ஏப்ரல் 22, 2021, 1:22 காலை வியாழக்கிழமை
More

  விநாயகர் நான்மணி மாலை -விளக்கம் (பகுதி-9)

  இது பற்றிய ஒரு கதை உண்டு. ஒருமுறை இந்திர சபையில் ‘இல்லறம் சிறந்ததா? துறவறம் சிறந்ததா?’ என்ற விவாதம் எழுந்தது.

  manakkula vinayakar and bharathi 3 - 1

  விளக்கம்: கு.வை.பாலசுப்பிரமணியன்

  பாடல் பத்து – கலித்துறை

  துறந்தார் திறமை பெரிததினும் பெரிதாகு மிங்குக்
  குறைந்தாரைக் காத்தெளியார்க் குண வீந்து குலமகளும்
  அறந்தாங்கு மக்களு நீடூழி வாழ்கென அண்டமெலாம்
  சிறந்தாளு நாதனைப் போற்றிடுந் தொண்டர் செயுந்தவமே.

  பொருள் – எல்லாவற்றையும் துறந்த முனிவர்களின் திறமை, பெருமை மிகப் பெரியது. இருந்தாலும் இல்வாழ்க்கையில் ஈடுபட்டு, இல்லார்க்கு உணவு தந்து, அவரைக் காத்து, நல்ல மனைவியை அடைந்து, ந்ன்மக்களைப் பெற்று, இந்த அண்ட சராசரமெல்லாம் நீண்ட காலம் வழ அருள்புரிய வேண்டும் என இறைவனைப் போற்றி வாழ்கின்றோர் செய்யும் தவமே மிகச்சிறந்தது.

  இல்லறம் சிறந்ததா? துறவறம் சிறந்ததா?

  பாரதியார் இல்லறமே சிறந்தது எனப் பொருள்படும் வகையில் இப்பாடலைப் பாடியுள்ளார். இது பற்றிய ஒரு கதை உண்டு. ஒருமுறை இந்திர சபையில் ‘இல்லறம் சிறந்ததா? துறவறம் சிறந்ததா?’ என்ற விவாதம் எழுந்தது. அங்கு கூடியிருந்த தேவர்களும், முனிவர்களும் இரண்டு பிரிவுகளாக பிரிந்து தங்களது கருத்துகளைச் சொல்லத் தொடங்கினர்.

  ‘இல்லறம் என்பது ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டு, குடும்ப உறவுகளுடன் சேர்ந்து வாழும் இயல்பு நிலையைக் கொண்டது. சிற்றின்பத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த வாழ்க்கையில், உயர்நிலையை அடைவது கடினமே’ என்பது துறவற அணியின் வாதம். ‘இறைவனை அடைய வேண்டும் என்கிற சுயநல நோக்கத்துடன், எதிலும் விருப்பம் இல்லாமல், எவருக்கும் உதவாமல் தனித்து வாழ்பவர்கள்தான் துறவறம் புரிபவர்கள். இப்படிப்பட்டவர்கள் தான் உயர்நிலைக்குச் செல்வதும் கடினம்’ என்று குற்றம் சாட்டினர், இல்லற அணியினர்.

  இப்படியே இரண்டு அணியினரும் தங்கள் தரப்பு நியாயத்தையும், எதிர்தரப்பு குறைகளையும் வலியுறுத்தி பல கருத்துகளைச் சொல்லிக் கொண்டிருந்தனர். வாக்குவாதம் நீண்டு கொண்டே போனது. இந்த நிலையில் நடுநிலைவாதிகளாக இருந்த சிலர் தங்களின் கருத்துக்களைக் கூறினர். ‘இல்லற வாழ்க்கை என்பது இன்ப துன்பங்களுடையது. வாழும் காலத்தில் அவர்கள் செய்யும் நல்லவை, தீயவைகளுக்கு ஏற்ப அவர்களுக்கு பலன்கள் கிடைக்கின்றன. குறுகிய காலமே கொண்ட இந்த இல்லற வாழ்க்கையில் இருந்தும் சிலர் உயர்நிலையை அடைந்திருக்கின்றனர்.

