நான் ராஜினாமா செய்துட்டேன்… அப்ப நீங்க?! 17 மாநிலத் தலைவர்களுக்கு ராகுல் கிடுக்கிப் பிடி!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

04 July26 Rahul Gandhi - 2026

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெற்ற தோல்விக்கு பொறுப்பேற்று, தாம் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாகக் கூறியுள்ள ராகுல் காந்தி, அதே போன்று தமது கட்சியின் மற்ற 17 மாநிலத் தலைவர்களும்  ராஜினாமா செய்ய வேண்டும் என்று நெருக்கடி கொடுத்து வருகிறார்.

காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டேன் என்று கூறியுள்ள ராகுல் காந்தி, ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைமையிடம் கொடுத்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

ராஜினாமா கடிதம் கொடுத்து விட்டதால் இனி நான் தலைவராக நீடிக்க முடியாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் தகவல் வெளியிட்டுள்ளார்! இனியும் தாமதிக்காமல் காங்கிரஸ் கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறியுள்ள ராகுல் காந்தி தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவில் தாம் உறுதியாக இருப்பதாக கூறியுள்ளார்

அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று 17 மாநிலங்களில் கட்சித் தலைவர்கள் பதவி விலகாத நிலையில் ராகுல் காந்தி தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்!

மாநிலங்களில் கட்சியை சீரமைக்கும் வேலை இருப்பதாகவும் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று அவர் பதவி விலகி இருக்க வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்!

நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார் ராகுல் காந்தி. அப்போது அவர், காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ஏற்கெனவே நான் கடிதம் அளித்து விட்டேன். எனவே தற்போது காங்கிரஸ் தலைவர் பதவியில் நான் இல்லை! புதிய தலைவரை தேர்வு செய்வதற்கு உடனடியாக காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

2017 ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்த ராகுல், மக்களவை தேர்தலில் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகுவதாக கடந்த மே மாதம் 25 ஆம் தேதி காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் அறிவித்தார். ஆனால் அவரது ராஜினாமா கடிதத்தை செயற்குழு நிராகரித்தது.

மேலும், மற்ற மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் ராகுலை நேரில் சந்தித்து காங்கிரஸ் தலைவர் பதவியில் தொடருமாறு வலியுறுத்தினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.