spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி-22)

விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி-22)

- Advertisement -
manakkula vinayakar

விநாயகர் நான்மணிமாலை – பகுதி 22
விளக்கம்: முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

பொறுமையின் சிறப்பு

 பொறுமையாயிருப்பதற்கு இந்த பூமியை உதாரணமாகச் சொல்வார்கள். இந்தப் பூமியில் எத்தனையோ நல்லது கெட்டது நடந்தாலும் அதையெல்லாம் தாங்கிக் கொண்டிருக்கும் பூமியை ஒரு தாயாக இந்து மத புராணங்கள் பெருமைப் படுத்துகிறது. எந்தவொரு செயலிலும் பொறுமை தேவையாயிருக்கிறது. பொறுமையாயிருப்பவர்கள் பல இடங்களில் நல்ல பெயரைப் பெற்றிருக்கிறார்கள். பல தொழில்களில் முன்னேற்றம் கண்டிருக்கிறார்கள். பொறுமை கடலினும் பெரிது.

 இங்கே பாரதியார் முன்னரே சொன்ன வித்து முளைக்கும் தன்மையை நினைவுகூற வேண்டும். ஒரு விதையை விதைக்கிறோம். அது மண்ணுக்குள் தன்னை மறைத்துக் கொள்கிறது. அதற்கு நீரூற்றுகிறோம். காத்திருக்கிறோம். அது மெல்ல முளைக்கிறது. இலை விடுகிறது. தண்டு பெரிதாகிறது. கிளைகள் உருவாகின்றன. பூக்கள் உருவாகின்றன. கடைசியில் கனியைத் தருகிறது. இந்த பயணம் நீளமானது. இடைப்பட்ட காலம் பெரியது. பொறுமையுடன் காத்திருக்க வேண்டியது ரொம்பவே அவசியம். பொறுமை கசப்பானது. ஆனால் அது தருகின்ற கனியோ ரொம்ப இனிப்பானது என்பார் தத்துவ மேதை அரிஸ்டாட்டில்.

ஒரு இலக்கை நோக்கிப் பயணிக்கும் போது வெற்றி உடனடி சாத்தியம் ஆவதில்லை. வேர் பிடிக்காமல் முளைக்கின்ற செடிகள் நிலைப்பதும் இல்லை. நதிகள் நடந்து கொண்டே இருக்கும். அதன் பாதையில் வசந்தங்களையும், துயரங்களையும் சந்திக்கும். அருவிகளில் விழும், தடைகளில் எழும், மௌனமாய் அழும் ஆனாலும் அதன் இலட்சியம் கடைசியில் நிறைவேறும். அதுவரை அதன் பயணம் பொறுமையாய் நடந்து கொண்டே இருக்கும்.

இந்த பொறுமைக்கு முதல் தேவை நம்பிக்கை. விடியும் எனும் நம்பிக்கையே இரவில் நம்மை நிம்மதியாய் தூங்க வைக்கிறது. முடியும் எனும் நம்பிக்கையே பயணங்களுக்கு நம்மைத் தூண்டுகிறது. நம்முடைய பொறுமை நம்பிக்கை இழக்கும் போது “பொன் முட்டையிடும் வாத்தை வெட்டிக் கொன்ற முட்டாளாய்” செயல்படத் துவங்குவோம். பொறுமை தனது பயணத்தை நிறுத்தும்போது தோல்வி நம்மை நோக்கி நடைபோடத் துவங்கும்.

பொறுமையின் உதாரணமாக மூங்கில் செடியைச் சொல்வார்கள். மூங்கிலைப் பயிரிட்டு தண்ணீர் ஊற்றுவார்கள். பருவங்கள் போகும் ஆனால் செடி வளரவே வளராது. ஒரு அங்குலம் அளவு கூட வளராமல் அடம்பிடித்து அப்படியே இருக்கும். முழுசாய் நான்கு வருடங்கள் செடி அப்படியே இருக்கும். செடிக்குத் தண்ணீர் ஊற்றுபவர் பொறுமையுடன் அதை பராமரிக்க வேண்டும். நான்கு ஆண்டுகளாய் அவருக்கு சிலாகிக்கவோ, மகிழ்ச்சி கொண்டாடவோ எதுவுமே இருப்பதில்லை.

ஆனால் அதற்கு அடுத்த பருவத்தில் எல்லோரும் வியக்கும் வண்ணம் அந்த மூங்கில் வளரத் துவங்கும். அதுவும் எப்படி? வேகமான அசுர வளர்ச்சி. ஒரே ஆண்டில் அது எட்டிப் பிடிக்கும் உயரம் 80 அடிகளாகும். நான்கு ஆண்டுகாலமாக அமைதியாக இருந்த செடி, இவ்வாறு ஐந்தாவது ஆண்டில் மட்டும் விஸ்வரூப வளர்ச்சியை எட்டுகிறது. ஆராய்ந்து பார்த்தால் இதில் ஒரு வியப்பூட்டும் இரகசியம் இருப்பதைக் காணலாம். இதற்கு இயற்கையின் அற்புதம் என்றோ, கடவுள் படைப்பின் மகத்துவம் என்றோ நீங்கள் பெயரிட்டுக் கொள்ளுங்கள்.

 பொறுமை உயரமான வெற்றிகளை உருவாக்குகிறது. அவசரப் பட்டு முளைத்து, சடசடவென வீழ்ந்து விடாமல், நமது அடித்தளத்தை வலுவாக்கிக் கொள்ள பொறுமை நம்மைத் தூண்டுகிறது. தண்ணீரின் ஆழம் தெரியாமல் குதிப்பதோ, மலையின் ஆழம் தெரியாமல் ஏறச் செல்வதோ ஆபத்தில் முடியும். பாதியிலேயே பொறுமையைக் கழற்றி விட்டுவிடுபவர்கள் வெற்றியின் பதக்கங்களை அணிந்து கொள்வதில்லை.  “நேரமும் பொறுமையுமே போராளிகளின் பலம்” எனும் லியோ டால்ஸ்டாயின் தத்துவ முத்து பொய் சொல்வதில்லை.             ‘பொறுத்தார் பூமி ஆள்வார்’ என்ற பழமொழி பொறுமையின் சிறப்பை விளக்கவே பிறந்திருக்கக் கூடும் என்பதில் ஐயமில்லை. பொறுமை உடையவர்களை, இவ்வுலக மக்கள் மதிப்புடன் நோக்குகிறார்கள்.

வாழ்க்கையில் எது நடந்தாலும், இதுவும் மாறும் என்ற எண்ணத்தோடு, பொறுமையாய் யோசித்தால் எதற்கும் தீர்வு கிடைக்கும் என்பதோடு நமது இரத்த கொதிப்பும் சமன்படும். “ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ்.” என்ற குறளையும் “அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வாரைப் பொறுத்தல் தலை” என்ற குறளையும் எக்கலத்திலும் நினைவில் கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe