பச்சைப் பட்டுடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்: பக்தர்கள் உற்சாகம்

ஆன்மிகச் செய்திகள்

kallalagar-vaigai-river-chithra-pournamiமதுரை: மதுரையில் மிகவும் புகழ்பெற்ற திருவிழாவான சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளிய நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. திருமாலிருஞ்சோலை கள்ளழகர் பச்சைப் பட்டு உடுத்தி, தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதுரை நகரின் புகழ்பெற்ற சித்திரைத் திருவிழா ஏப்ரல் 22ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில், மீனாட்சி பட்டாபிஷேகம், மீனாட்சி திருக்கல்யாணம், திக்விஜயம், தேரோட்டம் என 12 நாட்கள் விழா நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று காலை நடைபெற்றது. இதற்காக அழகர்மலையில் இருந்து பெருமாள், கள்ளழகர் வேடமிட்டு மே2 ஆம் தேதி மதுரை நோக்கிப் புறப்பட்டார். மதுரை வந்த கள்ளழகருக்கு மூன்றுமாவடி பகுதியில் பெருந்திரளான மக்கள் எதிர்கொண்டு வரவேற்பு அளித்தனர். இந்த எதிர்சேவை நிகழ்ச்சி ஞாயிற்றுக் கிழமை நேற்று நடைபெற்றது. பின்னர் இன்று அதிகாலை 6.47 மணி அளவில் பச்சைப் பட்டு உடுத்தி, தங்கக் குதிரையில் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளினார். பச்சைப் பட்டு உடுத்தி கள்ளழகர் வைகையாற்றில் இறங்கியதால், இந்த வருடம் நல்ல சுபிட்சமும் வளமும் இருக்கும் என்று பக்தர்கள் நம்பிக்கை கொண்டனர். பின்னர் கோவிந்தா…கோவிந்தா…என வான் அதிர கோஷமிட்டு பக்தர்கள் கள்ளழகரை வழிபட்டனர். கள்ளழகரை தரிசிப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் வைகையாற்றில் இன்று அதிகாலை முதலே குவிந்திருந்தனர். பின்னர் ராமராயர் மண்டபம் நோக்கி கள்ளழகர் புறப்பட்டார். அங்கே தீர்த்தவாரி முதலிய சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.