
— ராம் மாதவ் —
தமிழில்: திருநின்றவூர் ரவிக்குமார்
உலகெங்கிலும் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் 75 வது பிறந்தநாளுக்கு வாழ்த்து செய்திகள் குவிந்தன. உலகம் முழுவதும் அவருக்கு இருக்கும் மதிப்பு மரியாதையின் அடையாளம் இது.
உலக தலைவராக அவர் உயர்ந்துள்ளதன் அடையாளம் மட்டுமல்ல இது. இந்திய தேசத்தின் மதிப்பு உலக அரங்கில் உயர்ந்துள்ளது என்பதையும் இது காட்டுகிறது. சுதந்திரம் அடைந்த பிறகு கொஞ்ச காலம் ஜவஹர்லால் நேருவுக்கு கூட இது போன்ற உலக அந்தஸ்து இருந்தது. நேரு பணக்கார குடும்பத்தில் பிறந்தவர். காந்தி மற்றும் சுதந்திரப் போராட்டத்தின் வாரிசாக அடையாளப் படுத்தப்பட்டார். அதனால் அவர் சுதந்திரத்திற்கு பிறகு உலக அரங்கில் உயர்த்தப்பட்டார். ஆனால் அது நீண்ட காலம் நீடிக்க வில்லை. உள்நாட்டிலும் உலக அரங்கிலும் இந்தியா திக்கித் திணறியது.
தனக்கு முன்பிருந்தவர்களை போலல்லாமல் மோடி எளிய பின்னணி கொண்டவர். அது மட்டுமன்றி தவறாக புரிந்து கொள்ளப்பட்ட கருத்தியலின் நிழலும் அவர் மீது கவிழ்ந்திருந்தது. 2014 பிரதமரானபோது எதிர்க்கட்சிகள் பலவும் அவர் அயலுறவு கொள்கையில் தோற்றுப் போவார் என்று கணித்தன. ஆனால் யாரும் நினைத்துப் பார்க்க முடியாததை அவர் சாதித்தார்.
ஓரத்தில் நின்று கொண்டிருந்த இந்தியா அவர் தலைமையில் முக்கிய உலக ஆட்டக்காரராக மாறியது. கடினமான உலக சவால்களையும் ஆதிக்க வல்லரசுகளின் அழுத்தத்தையும் எதிர்கொண்டது மட்டுமன்றி இக்கட்டான சூழ்நிலையில் நாட்டை விவேகத்துடன் கூடிய சுதந்திரமான ( Strategic Autonomy) அயலுறவு கொள்கையால் சிறப்பாக வழி நடத்தினார்.
பல ஆதிக்க மையங்களை கொண்ட உலகில் தற்சார்பு கொண்ட நிலையை மேற்கொள்வது சுலபமான விஷயமல்ல. 1960 களில் பிரான்ஸ் நாட்டில் பத்தாண்டுகளுக்கும் மேலாக சார்லஸ் டி கோல் அதிபராக இருந்தபோது இது போன்றதொரு கொள்கையை பின்பற்றினார். இரு துருவங்கள் இடையே பனிப்போர் நிகழ்ந்த காலம் அது. ஐரோப்பிய நாடுகள் எல்லாம் பொதுவாக அமெரிக்க சார்பு நிலையை மேற்கொண்டிருந்தன. அப்போது டி கோல் தற்சார்பு கொண்ட அயலுறவு கொள்கையை தீவிரமாக முன்னெடுத்தார்.
அவரது அயலுறவு கொள்கை அமெரிக்காவுடன் முழுமையாக ஒத்துப்போக மறுத்தது. சோவியத் யூனியனின் அதிபர் நிகிதா குருசேவ் மற்றும் சீனாவின் மா சேதுங் உடன் அவருக்கு இருந்த உறவை அமெரிக்கா பரிவுடன் பார்க்கவில்லை. ஜான் கென்னடி மற்றும் லின்டன் ஜான்சனின் ஆட்சியின்போது ராஜதந்திரரீதியாக தனிமைப் படுத்துவோம், பொருளாதார தடைகள் விதிப்போம், நேட்டோ ராணுவ பாதுகாப்பு வளையத்தை விலக்கிக் கொள்வோம் என்றெல்லாம் அவரை அச்சுறுத்தினார்கள்.
