
— ஜெயஸ்ரீ எம். சாரி —
நவராத்திரி என்னும் சுபராத்திரியின் மையமாய் இருப்பது கொலு பொம்மைகள் தான். பல வருடங்களாக, பரம்பரையாக கொலு தர்பார் வீற்றிருப்பதே நம் தமிழக இல்லங்களில் அழகு.

சரியாக 25 வருடங்களுக்கு பிறகு தமிழ்நாட்டில் இந்த வருடம் பலரது இல்லங்களில் வீற்றிருந்த கொலு தர்பாரை தரிசிக்கும், ரசிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

பலரும் இருக்கும் இந்த அவசர யுகத்திலும் கொலு தர்பாரை அலங்கரிப்பதில் அவர்களின் ஆர்வம் புலப்பட்டது. பழைய காலத்து பொம்மைகளின் அழகும், திருத்தமான வடிவமைப்பும், புது பொம்மைகளின் வண்ண வனப்பும் கண்களுக்கு விருந்தாய் அமைந்திருந்தன.
நான் கண்டு மகிழ்ந்த சில சுவாரஸ்யமான கொலு பொம்மைகளை இந்தக் கட்டுரையில் பகிர்ந்துக் கொள்கிறேன்.

‘ஆதி-அந்த பிரபு’வாய் ஒரே பொம்மையில் ஒரு பாதியில் கணபதியும், மறு பாதியில் அனுமனுமாய் காட்சியளித்தனர். பாரத மாதாவும் கம்பீரமாய் வீற்றிருந்தாள்.

பாம்பு டான்ஸ் ஆடும் நாக கன்னி, கடோத்கஜன் தனக்கு பிரியமான உணவு வகைகளுடனும், பாண்டி விளையாடும் இளைஞிகள், தாயக்கட்டை ஆடும் சிறுமியர்கள், பல்லாங்குழி விளையாடும் பெண்கள், குயவர், காய்கறி விற்கும் விவசாயி, விவசாயப் பெண்மணி, வயலிலிருந்து அறுவடை செய்ததை தலையில் சுமந்து வரும் பெண்…

தத்ரூபமான பச்சைக் கிளி, பொய்க்கால் குதிரையில் ஆணும், பெண்ணும், தேசத்தலைவர்கள், மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர், பூக்குடுவையில் மாடர்ன் அழகி, காகிதத்தினால் செய்யப்பட்ட மிருதங்கம், நாகஸ்வரம், மாக்கல்லினால் ஆன கல்லுரல், அம்மி, இயந்திரம், குழிப் பணியார பாத்திரம்….

கோனார் மற்றும் தாய்ப்பசுவிடம் பால் அருந்தும் கன்றுக்குட்டி, தாகத்திற்காக தண்ணீர் பானையில் காத்திருக்கும் காக்கை, மாட்டு வண்டிக்காரர், இசைக் கலைஞர்கள், வீட்டின் உள்ளே தன் பெண்ணிற்கு தலை பின்னிவிடும் தாய்…

கிணறு, குகனுடன் படகில் ராமர், இலக்குவன், சீதை, ஆரத்தழுவிய ராமன்- குகன், நட்பை விளக்கும் கண்ணன் – குசேலர், கிணற்றில் தண்ணீர் எடுக்கும் பெண்களும் அங்கேயே குளிக்கும் ஒரு பெண், பித்தளையில் சிறிய பாத்திரங்கள்…

கைலாச மலை, ஆற்று மணலில் பார்க், அயோத்தி ராம்லல்லா, நவராத்திரி பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தாங்கிய ‘பேனர்’ எனப் பலவிதமான வித்தியாசமான பொம்மைகளை காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
பெரும்பாலான இல்லங்களில் பண்டர்பூரின் ‘விட்டல் -ருக்மணி’ கொலுவில் எழுந்தருளியிருந்தனர்.

‘பல இல்லங்களில் இன்னும் நிறைய பொம்மைகள் உள்ளன. பரணில் இருந்து எடுக்கத்தான் முடியவில்லை’ என்பதே பலரின் வார்த்தைகளாய் இருந்தன.

இன்னும் ஒன்று சொல்ல மறந்தேனே! இப்பொழுது எல்லாம் கொலு தர்பாரை தரிசிக்க, ரசிக்க வரும் பெண்களுடன் விஜயம் செய்யும் ஆண்களுக்கும் நவராத்திரி பரிசுப் பொருட்களும் தருகிறார்கள்.

நவராத்திரியில் குழந்தைகள், பெண்கள், சில ஆண்களும் முப்பெருந்தேவிகளை ஆராதித்து பாடுகின்றனர். ‘தாண்டியா’ ஆட்டமும் பலரையும் தன்னுள் இழுத்துக் கொள்கிறது. இல்லம் வருவோரை கண்கவர் வண்ணக் கோலங்களும், ‘ரங்கோலியும்’ அருமையாய் வரவேற்கின்றன.

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் விரும்பும் கொண்டாட்டமாக நவராத்திரி இருக்கிறது என்பதே ஒரு மகிழ்ச்சியாய், திருப்தியாய் இருப்பதை சொல்லவும் வேண்டுமோ!





