அரசின் ரூ.2 ஆயிரம் உதவித் தொகை: தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

சற்றுமுன் சென்னை பொது தகவல்கள்

02 June14 high court - 2026

வறுமைக்கோட்டுக்குக் கீழ் வசிக்கும் ஏழைத் தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் சிறப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்துக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

முன்னதாக, இந்தத் திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி விழுப்புரத்தைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

முதலில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிப்பவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று கூறிய அரசு, தேர்தல் ஆதாயத்திற்காக தற்போது ஏழைகளாக கருதப்படுபவர்களின் விவரங்களையும் சேகரிக்கும் வகையில் படிவங்களை விநியோகித்து வருகிறது என்று மனுதாரர் குறிப்பிட்டதற்கு பதிலளிக்குமாறு நீதிபதி கோரினார்.

இதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அரசாணை போலி எனவும், இதனை மனுதாரர் எங்கிருந்து பெற்றார் என்பதை அவருக்கு சம்மன் அனுப்பி விசாரித்தறிய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். மேலும், தற்போது விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டு வரும் நிலையில், யார் யாருக்கு உதவித்தொகை வழங்குவது என பின்னர்தான் முடிவு செய்யப்படும் என்று கூறினார்.

இதை அடுத்து மனுதாரர் குறிப்பிட்ட அரசாணை எவரிடம் இருந்து பெறப்பட்டது என்பது குறித்து விளக்கமனு தாக்கல் செய்ய வேண்டும் என்று மனுதாரருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிப்பவர்கள் மற்றும் ஏழைகளாகக் கருதப்படுபவர்கள் யார் என்பது குறித்த விவரங்களையும் தாக்கல் செய்யுமாறு அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டனர். அதன்படி வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்பவர்கள் மற்றும் ஏழைகள் குறித்த விவரங்கள் அடங்கிய அரசாணை தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், அரசாணையில் திருத்தம் செய்தது தொடர்பாக அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கருணாநிதி தரப்பில் நேற்று முறையீடு செய்யப்பட்டிருந்தது. அதனை தனியாக மனுத்தாக்கல் செய்தால் விசாரிப்பதாக நீதிபதிகள் கூறியிருந்தனர். மேலும், ரூ 2 ஆயிரம் வழங்க தடை கோரிய வழக்கின் விசாரணை முடிந்து வியாழக்கிழமை தீர்ப்பு அளிக்கப்படும் என்றனர்.

அதன்படி, இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், 2000 ரூபாய் சிறப்பு நிதி உதவி வழங்க தடையில்லை என்றும், சிறப்பு நிதி உதவி வழங்குவதற்காக 60 லட்சம் ஏழைக் குடும்பங்களைக் கண்டறிய சரியான நடைமுறை பின்பற்றப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்தனர். எனவே, இந்தத் திட்டத்துக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்வதாக உத்தரவு பிறப்பித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.