஸ்போர்ட் வழங்குவது என்பதை கடந்து இந்த தேசத்தின் உச்சபட்ச பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் அளவிற்கு பிரதமர் அலுவலகம் ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு கட்டமைப்பு சார்பில் கூட போலி அடையாள அட்டைகளை உருவாக்கும் அளவிற்கு விஸ்வரூபம் எடுத்து இருக்கும் அபாயத்தை வெளிப்படுத்துகிறது. இது தேசம் சூழ்ந்திருக்கும் உள்நாட்டு துரோகத்தின் உச்சபட்ச அடையாளம்.

இதில் மும்பை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்கிடமான நபர்களை விசாரித்ததில் அவர்களிடமிருந்து போலி அடையாள அட்டை தான் . ஆனால் பிரதமர் நிகழ்ச்சிக்கும் அவர்களுக்கும் தொடர்பு இல்லை என்று மும்பை காவல்துறை முதல் கட்ட அறிக்கை வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிறது.

பிரதமர் அலுவலக அதிகாரி என்ற பெயரில் போலி அடையாள அட்டையை வைத்திருக்கும் ஒரு நபர் கையில் துப்பாக்கியுடன் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு அருகில் கையும் களவுமாக பிடிபட்ட பிறகும் பிரதமர் பங்கேற்ற நிகழ்விற்கும் பிடிபட்ட சந்தேக நபருக்கும் சம்பந்தம் இல்லை என்று எந்த அடிப்படையில் மும்பை காவல்துறை அறிக்கை வெளியிடுகிறது?.

பிரதமரின் பாதுகாப்பு விஷயத்தில் கையில் ஆயுதங்களுடன் பிடிபட்ட நபர்களை தேசிய பாதுகாப்பு முகமைகளிடம் ஒப்படைத்து அவர்கள் மூலமாக பன்முக விசாரணையை முன்னெடுக்க வேண்டியது அவசியம் . அப்படி இருக்க இதில் பிரதமர் பாதுகாப்பு குறித்த சம்பந்தம் ஏதும் அவர்களுக்கு இல்லை என்று மும்பை காவல்துறை அறிக்கை வெளியிடுவது ஏற்க முடியாது.

உள்நாட்டில் போலி காவலர் அடையாள அட்டை போலி அடையாள அட்டைகளோடு அரசு அதிகாரிகள் போல அதிகார துஷ்பிரயோகம் வசூல் வேட்டை நடத்துவது போன்ற நபர்கள் பிடிபடும் சம்பவங்கள் பலவற்றை அவ்வப்போது பார்த்திருக்கிறோம். அது மாநில அளவிலான சட்டம் ஒழுங்கு பிரச்சனை .

தேசத்தின் பாதுகாப்பிற்கு பொறுப்பேற்கும் பாதுகாப்பு கட்டமைப்புகள் மற்றும் உச்சபட்ட அதிகாரம் கொண்ட அலுவலகங்கள் வரையிலும் இது போன்ற போலி அடையாள அட்டைகள் அதை பயன்படுத்தும் நபர்கள் பரவலாக பிடிபடுவது நம் உள்நாட்டு பாதுகாப்பை அச்சுறுத்தும் ஒரு சவாலாகவே பார்க்கப்படும். இது போன்ற விஷயங்கள் நிச்சயம் தனி மனித குற்றமாக மட்டுமே இருக்க முடியாது. இதன் பிண்ணனியில் உள்நாட்டு வெளிநாட்டு சதிவலை இருக்கும் வாய்ப்பு அதிகம்.

பாரத தேசத்தின் பொருளாதார வளர்ச்சி சுயசார்பு பாதுகாப்பு உறுதி தன்மை அயலக உறவின் மேம்பாடு இவற்றையெல்லாம் சகித்துக் கொள்ள முடியாத வல்லரசு நாடுகளும் பல சர்வதேச அமைப்புக்களும் குறிப்பாக பாகிஸ்தான் சீனா உள்ளிட்ட எதிரி நாடுகளும் பாரதத்தை எப்படியாவது உள்ளிருந்து சீர்குலைக்க பல்வேறு சதிகளை முன்னெடுக்கிறார்கள் . அவர்களுக்கு உள்நாட்டில் தேசத்தின் எதிர்க்கட்சிகள் என்ற பெயரில் இருக்கும் தேசியத்தின் எதிரி கட்சிகளும் ஆர்வலர்கள் போராளிகள் ஊடக வாதிகள் என்ற பெயரில் இருக்கும் தேசவிரோதிகளும் வெளிப்படையாக ஆதரவும் ஒத்துழைப்பும் கொடுக்கிறார்கள்.

திரும்பிய பக்கமெல்லாம் தேச விரோத ஆதரவும் பயங்கரவாதத்தை அனுதாபமாக மாற்ற முயலும் தேச துரோகத்தையும் அப்பட்டமாக பார்க்கிறோம். அப்படிப்பட்டவர்கள் இந்த தேசத்தின் பாதுகாப்பை உள்ளிருந்து சீர்குலைக்கவும் இந்த தேசத்தின் வலுவான ஆளுமையாக கருதப்படும் சர்வதேச தலைமையாக உருவெடுத்துவரும் நம் பாரத பிரதமரை வீழ்த்துவதற்கும் நிச்சயம் எந்த எல்லைக்கும் போவார்கள். அதை சமீப காலமாக பல விரும்பத்தகாத சம்பவங்கள் நிரூபித்துள்ளது..

