சமூக வலைத்தளங்களில் நேசமணி போன்ற தேவையில்லாத பதிவுகளை எல்லாம் வளர்த்தார்கள். தற்போது காந்தி படத்தை ரூபாய் நோட்டுகளில் இருந்து நீக்க வேண்டும், சிலைகளை அகற்ற வேண்டும் என்றெல்லாம் பதிவுகள் .
இது போன்ற கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் மக்களிடம் பதற்றத்தை உருவாக்குகிறது. இத்தகைய கருத்துகள் விளையாட்டுத்தனமான காரியம் அல்ல. தவறாகவும், கேளிக்கையாகவும் ஆக்கப்பூர்வமற்ற முறையிலும் சமூக வலைத்தளங்கள் செல்வது நியாயமா? இது சரியான அணுகுமுறைதானா என்பதை சிந்திக்க வேண்டும். சமூக வலைத்தளங்கள் என்பது இன்றைய காலத்தில் ஒரு ஊடகத்தைவிடவும் அதிவிரைவில் மக்களை சென்றடைகிறது.
சில துறைகளில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை எல்லாம் சமூக வலைத்தளங்களில் வெளியிடுகின்றனர். இத்தகைய நிலையில் இதன் நம்பகத்தன்மையும், கருத்துச் சுதந்திரத்தையும் சிலர் தவறாக பயன்படுத்திவருவதுஅதிர்ச்சியளிக்கிறது.
சில பிரச்சனைகள், தளத்தில் உண்மையாகவும், நேர்மையாகவும், இதயப்பூர்வமாகவும் விவாதிக்கவும், அந்த விவாதத்தின் மூலம் தீர்வுகள் எட்டப்பட வேண்டும் . அதைவிடுத்து, வெட்டியாக நேரத்தை வீணடித்து இதுபோன்ற சர்ச்சைக்குரிய பதிவுகளை இட்டு, திசைதிருப்புவதையும், பயனற்ற, உண்மையற்ற, கற்பனையான விடயங்களை பேசி விபரீதமாக்காமல் மக்கள்நல பிரச்சனைகளை பேசுவதும் விவாதிப்பதும் நல்லது.
நான் எப்போதும் குறிப்பிடுவது போல, “Issues are non-issues here. Non-issues are Issues here.” அதாவது ‘’பிரச்சனைகளை பிரச்சனைகளாக கவனிக்காமல், பிரச்சனை யில்லாதவற்றை பிரச்சனையாக பாவிப்பது தான்’’ இன்றைய யதார்த்த நிலை. இதுபோன்ற பதிவுகள் தேவைதானா?
ஒரு படித்த அதிகாரி தேசமே போற்றும் ஒரு தலைவரான காந்தியை குறித்து ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை இட்டுவிட்டு, கண்டனங்கள் எழுந்தபிறகு நான் வேடிக்கையாக போட்டேன் என்று சொல்வதெல்லாம் அவர் தகுதிக்கும், வகிக்கும் பொறுப்புக்கும் உகந்ததல்ல. உண்மையாக தீர்க்கப்படவேண்டிய பிரச்சனைகளை விடுத்து போகாது ஊருக்கு வழி தேடி என்ன பயன்?
– கே.எஸ்.இராதாகிருஷ்ணன் (செய்தி தொடர்பாளர், திமுக.,)



