அரக்கோணத்தில் முன்னாள் அமைச்சர் வேலு உள்பட பாமகவினர் 50 பேர் மீது வழக்குப் பதிவு!

சற்றுமுன் சென்னை தமிழகம்

vote1 - 2026

அரக்கோணத்தில் ரயில்வேத் துறை முன்னாள் இணை அமைச்சர் வேலு, முன்னாள் எம்.எல்.ஏ., உள்பட பாமகவினர் 50 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் கீழ்விஷாரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு அமைதியாக நடைபெற்று வந்த நிலையில், மாலை 5 மணி அளவில் அங்கு வந்தனர் பாமக., முன்னாள் மத்திய அமைச்சர் வேலு, முன்னாள் எம்.எல்.ஏ. இளவழகன் ஆகியோர்! அவர்கள், தாங்கல் வாக்குச்சாவடியை ஆய்வு செய்வதற்காக வந்ததாகக் கூறியுள்ளனர். அப்போது பாதுகாப்பில் இருந்த போலீசார், இங்கே கூட்டமாகச் செல்ல அனுமதி இல்லை எனக் கூறி தடுத்துள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாமக.,வினர் வாக்குச்சாவடி முன்னர் பெருமளவில் திரண்டனர். கூட்டத்தைக் கலைந்து செல்லும்படி போலீசார் எச்சரித்தனர். ஆனால் எவரும் கலைந்து செல்லவில்லை. இதை அடுத்து போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை செய்தனர். திடீரெனக் கேட்ட துப்பாக்கிச் சூடு சத்தத்தால் அங்கே வாக்களிக்க வரிசையில் நின்றிருந்த வாக்காளர்கள் அலறியடித்து ஓடினர்.
இந்த நிலையில், போலீசார் மீண்டும் கட்சி நிர்வாகிகளை சமாதானம் செய்தனர். இதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.இருப்பினும், துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டதால், வாக்குப் பதிவு நிறுத்தப் பட்டது. மீண்டும் வாக்குப்பதிவு துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. எனவே அந்த வாக்குச்சாவடியில் மட்டும் கூடுதலாக ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் விதிகளை மீறி அதிக எண்ணிக்கையில் கூடியதாக, பாமக., முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சர் வேலு, முன்னாள் எம்.எல்.ஏ., இளவழகன், பத்மநாபன் உள்ளிட்ட 50 பேர் மீது, 7 பிரிவுகளில் ஆற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேர்தல் விதிமுறைகளுக்கு முரணாக, 100 மீட்டர் தொலைவுக்குள் கட்சி அடையாளத்துடன் வந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.