ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ஹோட்டல் பில் பரிவர்த்தனை: `பான்’ எண் கட்டாயம் இன்று முதல் அமல்

புது தில்லி:

கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக, ரூ. 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஹோட்டல் பில்களுக்கு நிரந்தர கணக்கு என் (பான்) கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தப் புது உத்தரவு ஜனவரி 1 இன்று முதல் அமலுக்கு வருகிறது.

பான் எண் பல்வேறு நிலைகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரூ. 2 லட்சத்துக்கு மேற்பட்ட மதிப்பிலான தங்க நகைகளை வாங்குவோர் கட்டாயம் பான் எண் குறித்த விவரங்களை அளிக்க வேண்டும். கடன் அட்டை மூலம் இத்தொகை செலுத்தப்பட்டாலும் கட்டாயம் பான் எண் விவரம் அளிக்க வேண்டும். அதேபோல ரூ. 10 லட்சத்துக்கு மேற்பட்ட அசையா சொத்துகளை பரிவர்த்தனை செய்தாலும் பான் எண் அவசியம். சிறிய அளவில் முதலீடு செய்து வீடு வாங்குவோருக்கு இது ஓரளவு ஆறுதல் அளிக்கும் விஷயமாகும். முன்னர் இந்த வரம்பு ரூ. 5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

குறித்த கால வரையறையுடன் கூடிய சேமிப்புத் திட்டங்களில் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 5 லட்சம் வரை முதலீடு செய்வோர் கட்டாயம் பான் எண் விவரத்தை தாக்கல் செய்ய வேண்டும். வங்கிகள், தபால் அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் இல்லாத பிற நிதி நிறுவனங்களில் (என்பிஎப்சி) முதலீடு செய்வோரும் பான் விவரத்தை அளிக்க வேண்டும்.

ரூ. 50 ஆயிரம் வரையிலான தொகையைச் செலுத்தி கேஷ் கார்டு மற்றும் முன்கூட்டி பணம் செலுத்தி பெறும் பிற வசதிகளைப் பயன்படுத்துவோரும், பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாத ரூ.1 லட்சத்துக்கு மேலாக பங்குச் சந்தையில் முதலீடு செய்வோர் பான் விவரத்தை அளிக்க வேண்டும் என நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அனைத்து வங்கிக் கணக்குகளுக்கும் பான் அவசியம் அளிக்க வேண்டும். பிரதம மந்திரியின் ஜன் தன் யோஜனா திட்டத்துக்கு மட்டும் இது அவசியம் இல்லை. அண்மையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, ரூ.2 லட்சத்துக்கு மேலான அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் அதாவது ரொக்கமாகவோ அல்லது கடன் அட்டை மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்டால் பான் அட்டை விவரம் கட்டாயம் அளிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

2015-16-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் வரம்பு ரூ.1 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது இது இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் நிர்ணயிக்கப்பட்ட வரம்பான ரூ. 5 லட்சத்தைவிட இது குறைவுதான். வங்கிகளில் ரொக்கமாக ரூ. 50 ஆயிரம் செலுத்துவது, காசோலை மற்றும் வரைவோலை பெற ஒரே நாளில் ரூ.50 ஆயிரமோ அதற்கு மேலோ செலுத்துபவர்கள் பான் அட்டை விவரத்தை அளிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.