அஸாமில் இருந்து 13 பேருடன் புறப்பட்டுச் சென்ற இந்திய விமானப்படை விமானம் நடுவழியில் மாயமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஏ.என்-32 விமானப்படை விமானம், அசாமின் ஜோர்காட்டிலிருந்து மதியம் சரியாக 12.25 மணியளவில் புறப்பட்டுச் சென்றது. இந்த விமானத்தில் ஐந்து பயணிகளும், எட்டு பணியாளர்களும் பயணம் செய்துள்ளனர்.
அருணாச்சல பிரதேசம், மெஞ்சுகா பகுதியில் தரையிறங்க வேண்டிய இந்த விமானம் ரேடார் இணைப்பில் இருந்து திடீரென்று மாயமாகியுள்ளது. மதியம் 1 மணியில் இருந்தே விமானத்தின் தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
இதை அடுத்து, விமானப்படை விமானங்கள், இந்த ஏ.என் – 32 விமானத்தை தேடும் பணியில் இறங்கின. இந்திய விமானப்படையின் சுகோய் 30, சி 130 ஆகிய விமானங்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன.
இதனிடையே, மாயமான இந்திய விமானப் படை ஏ.என்-32 ரக விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தின் மேற்கு சியாங் மாவட்டத்தின் டாடோ என்ற இடத்தில் விமான பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டர்களின் தேடும் பணியின் போது விமானம் விபத்தில் சிக்கி நொறுங்கி இருப்பது தெரியவந்துள்ளது. இந்த விமானம் இயந்திரக் கோளாறால் விழுந்து நொறுங்கி இருக்கலாம் என்று கருதப்பட்டது. இதில் பயணம் செய்த 13 பேர் கதி என்ன என்று தெரியவில்லை!



