
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில், கேரளத்துக்குக் கொண்டு செல்லப்படும் தமிழகத்தின் கனிம வளங்களைச் சுமந்து செல்லும் அளவில் பெரிய லாரிகள், கண்டெய்னர் வாகனங்கள் உள்ளிட்ட வாகனப் போக்குவரத்து வசதிக்காக நூற்றாண்டுகள் பழமையான வரவேற்பு வளைவு இன்று காலை இடித்து அகற்றப்பட்டது.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் செங்கோட்டை பகுதி இருந்த போது, சமஸ்தானத்துக்குள் நுழையும் வகையில் வைக்கப்பட்ட வரவேற்பு வளைவு மேலே சங்கு முத்திரையுடன் காணப்படும். இருபுறமும் துவாரபாலகர் சிலைகளுடன் ஆன்மீக ரீதியாக முக்கியத்துவம் பெற்ற அம்சத்துடன் இருந்தது இந்த வரவேற்பு வளைவு. இது போன்ற அமைப்பு நாட்டில் வேறு எங்கும் காண முடியாது. வெறும் வரவேற்பு வளைவுகள் மட்டும் தான் இருக்கும். ஆனால் இது ஆன்மிக அடையாளத்துடன் துவாரபாலகர்கள் சிலைகளுடன் அமைந்திருந்ததால் தனித்துவம் பெற்றுத் திகழ்ந்தது.
கோவில்கள் அதிகம் இருந்த இடம். திருவிதாங்கூர் பூமியே ஆன்மீக பூமி என்பதால் அந்தக் காலத்தில் இப்படி ஆலயங்களுக்கு வைப்பது போல் துவாரபாலகர் சிலைகளை வைத்து வழிபட்டு இருக்கிறார்கள். கோயில்களுக்கு வெளியே அல்லது சந்நிதிக்கு வெளியே இப்படி துவாரபாலகர் சிலைகள் இருப்பது நாம் அறிந்தது. ஆனால் இங்கே இந்த பூமியே க்ஷேத்திரம் என்பதால் இந்த சிலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. துவாரபாலகர்கள் ஒற்றை விரல் காட்டி ஏகாக்ர சிந்தையோடு உள்ளே வாருங்கள் என்று சொல்வதாக அமைப்பு.
சபரிமலை செல்லும் அன்பர்கள் இந்த வழியாகச் செல்லும் போது புகழ்பெற்ற ஐயப்பன் தலங்களான ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழை, பந்தளம், எரிமேலி உள்ளிட்ட அனைத்து ஐயப்பன் படை வீடு தலங்களுக்கும் செல்வதற்கு இதுவே நுழைவாயில் என்பதால், அந்நாளில் பெரும்பாலான ஐயப்ப பக்தர்கள் இந்த வழியையே தேர்வு செய்து பயணிப்பார்கள்.
அப்படி இந்த ஊர் வழியாகச் செல்பவர்கள் முதலில் துவார பாலகர்களுக்கு சூடம் ஏற்றி வணங்கி, தங்கள் பயணம் எந்தவித இடையூறும் இன்றி அசம்பாவிதம் ஏதுமின்றி நல்ல முறையில் நடைபெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்து, அவர்களிடம் அனுமதி பெற்று பிறகு உள்ளே செல்வார்கள்.
காரணம் அந்தக் காலத்தில் கேரள மண்ணில் மாந்திரீக ரீதியாக அல்லது அவர்களின் ஆகம ரீதியாக பல பிரதிஷ்டைகளை செய்திருந்தார்கள். அப்படித்தான் கோட்டைவாசல் கருப்பசாமி பிரதிஷ்டையும். இன்றும் கோட்டைவாசல் மேலிருந்து பார்த்தால் கீழே ஊரும் நிலப்பரப்பும் அருமையாகத் தெரியும்.
கோட்டைவாசல் கோயிலுடன் கூடிய பகுதி 1956ல் தமிழகத்துடன் கேரளப் பகுதிகள் சில இணைக்கப்பட்ட போது, தமிழகத்துக்கு கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அதை சரிவர பராமரிக்க இயலவில்லை என்பதால், கோட்டைவாசல் கருப்பசாமி கோயில் வழிபாட்டை மட்டும் கேரளத்தின் கட்டுப்பாட்டில் கொடுத்து விட்டார்கள்! செங்கோட்டை நகரில் மாடன் பிரதிஷ்டைகளும் உண்டு. இவை ஊரில் ஒவ்வொரு முக்கியமான இடத்திலும் அந்நாளில் மாந்திரீக ரீதியாக பிரதிஷ்டை ஆனவை.
இத்தகைய பாரம்பரியச் சிறப்பு வாய்ந்த நுழைவுவாயில் வளைவு, அண்மைக் காலமாக தமிழகத்தில் இருந்து கனிம வளங்களைக் கொண்டு செல்லும் மிகப்பெரும் லாரிகள், கண்டெய்னர்களால் இடிக்கப்பட்டு உரசப்பட்டு சேதப்படுத்தப் பட்டது. எனவே இதனைப் பழுது பார்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. மேலும், துவாரபாலர் சிலைகளுடன் கூடிய வரவேற்பு வளைவை அப்புறப்படுத்த நிறைய எதிர்ப்புகளும் இருந்தது.
இந்நிலையில் மீண்டும் ஒரு வரவேற்பு வளைவு அமைத்து அதில் சங்கு முத்திரையுடன் துவார பாலகர்கள் சிலையும் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அவ்வாறே செய்வதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறது நகராட்சி நிர்வாகம். ஆனால் நிர்வாகத்தின் ஆதிக்கத்தில் இருக்கும் ஆளுங்கட்சி நபர்கள் இந்தச் சிலைகளை அப்புறப்படுத்துவதிலேயே ஒரே கண்ணாக இருந்தார்கள் என்பது அவர்களின் பேச்சிலும் நடவடிக்கையிலும் நன்றாகத் தெரிந்தது. எனவே தான் ஆன்மிகப் பெருமக்கள் இவற்றை அகற்றக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள். அதிகாரிகளிடம் கோரிக்கைகளை வைத்தார்கள். இதனால் இது அரசியல் ஆக்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், செங்கோட்டை பகுதியை உள்ளடக்கிய அதிமுக.,வைச் சேர்ந்த கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி ஏற்பாட்டில் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்பட்டு, மீண்டும் புதிதாக கட்டித்தரப்படும் என்றும், அவ்வாறே துவாரபாலகர்கள் அமைக்கப்படும் என்றும் வாக்குறுதி கொடுக்கப்பட்டதன் அடிப்படையில் இன்று காலை பொதுமக்கள் முன்னிலையில் இடித்து அகற்றப்பட்டது.
எனவே வருங்காலத்தில் தாங்கள் வாக்களித்தபடி இல்லாமல் இந்தச் சிலைகளை வேறெங்காவது கொண்டு போய் வைத்து வரவேற்பு வளைவை அமைத்தால் இந்த ஊர் பெரிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று உள்ளூர் மக்கள் தெரிவித்தார்கள்.





