இன்று வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரக நிகழ்வு நடைபெற்றதன் 85ம் நினைவு நாள். இந்த நாளில் வேதாரண்யத்தில் அதன் நினைவு நாள் கடைபிடிக்கப்படும். இது வழக்கமான ஒன்றுதான்.
நம் நாட்டில் நடைபெற்ற சுதந்திர வரலாற்றுப் போர் நிகழ்ச்சிகளை நினைவுகூர்தல் என்பது, நமது அடுத்த சந்ததிக்கான தேசப் பற்றை மனதில் பதியச் செய்வது. நம் நாடு எத்தகைய இன்னல்களைத் தாண்டி, இந்த நிலைக்கு வந்துள்ளது என்பதை உணரச் செய்வது.
இன்று இந்தச் செய்தியை இணையத்தில் பதிவு செய்திருந்தோம்.
வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரக 85ம் ஆண்டு நினைவு
By அம்பிகாபதி, வேதாரண்யம்
First Published : 30 April 2014 10:34 AM IST
வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரக நிகழ்வின் 85வது ஆண்டு நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. இதை அடுத்து, திருச்சியில் இருந்து சென்ற வேதாரண்யம் உப்புசத்தியாக்கிரகக் குழுவினர் வேதாரண்யம் கடல் பகுதியில் உப்பு அள்ளி, அன்றைய சுதந்திரப் போராட்ட நிகழ்வை நினைவு கூர்ந்தனர்.
ஆங்கிலேயர் கடந்த 1930 ஆம் ஆண்டில் இந்தியர்கள் கடல் பகுதியில் உப்பு அள்ள விதித்த கட்டுப்பாட்டுத் தடையை எதிர்த்து காந்திஜி தலைமையில் தண்டி யாத்திரை நடைபெற்றது. அதுபோல் ராஜாஜி தலைமையில் வேதாரண்யம் உப்பு யாத்திரை திருச்சியில் இருந்து வேதாரண்யம் வரை நடைபெற்றது.
இந்த நிகழ்வின் 85 ஆம் ஆண்டு நினைவு நிகழ்ச்சியில், வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரக குழுவின் தலைவர் செல்வகணபதி, சர்தார் வேதரத்தினத்தின் பெயரன் வேதரத்தினம் உள்பட ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள், குருகுலம் பள்ளி மாணவிகள், ஆசிரியர்கள், காந்தியவாதிகள், காந்தியவாதி சசிபெருமாள் உள்பட ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
– மேற்கண்ட இந்தச் செய்திக்கான கருத்தாக ஒருவர் இவ்வாறு பதிவு செய்திருந்தார்….
//வேலை வெட்டியில்லாத வெட்டிப் பயலுகளுக்கு வேற வேலையைச் சொல்லுங்கள் பார்ப்போம். ஏன், காந்தி ஒத்துழையாமை இயக்கம் கூட தான் நடத்தினார், அதையும் நடத்துங்களேன்.//
– இந்தக் கருத்தினைப் படித்த எனக்கு இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கியக் கட்டமான உப்புச் சத்தியாக் கிரக நிகழ்வின் பின்னணி நெஞ்சில் நிழலாடியது.
உப்பு சத்தியாகிரகம் நடந்து 85 ஆண்டுகளில் இப்போது இந்தியா இருக்கும் நிலையை எண்ணிப் பார்த்தால், அதன் மகத்துவம் புரியும்.
நமது மத்திய அரசு சாதாரண உப்பு விற்பதற்குத் தடை விதித்தது. பன்னாட்டு நிறுவனங்கள், இப்போதெல்லாம் சாதாரண சில்லரை விற்பனைத் துறையில்கூட நுழையத் தொடங்கியாயிற்று. பன்னாட்டு நிறுவனங்கள் நல்ல லாபம் ஈட்டுவதற்கும் அரசுக்கு ஒரு வகையில் பங்கு கிடைக்கவும் இன்றைய மத்திய அரசு வழிவகுத்துக் கொடுத்திருக்கின்றது. இதற்காக அரசு தங்கள் கைவசம் உள்ள விளம்பரத் துறையின் மூலம் பலத்த பிரசாரம் ஒன்றைச் செய்து வந்தது. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, அயோடின் கலந்த உப்பின் அவசியம் பற்றி பிரசாரம் செய்து, அதைத் தவிர வேறு சாதாரண உப்பு வாங்கி சாப்பிட்டால், கைகால் வீக்கம் வரும், உடல் வலு குன்றும் என்றெல்லாம் பயமுறுத்தப் பட்டு வருகிறது.
அரசின் இந்த விளம்பர உத்தியால் பாதிக்கப்பட்டது சாதாரண உப்பு வியாபாரிகள்தான்.
