மண்சரிவால் பாதிக்கப்பட்ட பாதை சீரமைப்பு; விரைவில் ரயில் இயக்கம்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் நெல்லை

punalur sengottai train service - 2026

செங்கோட்டை: நெல்லை மாவட்டம் செங்கோட்டை -கொல்லம் இடையே அகல ரயில் பாதை பணிகள் சுமார் 8 ஆண்டுகள் நடைபெற்று தற்போது இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த தடத்தில் புளியரை முதல் தென்மலை வரை கடினமான மலைப் பாறைகள் மற்றும் அடர்ந்த வனப்பகுதி. இந்நிலையில் தினமும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் பயணிகள் ரயிலும் இந்தத் தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று பெய்ததால் இந்தத் தடத்தில் கடந்த 15ஆம் தேதி அன்று நியூ ஆரியங்காவு, கழுதுருட்டி,தென்மலை உள்ளிட்ட 8 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது.

இதில் ஏராளமான பகுதிகளில் கடினமான பாறைகள் ரயில் தடத்தில் சரிந்து விழுந்து தென்மலை குகை முன்பு பெரிய பாறாங்கற்கள் சரிந்து விழுந்தன.

இதைத் தொடர்ந்து தென்னக ரயில்வே அதிகாரிகள் குழுவினர் இந்தத் தடத்தில் மண்சரிவை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இன்றுடன் இந்தப் பணிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து 26ஆம் தேதி செங்கோட்டை-புனலூர் தடத்தில் ரயில் எஞ்சினை இயக்கி ரயில்வே அதிகாரிகள் முதல் கட்ட சோதனைகளை நடத்தினர்.

இன்று இரண்டாம் கட்டமாக தென்னக இரயில்வே மதுரை கோட்ட பாதுகாப்பு அதிகாரி மனோகரன் தலைமையில் இருப்புப் பாதையில் ட்ராலி மூலம் சோதனை நடத்தப் பட்டது. இதை அடுத்து, இன்னும் ஓரிரு நாளில் இந்தத் தடத்தில் ரயில் மீண்டும் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.