தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு மக்கள்தொகை அடிப்படையில் வார்டுகள் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளன. இதை அடுத்து உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் மும்முரம் அடைந்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் தேதி ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் கடந்த 2016 அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. இதை அடுத்து உள்ளாட்சித் தேர்தலை நடத்த அறிவிப்பு வெளியானது. ஆனால், உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை எனக் கூறி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. இதை அடுத்து, உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கான பதவிக்காலம் முடிவடைந்து 5 முறை கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு பட்டியலை தமிழக அரசு வெளியிட்டு அரசாணை பிறப்பித்துள்ளது. அதில், பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும் பெண்களில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு மக்கள்தொகை அடிப்படையில் வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும், இடஒதுக்கீடானது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் ஆண்களுக்கு 95 வார்டுகளும், பெண்களுக்கு 105 வார்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.




