பயணி தவறவிட்ட 15 சவரன் நகையை ‘பொறுப்பாக’ போலீஸில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவருக்கு பாராட்டு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

auto driver praised by commissioner - 2026

ஆட்டோவில் பயணி தவறவிட்ட 15 சவரன் தங்க நகைகள் அடங்கிய கைப்பையை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

சென்னை, பொன்னியம்மன்மேடு, சந்திரபிரபு காலனியில் வசிக்கும் விநோத் என்பவரின் மனைவி நர்மதா (வயது 31) கடந்த ஜூலை 8ம் தேதி காலை, கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தனது வீட்டிற்கு ஆட்டோவில் வரும்போது தனது கைப்பையை ஆட்டோவில் தவறவிட்டு வந்துவிட்டார்.

அந்தக் கைப்பையில் 15 சவரன் தங்க நகை, செல்போன், பான் கார்டு, ஆதார் கார்டு மற்றும் பணம் ரூ.500/- வைத்திருந்தார். இது குறித்து M -1 மாதவரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்நிலையில், நர்மதா கைப்பையை தவறவிட்ட ஆட்டோவின் (பதிவு எண். TN12 A 6152) ஓட்டுநர் R.முருகேசன் (வயது 41 – முத்து குமரன் தெரு, காமராஜர் நகர், ஆவடி) ஆட்டோவின் பின் இருக்கையின் பின்பகுதியில் கைப்பை இருந்ததைப் பார்த்து அந்த கைப்பையிலிருந்த ஆதார் கார்டை வைத்து மேற்படி கைப்பையை M -1 மாதவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

தங்க நகை மற்றும் ஆவணங்கள் அடங்கிய கைப்பையை நேர்மையான முறையில் காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் R.முருகேசனை சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் அழைத்து வெகுமதி அளித்து பாராட்டினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.