கடைசியில் ரிச்சர்ட் நிக்சன் மற்றும் அவரது ஆலோசகர் ஹென்றி கிஸ்ஸிங்கர் தான் டி கோலின் சுதந்திரமான போக்கு அமெரிக்காவுக்கு எதிரானது அல்ல என்றும் அது தன் நாட்டின் (பிரான்சின்) சுதந்திரத்தையும் தற்சார்பையும் முன்னிறுத்தும் முயற்சி என்பதை புரிந்து கொண்டார்கள்.
பக்குவமாக மோடி மேற்கொண்ட தற்சார்பை மையமாகக் கொண்ட சுதந்திரமான வெளியுறவு கொள்கையால் உலக அரசியல் களத்தில் இந்தியா உயர்ந்தது. அமெரிக்க நிர்வாகத்தில் உள்ள சிலருக்கு இது எரிச்சலை ஏற்படுத்தியது இயல்பானதே. 1960 ல் டி கோலை மிரட்டியதை போலவே இப்போதுள்ள அமெரிக்க தலைமை மோடியை பல்வேறு வழிகளில் முறைக்கிறது. டி கோல் போலவே மோடியும் உள்நாட்டில் கடுமையாக விமர்சிக்கப்படுவார். வெளிநாட்டு சதிகள் அரங்கேறும். இருந்தாலும் மோடி விவேகத்துடன் கூடிய , தற்சார்பு கொண்ட, சுதந்திரமான புதிய அயலுறவு கொள்கையை உருவாக்கி விட்டார் என்பதுதான் உண்மை. இந்தியாவில் இனி எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த வழியில் இருந்து விலகிச் செல்ல விரும்பாது என்பதும் உண்மை.
அயலுறவு கொள்கையில் மோடி நிபுணத்துவம் பெற்றதற்கு பின்புலமாக இரண்டு தசாப்தங்கள் நீண்ட கதை இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாது. வெளியுலகத்தின் மீது அவர் நடத்திய படையெடுப்பு 1990 களில் ஆரம்பமானது. பாஜகவின் தேசிய நிர்வாகியாக அவர் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அந்நாடுகளில் உள்ள இந்திய வம்சாவளியினர்களின் அமைப்புகளை திட்டமிட்ட ரீதியில் சந்தித்து அவர் கலந்துரையாடினார். அதன் தலைவர்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொண்டார்.
குஜராத்தின் முதல்வரான பிறகு சீனா, ஜப்பான், தைவான், தென்கொரியா, மலேசியா, சிங்கப்பூர் , தாய்லாந்து, ஹாங்காங் உட்பட பல நாடுகளுக்கு முதலீட்டை ஈர்ப்பதற்காக பயணம் செய்தார். 2002 இல் நடந்த கலவரம் சில தடைகளை, குறிப்பாக ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில், ஏற்படுத்தியது. ஆனால் அவற்றால் அவர் தளரவில்லை. நவீன குஜராத் பற்றிய அவரது கனவை நினைவாக்க மேற்கத்திய நாடுகளின் ஆதரவு தேவை என்பதை அறிந்திருந்தார். முக்கியமாக அந்த நாடுகளில் வாழும் இந்தியர்களின் ஆதரவு அவசியம் என்பதும் அவருக்கு தெரிந்திருந்தது.
இங்கிலாந்து அரசின் அங்கீகாரம் இல்லாமல், இன்னும் சொல்லப்போனால் இங்கு வந்தால் கைது செய்து விடுவோம் என்ற அச்சுறுத்தலையும் மீறி, இந்திய வம்சாவளியினரின் வேண்டுகோளை ஏற்று 2003 இல் லண்டனுக்கு சென்றார்.
குஜராத் பொருளாதாரத்திலும் வணிகத்திலும் வெற்றிகரமான இடத்தை பிடித்ததால் மேற்கத்திய நாடுகள் அதை கவனத்துடன் பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. டில்லியில் இருந்த ஐரோப்பிய ஒன்றிய நாட்டு தூதுவர்கள் தங்கள் நாட்டு மேலிடத்திற்கு மோடியுடன் உறவு வேண்டாம் என சொல்லியது எடுபடாமல் போனது. எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது, 2005 இல் ஏற்றமிகு குஜராத் சம்மேளனத்திற்கு பிரிட்டனின் தொழிற் கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பேரி கார்டினெர் கலந்து கொண்டார். தில்லியில் உள்ள பிரிட்டன் தூதுவரை உசுப்பேத்தும் விதமாக அவர் மோடியுடன் மேடையில் ஒன்றாக அமர்ந்திருந்தார். இது போன்ற சிறு துளிகள் விரைவில் ஓடையாக பெருக்கெடுத்தன.
