
ஹிந்தி பிரசார சபா போல்… இவர்களால் தமிழ் பிரசார சபா அமைக்க முடிந்ததா என்று ஒரு கேள்வி எழுப்பப் பட்டிருக்கிறது- சரி நாம் இவர்கள் வழி தமிழ்லயே சொல்வோமே… தமிழ் பரப்புரை அவை 🙂 – அமைக்க முடிந்ததா?!
நாட்டின் சுதந்திரப் போராட்ட வரலாற்றைப் படித்தவர்களுக்கு ஒன்று நன்றாகப் புரியும்…! 1857 முதல் சுதந்திரப் போராட்டத்தின் பின், பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் அதிகாரத்தில் இருந்து பிரிட்டிஷ் அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இந்தியப் பகுதிகள் வந்த பிறகு, மொழி வழி, கலாசார வழி, மத வழிப் பிரிவினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டது பிரிட்டிஷ் அரசு.
அப்படித்தான், ஹிந்தி ஒரு தரப்பு, அடுத்த தரப்பு உருது, மற்ற தரப்பு ஆங்கிலம் என்று மத வழியே மொழிப் பிரிவினை வெளிப்படுத்தப்பட்டது. நாட்டில் ஹிந்துக்களை மொழி வழியே ஒருங்கிணைக்கத்தான் ஹிந்தி என்று பிரசாரம் பலமானது. உண்மையில், நாடெங்கும் உள்ள மக்களை மொழி வழியே ஒருங்கிணைக்க முன்னெடுக்கப்பட்டது இந்தி மொழி.
ஆயிரம் ஆண்டு பலமான பாரம்பரியமான இலக்கண, இலக்கியச் செழுமை என்று சொல்ல முடியாதபோதும், தேசத்தின் ஒற்றுமை உணர்வு கருதி அறுநூறு ஆண்டுகளுக்கு முந்தைய இலக்கிய மொழி இந்தியை தற்போதைய நாளில் இருந்து சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முந்தைய தேசாபிமானிகள் உரைநடை இலக்கியங்கள், கவிதைகள் படைத்து மக்களிடையே பரப்பினார்கள். அதன் முக்கிய நோக்கம் – தேசம் முழுதுமுள்ள மக்களிடையே ஒற்றுமை உணர்வை வளர்ப்பது! அப்படித்தான் பின்னாளில் மகாத்மா காந்தி ஹிந்தி பிரசார சபா நிறுவி தேசம் முழுதும் ஹிந்தி பரவலாக்கத்தை வளர்த்தார். அதேநேரம், உருது ஒருபுறம் வலிய வளர்க்கப்பட்டதும், தேசத்தில் மத வழி பிரிவினை ஏற்பட்டதும் வரலாறு.
சரி, இருக்கட்டும்! தமிழ் பிரசார சபா ஏன் தோற்றுவிக்கப்படவில்லை அல்லது வளரவில்லை!? அத்தகைய எண்ணம் இருந்திருந்தால், ஆங்கிலேயன் மத வழி மொழியான ஆங்கிலத்தை ஓஹோவெனத் தூக்கிப் பிடித்து, தமிழை தங்கத்தட்டில் வைத்த ஏதோ ஒன்றென ஒப்புமை கூறி தரம் தாழ்த்தி இன்றைய செல்வச்செழிப்புச் சீமான்களின் கோல்மால்புரக் கோமான்களின் முன்னோடிகளே செய்திருப்பார்களே! ஏன் செய்யவில்லை? அட… இண்டிய நாடு என்ற அளவில் கொண்டு செல்லாவிட்டாலும், திராவிட நாடு என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள் அல்லவா… அந்தப் பகுதிகளிலாவது தமிழை வளர்க்கவும் பிரசாரம் செய்யவும் செய்திருக்கலாமே! சுமார் அறுபதாண்டு ஆட்சிக்கட்டிலில் இருந்த திராவிட இயக்கங்களின் மாநில அரசால் செய்ய முடியாததா? ஏன் செய்யவில்லை?
பிரதமர் நரேந்திர மோடி வட மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும், தமது மேடைப் பேச்சுகளின் வாயிலாகவும், நாடாளுமன்றத்திலும், தன் தொகுதியாக காசி தமிழ்ச் சங்கம் மூலம் உ.பி. யிலும், மேற்கொள்ளப்படும் தமிழ் பிரசார உத்தியைக் கூட, செய்து வரும் செயல்களில் சிறிதளவு கூட தமிழகத்தைக் கடந்து திராவிட அரசுகளால் செய்ய முடியவில்லையே!
எனவே நம் வழி பாரதியின் வழியாகவே இருக்க வேண்டும்! வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித்திருநாடு!