சர்வதேச நிகழ்வுகளில் பங்கேற்க செல்லும் போது நடந்த சில தொடர் நிகழ்வுகள்.
(பிரதமரின் ரஷ்யா பயணம் உக்ரைன் சம்பவம். சமீபத்திய ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நேரத்தில் ரஷ்யா அதிபர் உடன் நம் பிரதமர் பயணித்தது அதே நேரத்தில் ஒரு அமெரிக்க உளவாளியும் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவாளியும் வங்கதேசத்தில் மர்மமாக மரணித்தது.

உள்நாட்டில் பிரதமர் வாகனம் பஞ்சாப் எல்லையில் மேம்பாலத்தில் போராட்டக் காரர்கள் முற்றுகை பெயரில் நிறுத்தி வைத்தது. கல்கத்தா நிகழ்ச்சி யில் 50 மீட்டர் தொலைவில் ஆளில்லா பாதுகாப்பு வளையம் உருவாக்கியது) உள்ளிட்ட நிகழ்வுகள் எளிதில் கடந்து செல்லும் விஷயங்கள் இல்லை.

சாமான்ய மக்களுக்கு இதன் பின் இருக்கும் கேள்விகள் இன்று வரை விடை தெரியாத மர்மங்கள். அதே சமயம் அதன் முழு பின்னணியும் நம் பாதுகாப்பு கட்டமைப்புகளுக்கு நிச்சயம் தெரிந்தவை. இந்த விஷயங்களில் சம்பந்தப்பட்ட சிலர் திடிரென காணாமல் போன செய்திகள் உண்டு. பலர் மர்மமாக மரணித்தார்கள். அவ்வகையில் நம் பாதுகாப்பு மற்றும் உளவு கட்டமைப்புகள் அதன் செயல்பாடுகள் போற்றத்தக்கது.

உள்நாட்டில் பிரதமரை குறி வைத்து பல்வேறு சம்பவங்கள் நடந்தது அதில் சம்பந்தப்பட்ட சில அமைப்புகள் தேசத்திற்கு உள்ளும் எல்லைக்கு அப்பால் வெளிநாடுகளிலும் அவ்வப்போது எதிர்கொள்ளும் விபரீதங்களும் நிச்சயம் இவையெல்லாம் சாதாரண நிகழ்வுகள் அல்ல. இந்த தேசத்தை சீர்குலைக்க நடத்தப்பட்ட திட்டமிட்ட நிகழ்வுகள் என்பதை விஷயம் புரிந்தவர்கள் தெளிவாக உணர்கிறோம்.

ஒருபுறம் அந்நிய சதி மறுபுறம் அவர்களுக்கு ஆதரவான உள்நாட்டு துரோகம் என்று தேசம் பெரும் சவாலான காலகட்டத்தில் பயணிப்பதை தேசாபிமானிகள் நிச்சயம் அறிவோம். அதே சமயம் இந்த தேசத்தின் பாதுகாப்பு இந்த தேசத்தின் முக்கியமான தலைமைகளை பாதுகாப்பது இந்த தேசத்தையே பாதுகாக்கும் முதல் கடமை என்பதை உணர்ந்து நம் பாதுகாப்பு மற்றும் உளவு கட்டமைப்புகள் உயிரைக் கொடுத்து உழைப்பதையும் கண்கூடாக காண்கிறோம்.

அசைக்க முடியாத சக்தி என்ற இறுமாப்பில் இருக்கும் வல்லரசு நாடுகள் தங்களின் உளவுத்துறை மூலம் நம் பிரதமரை குறி வைத்து பல்வேறு சதிகளை முன்னெடுக்கும் போதும் நம்முடைய பாதுகாப்பு உளவு அமைப்புகள் அவற்றையெல்லாம் தகர்த்து இந்த தேசத்தையும் தேசத்தின் தலைமையையும் பாதுகாப்பதில் தங்கள் உயிரை துத்தமாக பணியாற்றுவதையும் கண்கூடாக காண்கிறோம்.

இவ்வளவு வலுவான தலைமை தீர்க்கமான பாதுகாப்பு உளவு கட்டமைப்புகள் இருந்தபோதிலும் அத்தனையும் கடந்து ஏதேனும் ஒரு விரும்பத்தகாத சம்பவத்தை நிகழ்த்திவிட முடியாதா? அதன் மூலம் இந்த தேசத்தை வீழ்த்தி விட முடியாதா? என்று அந்நிய சதிகாரர்களும் உள்நாட்டு துரோகிகளும் கைகோர்த்து அலைவதன் சாட்சியம் தான் ராணுவ அதிகாரி பிரதமர் அலுவலக அதிகாரி என்பது போல போலி அடையாள அட்டைகளுடன் சந்தேக நபர்கள் பிடிபடுவதும் கைகளில் ஆயுதங்களோடு பிரதமர் பங்கேற்கும் நிகழ்வின் அருகில் ஆயுததாரிகள் பிடிபடுவதும் நமக்கு சொல்லும் செய்தி.

