
இப்போதெல்லாம் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இண்டியா என்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பு எதுவும் செய்ய வேண்டியதில்லை; கண்ணைக் காட்டினாலே போதும்… அவர்கள் செய்ய வேண்டிய வேலையை போலீஸ் செய்துவிடுகிறது!
இதுதான் இப்போதைய ’அம்மா’ ஆட்சியில் போலீஸின் செயல்பாடு! ‘பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா’ புகாராம்… ஒரு குற்றம் நடைபெறும் முன்னே ஓடோடிப் போய், அதைத் தடுத்து, குற்றவாளி என்று ‘வர்மா’வை கைது செய்தார்களாம் போலீஸார்!
இப்படிப்பட்ட கருத்துகளை முன்வைத்து, இது அம்மா ஆட்சியா அல்லது அல்கொய்தா ஆட்சியா என்று கேள்வி எழுப்புகின்றனர் சமூக வலைத்தளங்களில்!

கைமீறிப் போய் விட்ட கொரோனா பரவல்… காரணம் எந்தக் கட்டத்தில் சிங்கிள் சோர்ஸ் என்று தமிழக அரசு சொன்னதோ அதன் பின்னணியில் தெரிகிறது ஒரே இடத்தின் பாசம்! அத்துடன் விட்டதா? காவல் துறையை ஏவல் துறையாக்கி, அடுத்த வருட தேர்தலுக்கு இப்போதே அச்சாரம் இட்டது போல் இட்ட கட்டளைக்கு இடுப்பில் துண்டைக் கட்டி சேவகம் செய்து கொண்டிருக்கும் ஆளும் வர்க்கத்தைப் பார்த்தால், ஸ்காட்லாண்ட் யார்ட் புகழை சவக்குழிக்குள் தள்ளி விட்ட வெட்டியான்தனம்தான் வெளித்தெரிகிறது!
இப்போது லேட்டஸ்ட் விவகாரம், முகமது நபியை பற்றி கார்ட்டூன் வெளியிடப்படும் என பேஸ்புக்கில் பதிவிட்ட கார்ட்டூனிஸ்ட் வர்மா கைது!
விழுப்புரம் அருகே கீழ்குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேந்தர் (30). இவர், விழுப்புரம், சுதாகர் நகரில் ஐ.டி. அலுவலகம் வைத்துள்ளார். இவர், சமூக வலைதளத்தில் ‘வர்மா கார்ட்டூனிஸ்ட்’ என்ற பெயரில் கார்ட்டூன் படங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது ‘கருப்பர்’ என்ற யூ–டியூப் சேனலின் பின்னுள்ளவர்களை தலைவர்கள் முன்வந்து கண்டிக்க வேண்டும் என்றும் ‘இந்துக்கள் பக்கம் நிற்கிறோம்’ என முஸ்லிம்கள் உறுதி செய்வதோடு, இந்த சேனலுக்கு பின்னால் உள்ளவர்களை ஜமாத்களில் இருந்து வெளியேற்ற வேண்டும் எனவும், இதனை 24 மணி நேரத்தில் செய்யவில்லை என்றால், முஸ்லிம்களால் போற்றப்படும், முகமது நபியை பற்றி வேறு ஒருவர் பக்கத்தில் கார்ட்டூன் வெளியிடப்படும் எனவும் பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து, விழுப்புரம் தாலுகா காவல்நிலையத்தில் ‘பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா’ தொகுதி தலைவர் ரியாஸ் அலி, சுரேந்தரை கைது செய்ய கோரி புகார் அளித்தார். மேலும் அனைத்து முஸ்லிம் இயக்கங்கள் சார்பில் முகமது ரஃபி என்பவர் விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதன் பேரில் டிஎஸ்பி நல்லசிவம் தலைமையிலான காவல்துறையினர் 153(A), 295(A), 504, 505(I)(C), 505(II) ஆகிய பிரிவுகளின் கீழ் சுரேந்தரை நேற்று (ஜூலை 13) இரவு கைது செய்தனர்.

இந்தக் கைதைக் கண்டித்து, பாஜக.,வினரும், இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து இயக்கத்தினர் சிலரும் குரல் கொடுத்து வருகின்றனர். மேலும், சமூகத் தளங்களிலும் தங்கள் கோபத்தை கொட்டித் தீர்த்து வருகின்றனர்.
ஒரு குற்றம் செய்யப்படாத நிலையில், குற்றவாளி என்று கூறிக் கொண்டு போலீஸார் இவ்வாறு செயல்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கருப்பர் கூட்டத்துக்கு எதிராக தமிழகத்தின் மூலை முடுக்கில் இருந்தெல்லாம் புகார்கள் வந்தும், ஆதீனங்களும், சமயத் தலைவர்களும் ஆன்மிகப் பெரியவர்களும் புகார் அளித்தும் கேட்டுக் கொண்டும்கூட, தான் ஓர் ஆன்மிகவாதி என்று காட்டிக் கொண்டு மகாமகக் குளத்தில் நாலு முங்கு முங்கினாலும், தெய்வத்தை இகழ்ந்த பாவம் அதில் கரைந்து போகாது என்பதை காவல்துறையைக் கையில் வைத்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உணர வேண்டும்.

காரணம், இப்போதும் கூட என்னை ஒன்றும் செய்ய முடியாது போடா என்று ஒருமையில் திட்டினாலும் கூட, கேவலமாக நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும் வகையில் அசிங்க அசிங்கமாகப் பேசினாலும் கூட, சுந்தரவள்லி என்பவரின் சீண்டல்களை எல்லாம் சிரித்த பல்லை வெளியே காட்டிக் கொண்டு, சகஜமாக சென்று கொண்டிருக்கும் முதலமைச்சரின் நடத்தையால்… இப்போது கருப்பர் கூட்டத்தின் குரல் இப்படி ஒலிக்கிறது… எங்களை ஒன்றும் செய்ய முடியாது போடா… என்று!
முதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடமும் உங்கள் காவல் துறையிடமும் நம்பிக்கை இழந்து வெகு நாட்களாயிற்று!