அம்பேத்கர் பெயர் உள்ள வரை இட ஒதுக்கீடு தொடரும்: மோடி உறுதி

சற்றுமுன்

கோவை:

இந்தியர்கள் இதயத்தில் அம்பேத்கர் பெயர் உள்ள வரை தலித்துகளுக்கு எவராலும் அநீதி இழைக்க முடியாது என்றும், தலித்துகளுக்கான இடஒதுக்கீடு தொடரும் என்றும் கோவையில் பிரதமர் மோடி உறுதிபட கூறினார்.

கோவைக்கு செவ்வாய்க்கிழமை வருகை தந்த பிரதமர் மோடி, அங்கு இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை திறந்து வைத்த பிறகு, கொடீசியா மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.

பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதை பாஜக-வின் எச்.ராஜா மொழிபெயர்த்தார். கூட்டத்தில் மோடி பேசியதாவது:

தேநீர் விற்றவர் பிரதமர் ஆனதை சிலரால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒன்றரை ஆண்டு கால ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். 2 ஆண்டுகளுக்கு முன்பாக நாடு என்ன நிலையில் இருந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

ஏழைத்தாயின் மகன் நாட்டின் பிரதமராக நிர்வாகத்தை நடத்துவதை சிலரால் ஏற்க முடியவில்லை. அதனால் ஆட்சிக்கு தொடர்ந்து இடையூறு செய்கின்றனர். ஏழை மக்களுக்கு எதிராக இருக்கும் 1800 சட்டங்களில் 700 பழைய சட்டங்களைத் தூக்கி எறிய காங்கிரஸ் எதிர்ப்பு காட்டுகிறது.

மாநிலங்களவையில் பாஜக-வுக்கு பலம் இல்லாததை வைத்து அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை போடுகின்றனர்.

இதில் விவசாயிகளுக்குச் சாதகமான சட்ட மசோதாக்கள் மீதும் இவர்களது எதிர்ப்பு பாய்ந்துள்ளது. விவசாயிகளுக்காக ஒவ்வொரு நாளும் புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறோம். நான் பதவியேற்றதும் மாநிலங்களில் யூரியா தட்டுப்பாடு நிலவியதாக பல்வேறு மாநில முதல்வர்கள் எனக்கு கடிதம் எழுதினர்.

ஆனால் 2015-ல் இத்தகைய நிலை இல்லை, யூரியாவை போதுமான அளவுக்கு உற்பத்தி செய்தோம். மேலும் கள்ளச்சந்தை யூரியா விற்பனையும் தடுக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி விவகாரங்களில் மாற்றம் கொண்டு வந்ததால் கரும்பு விவசாயிகளும் பயன்பெற்றுள்ளனர். கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை இருப்பதாக புகார்கள் வந்துள்ளதா? 60 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு கிடைக்காத பல நல்ல திட்டங்களை நாங்கள் இந்த குறுகிய ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தியிருக்கிறோம்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் ஊழல்களினால் நாட்டில் இளைஞர்கள் நம்பிக்கை இழந்து இருந்த போது பாஜக ஆட்சி புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. இந்த ஒன்றரை ஆண்டுகால ஆட்சியில் பாஜக மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை. இதுதான் எதிர்க்கட்சியினரின் தூக்கத்தை கெடுத்துள்ளது, நாடாளுமன்றத்தை முடக்குவதன் மூலம் தங்கள் கோபத்தை அவர்கள் காட்டி வருகின்றனர்.

எதிர்க்கட்சியினர் எனது அரசுக்கு எதிராக தலித் சமுதாயத்தினரை தூண்டி விடுகின்றனர். ஆனால் உண்மையென்னவெனில் தலித்துகள், ஏழைகள் முன்னேற்றத்துக்காகவே எனது அரசு பாடுபட்டு வருகிறது.

இந்திய மக்களின் இதயத்தில் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் உள்ள வரையில் தலித்துகளுக்கு ஒருவரும் அநீதி இழைக்க முடியாது. தலித்துகளுக்கான இட ஒதுக்கீடு தொடரும்.

ஒரு நாடு முன்னேற ஒருமைப்பாடு அவசியம். நமது நாட்டில் 65 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் 35 வயதினர். இது இளமையான நாடு. மேக் இன் இந்தியா திட்டம் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது. இந்த ஓராண்டில் அன்னிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளது. மேலும், அரசுப்பணிகளில் சேர லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியமில்லா ஒரு சூழ்நிலையை அரசு ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுதும் பொருளாதார வளர்ச்சி குறித்து பேசும் போது, பொதுத்துறை தனியா துறை வளர்ச்சியையே மையப்படுத்துக்கின்றன, நான் தனிமனித வளர்ச்சியைப் பார்க்கிறேன். தன்மனிதனின் பொருளாதார வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சியாகும். இதற்காகத்தான் முத்ரா யோஜனா திட்டத்தைக் கொண்டுவந்தோம். சிறுதொழில் செய்வோருக்கு நிதியுதவி அளிக்கும் இத்திட்டத்தினால் இதுவரை 2 கோடி பேர் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின் மூலம் ரூ.95,000 கோடி விநியோகிக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்களுக்காக இரவு பகல் பாராமல் உழைக்கத் தயாராக இருக்கிறேன். நாம் நம் நாட்டை ஒளிரும் பாதையில் அழைத்துச் செல்வோம்.

இவ்வாறு பேசினார் நரேந்திர மோடி.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.