கஜா…வுக்கா ஓய்வின்றி மஜா..வாக பணியாற்றிய வானிலை ஆய்வு மைய இயக்குனருக்கு குவியும் பாராட்டு!

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் சென்னை பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
balachandran - 2026

2 நாட்களாக உறக்கமின்றி பணியாற்றிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரனுக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தை அச்சுறுத்திய ‘கஜா’ புயல் வியாழன் நள்ளிரவு தொடங்கி வெள்ளிக்கிழமை அதிகாலை  கரையை கடக்கத் தொடங்கியது. சுமார் 4 மணி அளவில் புயலின் கண் பகுதி வேதாரண்யம் அருகே அதிராம்பட்டினத்தில் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசியது. அதைத் தொடர்ந்து காலை 6 மணி அளவில் புயல் முழுமையாக கரையைக் கடந்தது.

இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஒரு வாரமாக விடுப்பில் இருந்தார். கஜா  புயல் தீவிரமடைந்ததால் தனது உடல்நிலையையும் பொருட்படுத்தாமல், விடுப்பை ரத்து செய்துவிட்டு உடனடியாக பணிக்கு திரும்பிய அவர், இரவு பகலாக கஜா புயலின் நகர்வை தொடர்ந்து கண்காணித்து வந்தார்.

புயல் நகர்வை பல்வேறு அரசுத் துறைகளுக்கும், பொதுமக்களுக்கும்  தொடர்ந்து தெரிவித்து வந்த அவர், இப்பணியில் இரு நாட்களாக ஓய்வு உறக்கமின்றி ஈடுபட்டார். இதில் அவரது குழுவினரும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்தனர்.

இந்தக் குழு மாநில பேரிடர் கட்டுப்பாட்டு அறைக்கு வானிலை நிலவரங்களை உடனுக்குடன்வழங்கி, மீட்பு நடவடிக்கைகளுக்கு சிறப்பான ஒத்துழைப்பை வழங்கியது. குறிப்பாக வியாழன் மாலை முதல் வெள்ளி காலை வரை ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை புயல் கரையைக் கடக்கும் நிகழ்வை அனைவருக்கும் புரியும் வகையில் பாலசந்திரன் தெரிவித்து வந்தார்.

தற்போது புயல் கரையைக் கடந்த நிலையில், அரசுத்துறை அதிகாரிகளும் பொதுமக்களும் இயக்குநர் பாலசந்திரனுக்கும் அவரது குழுவினருக்கும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்தப் பாராட்டுகள் குறித்து எஸ்.பாலசந்திரன் பதிலளித்த போது, “மக்களுக்கு உதவுவதற்காகக் கிடைத்த வாய்ப்பு. இதை நினைத்து பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறோம். உறக்கமின்றி உழைப்பதை எங்கள் குழு சிரமமாக நினைக்கவில்லை. அது எங்கள் கடமை” என்று கூறியுள்ளார். சமூக வலைத்தளங்களிலும் மீம்ஸ்கள் இப்போது அவரைப் பாராட்டி அதிகம் வலம் வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.