கேஜ்ரிவால், ராகுல் உள்பட 9 பேர் மீது தேச விரோத வழக்குப் பதிவு

இந்தியா

ஹைதராபாத்:

தேசவிரோத வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமாருக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட 9 பேருக்கு எதிராக தெலங்கானா மாநில போலீஸார் தேசவிரோத வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.

வழக்குரைஞர் ஜனார்தன் கெளட் தாக்கல் செய்த மனுவில், “ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் மீது, தில்லி போலீஸார் தேசவிரோத வழக்கைப் பதிவு செய்துள்ளனர். இதனை அரவிந்த் கேஜரிவால், ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் நன்கு அறிந்திருந்தும், அவர்கள் ஜேஎன்யு வளாகத்துக்குள் சென்று போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவர்களுக்கு ஆதரவளித்துள்ளனர். அவர்களது இந்தச் செயலும் தேசவிரோதமானதாகும்’ என்று தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக, ஹைதராபாதின் புறநகர்ப் பகுதியான சரூர்நகர் காவல் நிலைய வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது:

ஜேஎன்யு விவகாரம் தொடர்பாக, வழக்குரைஞர் ஜனார்தன் கெளட் என்பவர், ஹைதராபாத் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை வழக்கு ஒன்றைத் தொடுத்தார். அந்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர்களான ஆனந்த் சர்மா, அஜய் மாக்கன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் மீது சனிக்கிழமை, தேசவிரோத வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா, ஐக்கிய ஜனதா தள கட்சியின் செய்தித் தொடர்பாளர் கே.சி.தியாகி, ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார், அந்தப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் உமர் காலித் ஆகியோருக்கு எதிராகவும் தேசவிரோத வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் 4-ஆம் தேதி (மார்ச் 4) மீண்டும் விசாரணைக்கு வருகிறது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.