
திருவள்ளுவர் தினம் என்று இன்று தமிழக அரசு சார்பில் கொண்டாடுகிறார்கள். ஆனால் உண்மையான திருவள்ளுவர் பிறந்த தினத்தை வைகாசி அனுஷம் என்று குறிப்பிட்டுள்ளதன் பேரில் வள்ளுவ அன்பர்கள் அன்று மரபாகக் கொண்டாடிக் கொள்கிறார்கள். வள்ளுவ நாயனார் என்று போற்றப்படுவதால் சைவம் அவருக்கு கோயில் எடுத்து அபிஷேக ஆராதனைகள் செய்து வைகாசி அனுஷத்தை சிறப்பாக்குகிறது. நிற்க.
பொங்கல் திருநாள் என்பது மகர சங்கராந்தி எனப்படும் சூரியனின் பாதை மாற்றத்தை குறிப்பிடும் நாளன்று செய்யப்படும் பூஜைக்குரிய திருநாள். ஆதிகாலம் தொட்டு தமிழர்கள் ஆகிய இந்துக்கள் நிலங்களையும் நிலத்துக்கென தெய்வங்களையும் மரங்கள் ஆறுகள் மலைகள் உள்ளிட்ட இயற்கையையும் தெய்வாம்சமாகப் பார்த்து வணங்கிய செய்திகள், தொல்காப்பியம் தொட்டு உண்டு. அன்று பகலவனை பகவானெனப் போற்றி வழிபடும் தொன்ம மரபு நம் முன்னோரின் மரபு. இது நாடு முழுதுமே ஒவ்வொரு பெயரில் இருந்தாலும் அண்மைக்காலமாக தமிழர் திருநாள் என்று அடையாளப்படுத்தப்பட்டு வழிபாட்டைச் சிதைக்கும் போக்கு மேலோங்கி நிற்கிறது. இதை ஆன்ம உணர்வுள்ள ஹிந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
செருப்பைப் போட்டுக் கொண்டு, நெருப்பில்லா புகையில்லா அடுப்பில், விருப்பில்லா வேற்று மதப் பெண்களை வைத்து, இருப்பில்லா திராவிடத்தை அரசின் கொள்கையெனக் காட்டும் முகமாக, சினிமாவால் சினிமாவில் வளர்ந்த நாடகத்தன திராவிடம் காட்டும் படப்பிடிப்புகளை, தெய்வாம்சம் பொருந்திய பொங்கல் நாளில் வைத்துக் கொள்வது, நம் பாரம்பரியத்தை சிதறடிக்கும் இன அழிப்பு, மரபு ஒழிப்புச் செயல்களே!
இதற்கு பின்னணியில் குரல் கொடுக்கும் வேற்று மத அரசியல் அமைப்புகள், இந்நாளை தமிழர் திருநாளெனக் கொண்டாடும் போது, ஒரே இறைக் கொள்கை கொண்ட எங்களுக்கு மனம் புண்படுகிறது எனவே சூரிய வழிபாட்டைத் தவிர்த்து இப் பொங்கல் கொண்டாடப்பட வேண்டும் என கோருவது, தமிழராகிய ஹிந்துக்களின் மரபை ஒழிக்கும் உள்நோக்க வேலையே!
எனவே… திராவிடக் கொள்கையைத் தூக்கிப் பிடிக்கும் அரசுகள் இந்தப் பொங்கல் திருநாளை மக்கள் அவர்கள் மரபுப் படி கொண்டாடிக் கொள்ள விட்டுவிட்டு, அரசின் சார்பில் வேறொரு நாளை – அது ஈவேரா நாயக்கர், அண்ணாதுரை, கருணாநிதி பிறந்தநாள்களில் அல்லது மறைந்த நாள்களில் கூட வைத்துக் கொள்ளட்டும் – தேர்ந்தெடுத்து, பொங்கல் வைத்து, ஷூட்டிங் நடத்தி, சமத்துவப் பொங்கலாய்க் கொண்டாடிக் கொள்ளட்டும்! நமக்கு மறுப்பேதுமில்லை!
காரணம்…
ஹிந்துக்களின் பாரம்பரிய வழிபாட்டு முறைகளைத் திருடும் கிறிஸ்துவம் – கோயிலில் கொடிமரம் போல் சர்ச்சுகளில் வைத்து… ஹிந்துக்களின் ஆன்மிகத் திருவிழாக்கள் போல்… அனைத்தையும் பிரதி எடுத்து அவற்றில் தெய்வங்களையும் கதைகளையும் மட்டும் மற்றி… ஹிந்துக்களின் தனித்துவத்தை திட்டமிட்டு அழிப்பது போல்…
ஹிந்துக்களின் பாரம்பரிய விழாக்களை திட்டமிட்டு அழிக்கும் கிறிஸ்துவ இசுலாமிய திராவிடம் – தமிழர் திருநாள் என்று வேறு ஒரு நாளை தேர்ந்தெடுத்துக் கொண்டாடட்டும்! அன்று ஆன்மிக உணர்வுள்ள ஹிந்து எவரையேனும் பொங்கல் கிண்ட கரண்டி பிடிக்க அழைத்தாலும், அவர் செருப்பை கழற்றி வைத்து நெற்றியில் திலகம் / நீறணிந்து வருவார்! வரவேற்போம்!
எதற்காக மகர சங்கராந்தி எனும் சூரிய வழிபாட்டுப் பொங்கல் திருநாளில் நீங்கள் கை வைக்கிறீர்கள்?
மேற்படி தமிழின அழிப்பு, மரபொழிப்பு செயல்திட்டத்தில் தானே!
#பாசிஸ_திராவிடம்