
- கட்டுரை: சிவராம கிருஷ்ணன்
1947ல் தேசம் பிளவுபடுத்தப்பட்டபோது, பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களையொட்டி ஒரு பகுதியும், மேற்கு வங்கத்தையொட்டி இன்னொரு பகுதி என இரண்டு பகுதிகள் உள்ளடக்கிய தேசமாக பாகிஸ்தான் இருந்தது. மேற்கு வங்கத்தை ஒட்டிய பகுதி, கிழக்கு பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்டது. கிழக்கு பாகிஸ்தான் மக்களின் கலாச்சாரம், மொழி ஆகியவை மேற்குப்புறத்தில் இருந்த மக்களிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்தது. பாகிஸ்தானின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதி என்றாலும், அந்நாட்டு மக்களும் சரி, ஆட்சியாளர்களும் கிழக்கு பாகிஸ்தானியர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தினர். வங்காள மொழி பேசுபவர்கள் என்று அவர்களை தனி இனமாக கருதி, அந்த பகுதியில் இனப்படுக்கொலையை அரங்கேற்றியது பாகிஸ்தான். அங்கு வாழ்ந்த மக்கள் சுதந்திரம் வேண்டும் என்று போராடி வந்தார்கள்.
கிழக்கு பாகிஸ்தானில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது, பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை, பொதுமக்களின் சொத்துக்கள் சூறையாடப்படுதல் என்று, பாகிஸ்தானின் அக்கிரமம் தொடர்ந்து வந்தது. கிழக்கு பாகிஸ்தான் மக்கள் ஏராளமானோர் இந்தியாவிற்குள் தஞ்சம் புகுந்தனர். இனப்படுகொலையை தடுத்து நிறுத்தி அங்கு அமைதியை ஏற்படுத்த இந்தியா மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி கண்டன. ஒரு கட்டத்தில் பாகிஸ்தான், இந்தியாவையே போருக்கு அழைத்தது. டிசம்பர் 3, 1971 அன்று, திடீரென்று பாகிஸ்தான் இந்தியாவின் 11 விமானதளங்களில் குண்டு வீசி தாக்கியது. இனி சமாதானத்திற்கு வழியே இல்லை என்கிற சூழல் ஏற்பட்டு இந்தியா, பாகிஸ்தானுடனான நேரடி போரில் இறங்கியது. கிழக்கு பாகிஸ்தானில் இயங்கி வந்த முக்தி வாஹினி என்கிற அமைப்பும் இந்தியாவுடன் போரில் இணைந்தது.
இந்தியாவின் விமானப்படை, கடற்படை, தரைப்படை என்று அனைத்து படைகளும் கூட்டாக ராணுவ தாக்குதல் நடத்தின. INS விக்ராந்த் என்கிற போர் கப்பல், பாகிஸ்தானின் கஜினி போர்க்கப்பலை வீழ்த்தியது. இது பாகிஸ்தானுக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது. அதே போல பாகிஸ்தானின் 94 போர் விமானங்கள் அழிக்கப்பட்டன, இந்திய தரப்பில் 45 விமானங்களை இழக்க நேரிட்டது. வேகமாக முன்னேறிய தரைப்படை, பாகிஸ்தானின் 15,000 சதுர கிமீ இடத்தை கைப்பற்றியது. டாக்கா நகரம் இந்திய ராணுவத்தின் முழு கட்டுப்பாட்டில் வந்தது. ஆயிரக்கணக்காண பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தியாவின் அதிரடி தாக்குதல்களால், பாகிஸ்தான் தோல்வியின் விளிம்பிற்கு தள்ளப்பட்டது.
வேறு வழி இல்லாமல், 16 டிசம்பர் 1971 அன்று பாகிஸ்தான் போரை நிறுத்திக்கொள்வதாக அறிவித்து, 90000 ராணுவ வீரர்களுடன் சரண் அடைந்தது. பின்னர் நடந்த உடன்படிக்கையின் படி, கிழக்கு பாகிஸ்தான் மக்களின் கோரிக்கையை ஏற்று, அது தனி நாடாக அறிவிக்கப்பட்டது. அதுதான் இன்றைய பங்களாதேஷ்.
பிடிபட்ட 90,000 பாகிஸ்தான் வீரர்கள் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்கள். நமது ராணுவத்தின் தீர செயல்களால் கைப்பற்றப்பட்ட பாகிஸ்தான் பகுதிகள், அன்றைய மத்திய அரசின் முடிவால் மீண்டும் பாகிஸ்தானிடம் அளிக்கப்பட்டது. பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிடம் சரணடைந்த 16 டிசம்பர், விஜய் திவஸ் (வெற்றி தினம்) என்று கொண்டாடப்பட்டு வருகிறது.