September 28, 2021, 12:46 pm
More

  ARTICLE - SECTIONS

  கேஜ்ரிவால் சொன்னது போல் “பயப்படும் அளவுக்கான பெரும்பான்மை”!

  dhinasari_edit தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்தத் தேர்தல் வெற்றி குறித்துப் பார்க்கும்போது, “நாங்கள் கண்டு பயப்படும் அளவிற்கு ஒரு பெரும்பான்மையை எங்களுக்கு தில்லிவாசிகள் கொடுத்துவிட்டனர்” என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியது உண்மையாகவே கருத இடம் உண்டு. ஜனநாயகம் என்பது, நம் நாட்டில் எப்படிப்பட்ட மாற்றத்தையும் கொடுக்கும் விதத்தில் அமைந்து விடுவதுண்டு. 70க்கு 67 இடங்களில் வெற்றி என்பது எதிர்க்கட்சிக்கே வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்காத கண்மூடித்தனமான முழுப் பெருப்பான்மை என்பது உண்மை. இவ்வாறு எதிர்க்கட்சியினருக்கே இடமளிக்காத பெரும்பான்மையைப் பெற்ற மாநிலங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும்படியான வளர்ச்சியைப் பெற்றதில்லை. அங்கே ஊழல்களும் முறைகேடுகளும் மலிந்திருப்பதையே பார்த்திருக்கிறோம். எதிர்க்கட்சியினரின் குரல்வளையை நெரிக்கும் ஆளும்கட்சியின் அசுர பலம், வளர்ச்சிக்கான சாத்தியத்தை அந்த மாநிலங்களுக்கு வழங்கிவிடாது. இதற்கு தமிழகமே சிறந்த உதாரணம். அதே நேரம் முன்னர் அமைந்த தில்லி அரசு போல், தொங்கு சட்டசபையாக அமைந்து, அரசே சரியாக நடத்த விடாமல் போவதும் ஜனநாயகத்தின் கேலிக்கூத்தில் ஒன்றாகிவிட்டதைக் கண்டிருக்கிறோம். “தனக்கு இவ்வளவு பெரிய வெற்றியைத் தேடித் தந்த தில்லி மக்களுக்கு நான் ஒரு உண்மையான முதலமைச்சராக இருப்பேன்” என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் தனது நன்றி அறிவிப்பில் தெரிவித்திருக்கிறார். இந்தத் தேர்தலில் வாக்களிப்புக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூட, பொய்யாகி விட்டன. ஆம் ஆத்மி கட்சிக்கு பாதிக்கும் மேற்பட்ட இடங்களைப் பெற்று பெரும்பான்மை பெறும் என்று சொன்னதையும் பொய்யாக்கி, அதற்கும் மேலாக தில்லிவாசிகள் 67 இடங்களை ஆம் ஆத்மி கட்சிக்குக் கொடுத்துள்ளனர். 70 இடங்களைக் கொண்ட தில்லியில் ஆம் ஆத்மி கட்சி 67 இடங்களையும், பா.ஜ.க 3 இடங்களையும் கைப்பற்றியிருக்கின்றன. காங்கிரஸ் கட்சி ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாத நாடாளுமன்ற வெற்றிக்குப் பின்னர், பா.ஜ.க தனது தொடர் வெற்றியை அடுத்து நடைபெற்ற மாநிலத் தேர்தல்களில் பெற்று வெற்றிக் களிப்பில் இருந்தது. இனி தங்கள் கட்சியே பெரும்பான்மை பெறும் என்ற மனோபாவத்தில் இருந்த பாஜகவுக்கு தில்லி சட்டமன்றத் தேர்தல் ஒரு பலத்த அடியைக் கொடுத்திருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம். சென்ற முறை, தேர்தலில் முதல் முறையாகத் தங்களுக்குக் கிடைத்த வெற்றியை சரியான முறையில் கையாளத் தெரியாத ஆம் ஆத்மி கட்சி, இந்த முறை சரியாகத் தக்க வைக்கும் என்று நம்பலாம். தங்கள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை இந்த முறை அக்கட்சி வீணடிக்காது என்றும் நம்ப அக்கட்சியின் கடந்த கால கசப்பு நிகழ்வுகள் காரணமாக அமையலாம். தில்லி சட்டமன்றத் தேர்தலில் சொல்லும்படியாக அமைந்த ஒரு விஷயம், ஆம் ஆத்மி கட்சியினரின் முன்கூட்டியே அமைந்த முன் தயாரிப்புதான். நாடாளுமன்றத் தேர்தலில் தாங்கள் அடைந்த