2009 ல் பொதுத்தேர்தல் நெருங்கும் போது மோடி பாஜகவின் பிரதமராக முன்னிறுத்தப்படுவார் என்ற பேச்சு எழுந்தது. அது டெல்லியில் இருந்த தூதரகங்கள் பலவற்றில் கலக்கத்தை ஏற்படுத்தியது. 2008 இல் அமெரிக்காவின் துணை தூதர் என்னுடன் பேசும்போது சாதாரணமான குரலில் , மோடி பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட வாய்ப்புள்ளதா என்று கேட்டார். வாஷிங்டனில் (அமெரிக்காவில்) இது முக்கிய விஷயமாக இருக்கிறது என்பதை உணராத நான், ‘பிரதமர் வேட்பாளராக நிற்பாரா என்பதல்ல எப்போது என்பதுதான் சரியான கேள்வி’, என்று என் பதிலின் முக்கியத்துவத்தை உணராமலே சொன்னேன். 2011 விக்கி லீக்ஸ் ஆவணங்கள் மூலம் இது வெளிப்பட்டது. இந்திய அரசியலில் ஒரு புதிய நாயகன் உருவாகி வருவதை உலகம் அப்போதே அடையாளம் கண்டுவிட்டது.
2009 அக்டோபரில் ஆர்எஸ்எஸ் ஸின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட மோகன் பாகவத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் அதிகாரிகளுடனான கலந்துரையாடலுக்கு முயற்சித்தோம் . மிக முக்கிய நாட்டின் தூதுவர், ரகசியம் காக்கப்பட வேண்டும் என்ற உத்தரவாதத்துடன், அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் ஸூடன் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்ற தடையுத்தரவு இருந்த போதிலும் 27 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரே ஒருவரை தவிர மற்ற எல்லோரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. அதை கேட்கப்பட்ட கேள்விகள் பலவும் மோடியை பற்றி தான் இருந்தன. குஜராத் கலவரத்துடன் மோடியை தொடர்பு படுத்தி மற்ற கட்சிகள் குற்றம் சாட்டுவதை மோகன் பாகவத் வண்மையாக மறுத்தார். நாட்டில் மிகவும் மதிக்கக் கூடிய தலைவராக மோடி இருக்கிறார் என்று உறுதிபட சொன்னார். அது ஐரோப்பிய ஒன்றிய நாட்டு தூதர்களுக்கு தெளிவான செய்தியை தெரிவித்தது.
2011 ல் ஐரோப்பிய ஒன்றியத்தில் முக்கிய நாட்டின் தூதர் தடையாணையை மீறி காந்தி நகருக்கு வந்து மோடியை சந்தித்தார். அந்த சந்திப்புக்கு பிறகு எல்லா விதமான தடைகளும் தகர்ந்தன. 2014 இல் மோடி பிரதமரானபோது உலக நாடுகளின் அயலுறவுத் துறை அதிகாரிகளின் வட்டத்தில் ஒரு மதிப்பும் மரியாதையும் உருவாகிவிட்டது என்பதை டில்லியில் உள்ள பல்வேறு நாட்டு தூதரக அதிகாரிகளுடன் தொடர்புடையவன் என்ற வகையில் நான் உறுதிப்பட கூறுவேன்.
1945 இல் அரசியல் ரீதியான அணுகுமுறைக்கு (ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு) பதிலாக அணுகுண்டை பயன்படுத்தியது ஏன் என்று கேட்டதற்கு, ‘அறிவியலை விட அது மிகவும் சிக்கலானது என்பதால்’ என்று ஐன்ஸ்டீன் கூறியது புகழ்பெற்ற வாக்கியமாயிற்று. புதிய இந்தியா ராஜதந்திர நடவடிக்கைகளையும் இராணுவ நடவடிக்கைகளையும் சமமாக கையாளும் திறன் படைத்தது என்பதை மோடி வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்





