தமிழ் மலையாளம் தெலுங்கு இந்தி படங்களில் பிரபல நடிகராகவும் திரைப்பட இயக்குனர் தயாரிப்பாளராக வலம் வந்த பிரதாப் போத்தன்(70) வயதுமூப்பு காரணமாக காலமானார். கீழ்ப்பாக்கத்தில் வசித்து வந்த பிரதாப் போத்தன் தூக்கத்திலேயே இறந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பிரதாப் போத்தன் என்றால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சற்றென்று நினைவுக்கு வருவது ‛மூடு பனி’ படத்தில் இரவு வேளையில் கிட்டாரை வைத்துக் கொண்டு அவர் பாடும் “என் இனிய பொன் நிலாவே…” பாடல் தான். இந்த படத்தில் சைக்கோ தனமான வேடத்தில் அவர் நடித்து அனைவரையும் கவர்ந்தார். ‛‛அழியாத கோலங்கள், மூடுபனி, ஆயிரத்தில் ஒருவன், அலெக்ஸ் பாண்டியன், பூஜை” உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் மீண்டும் ஒரு காதல் கதை, ஜீவா, வெற்றிவிழா, சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட 12 படங்களை இயக்கி உள்ளார். ஓரிரு படங்களை தயாரித்தும் உள்ளார். ஹீரோ, வில்லன், காமெடி என நடிப்பில் பன்முக பரிமாணத்தை காட்டியவர் பிரதாப் போத்தன்.
1985ம் ஆண்டு சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருது மீண்டும் ஒரு காதல் கதை திரைப்படத்திற்காக இவருக்கு வழங்கப்பட்டது.
கேரள மாநில அரசின் விருது, பிலிம்பேர், சைமா போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார் பிரதாப்.பிரதாப் போத்தன் மறைவுக்கு திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அலட்டல் இல்லாத அற்புதமான நடிகர் பிரதாப் போத்தன். தமிழ் சினிமாவில் ஜீன்ஸ் பேண்டை முதலில் அறிமுகப் படுத்தியவர். இவர் நடித்த அழியாத கோலங்கள், நெஞ்சத்தை கிள்ளாதே போன்ற படங்கள் காலத்தால் அழியாதவை. இப்படி பல சிறப்புக்களை சொல்லி கொண்டு போகலாம்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் பிரதாப் போத்தன். வறுமையின் நிறம் சிவப்பு, நெஞ்சத்தை கிள்ளாதே, பன்னீர் புஷ்பங்கள், வாழ்வே மாயம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். வெற்றி விழா, மை டியர் மார்த்தாண்டன், சீவலப்பேரி பாண்டி, லக்கி மேன் உள்ளிட்ட படங்களை பிரதாப் போத்தன் இயக்கத்தில் வெளியானவையாகும்.அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்.