தோல்விக்குப் பின்னர், தில்லி சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் வியூகங்களை வகுத்து, முன் தயாரிப்பில் இருந்தனர் ஆம் ஆத்மி கட்சியினர். பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகளுக்கு முன்பாகவே தங்களது வேட்பாளர்களை அறிவித்தனர். தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து, தங்கள் உத்தியான மக்களுடன் நேருக்கு நேர் சந்திப்பு மூலம், தில்லி வாசிகளுடனான தங்கள் உறவைப் புதுப்பித்தனர். தான் முன்னர் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டு, மக்கள் வழங்கிய வாய்ப்பினைக் கோட்டை விட்டதற்காக அழுது புலம்பி ஒரு தோற்றத்தை அரவிந்த் கேஜ்ரிவால் உண்டாக்கிக் கொண்டார். செல்லும் இடங்களில் முட்டை வீச்சும், அவதூறுப் பேச்சுமாக, அவருக்கு இருந்த தனியாள் என்ற பரிதாபத்தை மக்களிடம் மேலும் பெருகச் செய்தார். வலிமையானவனை எதிர்த்து வலுவற்றவன் முன் நிற்பதால் கிடைக்கும் அனுதாபத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்டார் கேஜ்ரிவால். அவரது இந்தச் செயல்கள் அவரை உண்மையான ‘ஆம் ஆத்மி’ ஆக்கி விட்டது. மக்கள் தங்கள் மீது வைத்திருந்த அனுதாப அலையைத் தக்க வைத்துக் கொண்டு, எளிமையானவர்கள் என்ற எண்ணத்தை உறுதிப் படுத்திய அதே வேளையில், பாஜக., மீதான ஆடம்பர எண்ணத்தையும் மக்களிடம் வெளிப்படுத்துவதில் அவர் வெற்றியும் பெற்றுவிட்டார். மோடி, தனது பெயர் வைத்து தைக்கப்பட்ட ரூ. 10 லட்சம் மதிப்புள்ள கோட் அணிந்திருந்தார் என்ற செய்தியை மக்கள் மனதில் வலுவாக்கிய அதே வேளையில், தலையைச் சுற்றி மப்ளர் அணிந்து, மற்ற சாதாரண மக்களைப் போல், தானும் ஓர் எளிய மனிதன் என்ற தோற்றத்தை வலுவாக்கி விட்டார் கேஜ்ரிவால். பாஜகவுக்கு கிரண் பேடியின் வரவு, கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை முன்னிலும் இல்லாத அளவுக்கு பெரிதாக்கி தூபம் போட வைத்துவிட்டது. தேர்தலுக்கு முன்னர் வரை எதிர் முகாமில் இருந்து விமர்சனம் செய்தவர், தேர்தலுக்காக கட்சியில் சேர்ந்து முதலமைச்சர் வேட்பாளர் என்ற அந்தஸ்தைப் பெற்றுவிடுவார் என்றால், கட்சியில் உழைத்த உண்மையான தொண்டர்களுக்கு என்ன மதிப்பு என்ற எண்ணத்தை கட்சியினர் மத்தியில் ஏற்படுத்தியிருப்பது உண்மை. என்னதான், ராஜ்நாத் சிங்கும், அமித் ஷாவும் இது மாயை, பொய் என்று எடுத்துச் சொன்னாலும், தேர்தல் முடிவுகள் இப்போது அந்த எண்ணத்தை தெளிவாக்கிக் காட்டிவிட்டன. முதல் முறை பதவி ஏற்றபோது எதற்கெடுத்தாலும் தர்ணா, போராட்டம் என்று தெருவில் இறங்கிய கேஜ்ரிவால், இந்த முறை தனக்கு எதிராக தானே போராட்டம் நடத்துவது போன்ற செயல்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு தில்லி மக்களின் நம்பிக்கையைக் காக்க வேண்டும். இன்னும் 5 வருடங்கள் உள்ளன. இந்த 5 வருடங்களும் எப்படி இருக்கப் போகிறதோ அதைப் பொறுத்துதான் அடுத்தமுறை ஆம் ஆத்மியின் தலையெழுத்தும் அமையும். நிச்சயமாக, கேஜ்ரிவால் சொன்னதைப் போல, இந்த வெற்றி ஆம் ஆத்மிக்கு மட்டுமல்ல, அனைத்துக்குக் கட்சிகளுக்குமே.. ஏன் ஜனநாயகத்துக்கே அச்சம் தரக் கூடிய வெற்றிதான் !

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,482FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-