
சென்னை:
அமைச்சருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், திட்டமிட்டபடி நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதென போக்குவரத்து தொழிற் சங்கங்கள் அறிவித்துள்ளன.
போக்குவரத்து பணியாளர்கள் ஏழு முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்தன. இந்நிலையில் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தை இன்று பல்லவன் இல்லத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. பேச்சுவார்த்தையின் போது போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.1,250 கோடி தர அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஒப்புதல் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியது.
இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கருடன் ஆலோசனையில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகள், தாங்கள் தனியாக ஆலோசனை நடத்தினர். அப்போது, அமைச்சருடனான பேச்சுவார்த்தை குறித்து விவாதிக்கப்பட்டது. அந்தப் பேச்சுவார்த்தை திருப்திகரமாக இல்லை எனவும், உடன்பாடு எட்டப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனால், திட்டமிட்டபடி நாளை வேலைநிறுத்தம் தொடங்கும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
ஓய்வூதியம், நிலுவைத்தொகை உள்ளிட்ட பண பலன்கள் ரூ.7,000 கோடிவரை தரப்படவில்லை எனக் கூறப்படுகிறது. நிலுவைத் தொகையாக ரூ.750 கோடி தரப்படுவது என்பது மிகவும் குறைவானது என்று கூறப்படுகிறது. இதனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது குறித்த தகவல் பரவியதை அடுத்து, வேலூர், நீலகிரி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் வேலை நிறுத்தம் உடனே தொடங்கிவிட்டது. அரசுப் பேருந்துகளை பணிமனைகளில் நிறுத்திவிட்டு, பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில், தஞ்சையில் தற்போதே 50 சதவீத பஸ்கள் நிறுத்தப்பட்டுவிட்டன.
நெல்லை பேருந்து நிலையத்தில் இருந்து அரசுப் பேருந்துகள், பணிமனைக்கு ஓட்டிச் செல்லப்பட்டன.
தமிழக அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் திருச்சியில் ஒரு நாள் முன்னதாக இன்றே தொடங்கிவிட்டது. அரசு டவுன் பஸ்கள் மதியத்துக்கு பிறகு ஓடவில்லை. புறநகர் பஸ்கள் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்படுகின்றன.
இன்று நள்ளிரவே பஸ்கள் நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப் படுவதால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். பேருந்து நிறுத்த போராட்டத்தால் கடும் பாதிப்பை தமிழகம் சந்திக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது
கோடை விடுமுறை என்பதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். இந்நிலையில், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைக்க பணிமனை ஊழியர்களை கொண்டு அரசு பேருந்து இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.