எப்பொழுதெல்லாம் இந்த தேசம் ஒரு வலுவான தலைமையின் கீழ் ஸ்திரமான அரசியலோடு வளர்ச்சி பாதையில் பயணிக்கிறதோ? அப்போதெல்லாம் இந்த தேசத்தை சீர்குலைக்க அதன் தலைமையை வீழ்த்துவது. அதற்காக கொடூரமான கொலை வரைக்கும் பயணிப்பதென்பது கசப்பான வரலாறு.

அந்நிய சதிகளுக்கும் உள்நாட்டு துரோகிகளுக்கும் இரையாக இந்த தேசம் இரண்டு முறை பொறுப்பில் இருந்த பிரதமர்களை பலி கொடுத்துள்ளது. ஒரு முன்னாள் பிரதமரை பிரதம வேட்பாளராக பலி கொடுத்துள்ளது. இன்னொரு முறை இது போன்ற விரும்பத் தகாத சம்பவம் நிகழக் கூடாது. நம் தேசம் மீண்டும் ஒரு இறையாண்மை சார்ந்த அச்சுறுத்தலை சவாலை எதிர் கொள்ளக்கூடாது என்பதே தேசாபிமானிகளின் வேண்டுதல்.

கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்த தேசம் தேசியம் தேச இறையாண்மை பாதுகாப்பு முதன்மையானது. அதை கட்டிக் காக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு மட்டும் சார்ந்தது அல்ல. நம் ஒவ்வொரு குடிமகனுக்கும் அதில் கடமையும் பொறுப்புடைமையும் உண்டு என்பதை இந்நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் உணரும் போது இங்கு தேசவிரோதம் தேச துரோகம் நிச்சயம் களையப்படும். அதுவரையில் நம் தேசத்தின் பாதுகாப்பு விஷயங்களில் பாதுகாப்பு கட்டமைப்புகள் உளவு கட்டமைப்புக்குள் எண்ணிலடங்கா சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

நம் பிரதமரை குறி வைப்பது நிச்சயம் இந்த தேசத்தின் ஸ்திரத்தன்மையை வளர்ச்சியை பாதுகாப்பை குறி வைப்பது என்பதில் சந்தேகம் இல்லை. அதை செய்ய துணிந்தவர்கள் நிச்சயம் சாதாரண பின்புலம் கொண்டவர்களாக இருக்க முடியாது. எனவே இந்த தேசத்தின் பாதுகாப்பு கட்டமைப்பிற்கும் இந்த தேசத்தின் இறையாண்மை பாதுகாப்பிற்கும் சவால் விடும் இதுபோன்ற பாதுகாப்பு அச்சுறுத்தலை முன்னெடுப்பவர்கள் எவராயினும் அவர்கள் இந்த தேசத்தின் எதிரிகள் துரோகிகள் மட்டுமே.

இந்த தேசத்தின் வளர்ச்சி பாதுகாப்பு அமைதி ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க நினைக்கும் இது போன்ற நபர்கள் அவர்களின் உள்நாட்டு தொடர்புகள் வெளிநாட்டு தொடர்புகள் முழுவதுமாக கண்டறியப்பட்டு அவர்களும் அவர்களின் பின்புலமும் வேரோடு களையப்பட வேண்டும். அதுவே இந்த தேசத்தின் சாமானிய மக்களின் நம்பிக்கை பாதுகாப்பை உறுதி செய்யும். அதுவே இந்த தேசத்தின் இறையாண்மையை நிலை நிறுத்தும்.

நம் தேசத்திற்கு எதிரான சக்திகளை உயிரை பணயம் வைத்து உலகமெங்கும் தேடி தேடி வேட்டையாடும் நம் தேசத்தின் பாதுகாப்பு அமைப்புகள் உளவு கட்டமைப்புகள் நிச்சயம் இந்த பாதுகாப்பு அச்சுறுத்தலையும் கடந்து வருவார்கள். அவர்களின் கண்முன்னே இருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தலை வெற்றிகரமாக எதிர்கொண்டு இந்த தேசத்தையும் மக்களையும் நிச்சயம் காப்பார்கள் என்று தேசம் நம்புகிறது.

இந்த அச்சுறுத்தல்களின் பின்னணியில் இருப்பவர்கள் யாரும் நம் பாதுகாப்பு அமைப்புகளின் பிடியில் இருந்து தப்ப முடியாது. ஒருவேளை அவர்களின் தொடர்புகள் எல்லைக்கு அப்பால் இருந்தாலும் அவர்களும் நிச்சயம் மர்ம மரணத்திலிருந்து தப்ப முடியாது என்பது பாரதத்தின் சமகால வரலாறு சொல்லும் செய்தி. அவ்வகையில் கூடிய விரைவில் மர்ம நபர்களிடமிருந்து நல்ல செய்தி வரும் என்று பாரதத்தின் ஒவ்வொரு தேசியவாதியும் நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்.

ஜெய் ஹிந்த்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.