சென்னையில் இன்று காலை சுரங்க ரயில் சேவை துவங்கப் பட்டது.
சுரங்க ரயில் சேவை துவக்க விழாவில் தமிழக முதல்வர் பழனிசாமி பேசுகையில், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாடு அரசு கேபிளுக்கு டிஜிட்டல் உரிமம் வழங்கியதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
சென்னையில் மக்கள் தொகை பெருகியுள்ளதால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலானது இந்த மெட்ரோ ரயில் திட்டம் மூலம் வெகுவாகக்குறையும்.
மெட்ரோ ரயில் திட்டத்திற்கு வித்திட்டவர் ஜெயலலிதா … பல்வேறு சிறப்பம்சங்களுடன் மெட்ரோ ரயில் சேவை தொடங்குகிறது. வெங்கையா நாயுடுவுடன் இணைந்து திட்டத்தை தொடங்குவதில் மகிழ்ச்சி..இந்த மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மூலதன பங்களிப்பை பெற உதவியாக இருந்தார் வெங்கையா நாயுடு என்று முதல்வர் கூறினார்.
அதை தொடர்ந்து அனைவருக்கும் வணக்கம் என தமிழில் கூறி உரையை தொடங்கினார் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு.
மேலும் அவர் பேசுகையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை இந்த தருணத்தில் நினைவு கூர்கிறேன். இந்த விழாவில் ஜெயலலிதா இல்லாதது வருத்தம் அளிக்கிறது. கட்சிக்கு அப்பாற்பட்டு நான் மிகவும் மதிக்கும் ஆற்றல் மிக்க தலைவர் ஜெயலலிதா. அவரது கோரிக்கையின் பேரில் மெட்ரோ திட்டம் விரிவு படுத்தப்பட்டது.
சென்னையில் மெட்ரோ ரயில் சேவை என்ற ஜெயலலிதாவின் கனவு நனவாகியுள்ளது. சுரங்க ரயில் பாதையில் அனைத்து பாதுகாப்பு வசதிகளும் உள்ளன. பொதுமக்களின் போக்குவரத்தில் மெட்ரோ ரயில் சேவை முக்கிய பங்கு வகிக்கும். போக்குவரத்து சேவையை மேம்படுத்த மத்திய அரசு முனைப்புடன் உள்ளது என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி உதயகுமார், மற்றும் பலர் கலந்துகொண்டனர்.