சாதாரண உப்பு தயாரிக்க எந்த வித மூலதனமும் தேவையில்லை. அயோடின் உப்பு தயார் செய்ய மூலதனம் வேண்டும். அதற்கு அந்த ஏழை உப்பு உற்பத்தியாளர்கள் எங்கே போவார்கள். தூத்துக்குடியில் சென்று பார்த்தால், இவர்களின் வாழ்க்கைத் தரமும் நிலையும் நமக்குப் புரியவரும்.
அரசின் இந்த முடிவுக்குப் பின்னர் சாதாரண உப்பு உற்பத்தியாளர்களின் வாழ்க்கை நிலை கடினமாகத்தான் போனது. பொதுமக்களாகிய நம்மை எடுத்துக் கொண்டால்கூட முன்பெல்லாம் உப்பு வாங்க ரூ.2 முதல் ரூ.5 வரை செலவு செய்தோம். 20 வருடங்களுக்கு முன்னர் என் கிராமத்தில் பெரிய உப்பு மூட்டையை சைக்கிளில் வைத்துக் கொண்டு வீதிகளில் சுற்றி வரும் வியாபாரியிடம் ஒரு படி (பக்கா) ரூ.2க்கும் 3க்கும் வாங்கியதும் உண்டு. ஆனால், இப்போது அதற்குப் பதிலாக ரூ.15/- முதல் ரூ.20 வரை செலவு செய்ய வேண்டியிருக்கிறது.
ஆங்கிலேயர்கள் நமது நாட்டை விட்டுச் சென்று 67 ஆண்டுகள் ஆகியும், நமது அடிமைத்தனம் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்றே தோன்றுகிறது. உப்புக்கு வரி விதித்ததற்காக பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக மகாத்மா காந்தி தலைமையில் தண்டி யாத்திரை நடந்தது. ஆனால் சுதந்திர இந்தியாவில், நமது அரசே, நம் நாட்டின் சாதாரண உப்பை விற்கத் தடை விதித்தது. அறிவுஜீவிகள் சிலரோ அயோடின் கலந்த உப்பையே விற்கவேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள்.
அயோடின் உப்பு சாப்பிடுவதால் மட்டுமே குழந்தைகளின் மூளை வளர்ச்சி அதிகமாகும் என்கிறது அரசுத் தரப்பு. அப்படியானால் இத்தனை ஆண்டுகளாக சாதாரண உப்பைச் சாப்பிட்ட நமது முன்னோர்கள் புத்திக் குறைபாடுடையவர்களாக, மூளை வளர்ச்சி குன்றியவர்களாகவா இருந்தார்கள்?
உடலில் அயோடின் சத்து குறைவாக இருந்தால் தைராய்ட் நோய் வரும் என்றது அரசு. மேலும் அதிகமாக உடலில் அயோடின் சத்து இருந்தாலும் பலதரப்பட்ட நோய்கள் வரத்தான் செய்கின்றன. அயோடின் மனிதனுக்கு மிகவும் அவசியம் என்று அரசுத் தரப்பிலிருந்து எந்த நிரூபணமும் தரப்படவில்லை! மருத்துவம் நன்கு அறிந்திவர்கள், நாம் தினமும் உண்ணும் உணவிலிருந்தே ஒரு மனிதனின் உடலுக்குத் தேவையான அயோடின் சத்து கிடைக்கிறது என்கிறார்கள்.
1920 இல் முதலில் அமெரிக்கா அயோடின் கலந்த உப்பைத் தயார் செய்தது. 1950 இல் அந்த நாட்டுக் கம்பெனிகளின் கவனம் சீனா, மற்றும் இந்தியாவின் மீது திரும்பியது. அயோடின் உப்பு இல்லாமல் உண்பதால் உலகமே ஆபத்தை நோக்கிச் செல்கிறது என்று பிரசாரம் செய்தனர். அவர்களுக்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு, யுனிசெஃப் ஆகியவையும் கைகோத்தன.
1997 இல் நமது நாட்டில் முதலில் சாதாரண உப்பு விற்க தடை வந்தது. அந்த நேரத்தில் சிலர் அயோடின் உப்பை பயன்படுத்தத் துவங்கினார்கள். முதலில் இதை 71% மக்கள் வாங்கத் தொடங்கி நாளடைவில் அது குறைந்து அதிகபட்சமாக 22% பேர்தான் அந்த உப்பை பயன்படுத்தினர். வாஜ்பாய் தலைமையில் அமைந்த மத்திய அரசு, சாதாரண உப்பை விற்கும் தடையை நீக்கி, அதை எல்லோரும் பயன்படுத்தலாம் என்ற நடைமுறையை மீண்டும் அமலுக்குக் கொண்டு வந்தது. ஆனால் அது சிறிது நாட்களிலேயே வந்த வழி போனது. சாதாரண உப்பு விற்கும் திட்டத்திற்கு தடை விதித்தது ஐ.மு.கூட்டணி அரசு.