  துறவு வாழ்க்கை என்பது இன்ப துன்பங்களில்லாதது. இறைவனை நாடுவதும், காலங்கள் பல கடந்து, இறைவனை அடைவதுமே இதன் நோக்கம். இந்த வழியிலும் சிலர் உயர்ந்த நிலையை அடைந்திருக்கின்றனர். 

  அதேபோல், தூய்மையோடு இல்லறத்தை நடத்தி வந்து, பின்னர் இல்லறம் துறந்து, துறவறம் சென்று இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து, இரு வழிகளிலும் இருந்து உயர்நிலையை அடைந்தவர்களும் உண்டு. எனவே இல்லறம், துறவறம் என்று கருத்து வேறுபாடு கொள்ளாமல், தாங்கள் எடுத்துக் கொண்ட அறத்தின் வழியில் சிறப்பாகச் செயல்படுபவர்கள் மட்டுமே உயர்ந்த நிலையை அடைகின்றனர் என்பதை நாம் அனைவருமே உணர வேண்டும்’ என்றனர் நடுநிலைவாதிகள்.

  இதைக் கேட்ட இந்திரன், ‘நீங்கள் சொன்ன மூன்று வழிகளிலும் பலர் உயர்நிலையை அடைந்திருக்கின்றனர் என்பது உண்மைதான். ஆனால் நாம் இங்கு இல்லறம், துறவறம் என்பதில் எது சிறந்தது என்றுதான் பேசிக் கொண்டிருக்கிறோம். குறுகிய காலமே கொண்ட இல்லற வாழ்க்கையில் பல்வேறு இன்ப, துன்பங்களைப் பெற்று, அதிலிருந்து உயர்ந்த நிலையை அடைவதென்பது மிகவும் கடினமானது. ஆகவே இல்லறத்தின் வழியில் உயர்நிலையை அடைவதையே சிறப்புக்குரியதாக நான் கருதுகிறேன்’ என்று இல்லற வாழ்க்கைக்கு ஆதரவாகப் பேசினான்.

  அப்போது தேவகுருவான பிரகஸ்பதி, ‘இந்திரா! நீ சொல்வதை என்னால் ஏற்க முடியாது. இல்லற வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் அனைவரும் இன்பங்களையே நாடுகின்றனர். அவர்கள் தங்களுடைய இன்ப வாழ்க்கையில் ஏதாவது குறைவு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக மட்டும் சிறிது நேரம் இறைவனை நினைத்து வேண்டுகின்றனர். ஆனால், துறவற வாழ்க்கைக்குச் செல்பவர்கள், தங்களுடைய உறவுகள், ஆசைகள் என்று அனைத்தையும் துறந்து, முழுநேரமும் இறைவனை நினைத்து வேண்டி வழிபட்டு உயர்ந்த நிலைக்கு வருகின்றனர். எனவே துறவறமே சிறப்புடையது’ என்றார்.

  தேவர்களின் தலைவனான இந்திரனுக்கு, தேவகுருவின் சொற்கள் கோபத்தை வரவழைத்தது. ‘தேவகுருவே! இல்லற வாழ்க்கை என்பது இன்பம் மட்டுமே கொண்டது என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். தங்களின் தவறான எண்ணத்தை முதலில் மாற்றிக் கொள்ளுங்கள்’ என்றான். ‘மனிதர்கள் அனைவரும் நிலம், செல்வம், பெண் போன்ற சிற்றின்பங்களுக்கு ஆசைப்பட்டு அழிந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். அந்தச் சிற்றின்பங்களில் இருந்து எதுவும் குறைந்து விடக்கூடாது என்றுதான் பலரும் இறைவனை வேண்டுகிறார்கள். அவர்களுக்கு இன்பமாக இருக்க வேண்டுமென்பதில் தான் விருப்பம் அதிகம். எதிர்காலத்தில் கிடைக்கும் பேரானந்தம் எனும் உயர்நிலையை அடைய வேண்டுமென்பதில் சிறிது கூட விருப்பமில்லை’ என்று வாதிட்டார் தேவகுரு.

  கதையின் தொடர்ச்சியை நாளை காணலாம்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,232FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »