டிக்-டாக் தடை… மீண்டும் விசாரியுங்க! உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

இந்தியா உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் தொழில்நுட்பம் லைஃப் ஸ்டைல்

tiktok - 2026

புது தில்லி: ‘டிக் டாக்’ செயலிக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை விதித்த தடையை நீக்க மறுத்துவிட்ட உச்ச நீதிமன்றம், ஏப்ரல் 24 ஆம் தேதி இந்த வழக்கை விசாரிக்குமாறு உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துகுமார் டிக்-டாக் செயலி ஆபாசம், கலாசார சீரழிவு, குழந்தைகளை தவறாக பயன்படுத்துதல், தற்கொலையை ஊக்குவித்தல் என பல தீமைகளைக் கொண்டிருப்பதால், இதைத் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதை ஏற்ற உயர் நீதிமன்றம் சீன வீடியோ ஆப் டிக்டாக், ஆபாசத்தை ஊக்குவிக்கிறது என்று கூறி அதை தடை செய்ய அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், டிக் டாக் பதிவிறக்கத்தை தடை செய்யுமாறும் கூறியிருந்தது.

டிக்டாக் ஆப் இந்தியாவில் 54 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டது. இந்நிலையில், டிக்டாக் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப் பட்ட பதிலில், “நாங்கள் தகவல் தொழில்நுட்ப விதிகள், 2011ஐ முழுமையாகக் கடைப்பிடித்து வருகிறோம். சட்ட அமலாக்கம் மூலம் சிறந்த ஒருங்கிணைப்பைப் பெற இந்தியா சார்பாக தலைமை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்” என்று அறிக்கை அளித்தது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அண்மையில் ‘டாக்-டாக்’ செயலிக்கு தடை விதித்தது. மேலும், இந்த செயலியை பதிவிறக்கம் செய்வதை தடை செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இதை அடுத்து, இந்தத் தடையை நீக்குமாறு சீன நிறுவனமான ‘டிக்-டாக்’ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் ‘டிக் டாக்’ செயலிக்கு உயர் நீதிமன்ற கிளை விதித்த தடையை நீக்க மறுத்தது உச்ச நீதிமன்றம்!

மேலும், இந்த வழக்கை ஏப்ரல் 22 ஆம் தேதி விசாரிப்பதாக முன்னதாக உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

இந்நிலையில், மீண்டும் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இன்று டிக் டாக் மீதான தடையை நீக்க மறுத்த உச்ச நீதிமன்றம், டிக் டாக் நிறுவனம் தொடர்ந்த வழக்கை வரும் ஏப். 24ஆம் தேதி விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும். ஒருவேளை புதனன்று தீர்ப்பு வழங்கா விட்டால், டிக் டாக் செயலி மீதான தடை தானாகவே விலகிவிடும் என்று உத்தரவிட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.