முன்னாள் மேயர் உள்பட 3 பேரை கொன்ற கார்த்திகேயன் நடிப்பு; அசந்து போன போலீசார்..!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் தமிழகம் நெல்லை

nellai murder1 - 2026நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயர் உமா மகேசுவரி உள்பட 3 பேரை கொலை செய்தது எப்படி? என்பதை கைதான கார்த்திகேயன் நடித்து காட்டினார். அவரது செயலைக் கண்டு போலீஸார் அசந்து போயினர்.

நெல்லை மாநகராட்சி முன்னாள் பெண் மேயர் உமாமகேசுவரி, பாளையங்கோட்டை அரசு என்ஜினீயரிங் கல்லூரி எதிரே ரோஸ் நகரில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது கடந்த 23-ஆம் தேதி கொடூரமாக முறையில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். அவருடைய கணவர் முருகசங்கரன் மற்றும் பணிப்பெண் மாரி ஆகியோரும் கத்தியல் குத்தப்பட்டு கொலை செய்யப் பட்டுக்கிடந்தனர்.

இந்தக் கொலைகள் தொடர்பாக மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். கொலையாளி குறித்து துப்பு துலக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அதனைத் தொடா்ந்து தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் முன்னாள் மேயர் உமாமகேசுவரிக்கும், மதுரையில் உள்ள தி.மு.க. பெண் பிரமுகர் சீனியம்மாளுக்கும் இடையே அரசியல் ரீதியாக முன்விரோதம் இருந்தது தெரியவந்தது.

இதை அடுத்து, சீனியம்மாளின் மகன் கார்த்திகேயனை போலீஸார் தீவிரமாக கண்காணித்தனர். அவருக்கும் இந்தக் கொலைக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப் பட்டது.

NELLAI UMA 1 - 2026உமாமகேஸ்வரியின் வீடு அருகே உள்ள ஹோட்டலில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார், அதில் சம்பவத்தன்று சீனியம்மாளின் மகன் கார்த்திகேயனின் கார் அந்த பகுதியில் 2 முறை சென்றுவந்ததை அறிந்தனர்.

தொடர்ந்து, உமாமகேஸ்வரியின் வீட்டின் அருகே இருந்த செல்போன் கோபுரங்களில் பதிவான செல்போன் எண்களை சேகரித்து அதன் உரையாடல்களும் ஆய்வு செய்யப்பட்டன. அதில் சீனியம்மாள் மகன் கார்த்திகேயனின் செல்போன் எண் அடிக்கடி அதில் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.

இதை அடுத்து மதுரையில் பதுங்கி இருந்த கார்த்திகேயனை தனிப்படை போலீசார்  விரைந்து சென்று சுற்றிவளைத்துப் பிடித்து, விசாரணை மேற்கொண்டனர். அதில், தம் தாய் சீனியம்மாளின் அரசியல் வாழ்க்கையை பாழாக்கிய ஆத்திரத்தில் உமாமகேஸ்வரியையும், அவருடைய கணவர் முருகசங்கரன் மற்றும் பணிப்பெண் மாரியையும் கொலை செய்துவிட்டு நகை-பணத்தை எடுத்துக்கொண்டு வந்துவிட்டதாக போலீசாரிடம் அவர் தெரிவித்தார்.

nellai mayor murder case - 2026இதை அடுத்து கார்த்திக்கேயனை போலீசார் கைது செய்தனர்.  தொடர்ந்து போலீசார், நெல்லையில் உள்ள உமாமகேஸ்வரியின் வீட்டிற்கு நேற்று கார்த்திகேயனை அழைத்து வந்தனர். அங்கு அவர், உமா மகேஸ்வரி, முருகசங்கரன் மற்றும் மாரியை எப்படி கொலை செய்தார்? என்று நடித்துக் காட்டினார்.

தாம் நகைகளை திருடியதையும், பீரோவில் இருந்த பொருட்களை சிதறிப் போட்டுவிட்டு, தடயங்களை அழித்ததையும் செய்து காட்டினார். அதை போலீசார் வீடியோவில் பதிவு செய்து கொண்டனர்.

தொடர்ந்து பாளையங்கோட்டை அழைத்துச் செல்லப்பட்ட அவரிடம் மாநகர காவல் ஆணையர் பாஸ்கரன் விசாரணை நடத்தினார்.

இந்நிலையில் நெல்லை மூவர் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக அரசு நேற்று முன்தினம் உத்தரவிட்டது. அதன்படி, சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார், இன்ஸ்பெக்டர் பிறைச்சந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று நெல்லை வந்து தங்கள் விசாரணையை தொடங்கினர்.

உமாமகேஸ்வரியின் வீட்டிற்கு நேரில் சென்று ஒவ்வொரு அறைகளாக பார்வையிட்டு அங்கிருந்த தடயங்களை ஆய்வு செய்தனர். சுமார் 40 நிமிட ஆய்வுக்குப் பின்னர் இந்தக் கொலை குறித்து உறவினர்களிடமும், நெல்லை மாநகர போலீசாரிடமும் விசாரணை நடத்தினர். மேலும், இந்தக் கொலைகள் தொடர்பாக கார்த்திகேயனின் தாயார் சீனியம்மாளிடமும் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்தனர்.

தி.மு.க. பிரமுகர்கள் வேறு யாருக்காவது இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளதா? அல்லது வேறு யாராவது இந்த கொலைக்கு உடந்தையாக இருந்தார்களா? என்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.