மழை வெள்ளத்தில் சிக்கி தவித்த 18 ஆயிரம் பேர் மீட்பு

சற்றுமுன்

 

 காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று ஒரேநாளில், மழை வெள்ளத்தில் சிக்கி தவித்த 18 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு உள்ளதாக காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் .

காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :–

அரசுத்துறை அலுவலர்கள் நான்கு குழுக்களாக பிரிந்து உடனடியாக போர்க்கால அடிப்படையில் வெள்ளத்தினால் நீர்சூழ்ந்த பகுதிகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளை துரிதப்படுத்தி, வெள்ளத்தில் சிக்கி உள்ள பொதுமக்களை மீட்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தாம்பரம் டாக்டர் அம்பேத்கர் திருமண மண்டபத்தில் பேரிடர் மீட்பு குழுவினருக்காக தயாரிக்கப்பட்டு வரும் உணவு தரமாக உள்ளதா? என்றும் தமிழக அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

கடந்த 2 நாட்களாக தாம்பரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழையினால் பாதிக்கப்பட்டு அவதியுற்ற பொதுமக்களை நகராட்சி நிர்வாகம், கடலோர காவல் படை, தேசிய இடர்பாடுகள் மீட்புப்படை, மாநில இடர்பாடுகள் மீட்புத்துறை, காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், இந்திய ராணுவ மீட்புத்துறை, கடற்படையினர், விமானப்படையினர், மீன் வளத் துறையினர் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

90 படகுகளைக் கொண்டு 553 மீட்புக்குழு பணியாளர்கள் மூலம் 10 ஆயிரத்து 67 நபர்கள் மிகவும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் இதுவரை 34 ஆயிரத்து 426 பேர் மழை வெள்ள பாதிப்பிலிருந்து மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அரசு பாதுகாப்பு முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள 116 முகாம்களில் மருத்துவ உதவிகள் மற்றும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

மேற்கண்ட ஆய்வுகளின் போது தமிழக முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து பலியான 7 நபர்களுக்கு தலா ரூ.4 லட்சம் வீதம் ரூ.28 லட்சம் நிவாரண உதவியாக அமைச்சர்களால் வழங்கப்பட்டுள்ளது.
என காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறியுள்ளார்.

 திருவள்ளூர் மாவட்டஆட்சியர் வீரராகவ ராவ் நேற்று மாலை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது :–

திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையான உதவிகள் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் துரிதமாக எடுக்கப்பட்டுள்ளன.

இதில் அனைத்து துறை அதிகாரிகள், ஊழியர்கள் இணைந்து இந்த பணியை மேற்கொண்டு வருகிறோம். கடந்த ஆண்டில் இதே நவம்பர் மாதத்தில் 14.2 செ.மீ. மழை அளவு பதிவாகி இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அதை விட 4 மடங்கு கூடுதலாக மழை பெய்துள்ளது.

இதனால், திருவள்ளூர் மாவட்டத்தை சுற்றியுள்ள ஏரிகள் அனைத்தும் நிரம்பி வருகின்றன. கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் கிடைக்கும் விதத்தில் 22 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த குழுவில் ஒரு துணை ஆட்சியர் , 4 வட்டாட்சியர்கள் இருக்கிறார்கள். 11 தாலுகாக்களில் இந்த 22 குழுக்களும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 111 மீட்பு முகாம்களில் 8 ஆயிரத்து 423 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 18 ஆயிரம் பேர் வெளி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 3 வேளைகளிலும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, இந்த முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்களில் 5 வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளுக்கு பால் வழங்கப்படுகிறது.

முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்களுக்காக 22 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏரிகளில் இருந்து உபரிநீர் வெளியேறி வருவதால், அதை தடுப்பதற்காக ஒரு குழுவில் 4 மாவட்ட அலுவலர்கள் அடிப்படையில், 22 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டஆட்சியர் வீரராகவ ராவ் நேற்று மாலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.