அரியணையில் அமர்ந்து கொண்டு விட்ட அடக்குமுறை, உண்மையை வெளிப் படையாக உபதேசிப்பதையும்,நடைமுறைப்படுத்துவதையும் தடை செய்யுமேயானால் அப்போதுதான் ரகசிய சமூகங்கள் உருவாகின்றன, அந்த அடக்குமுறையை எதிர்த்து போரிடுவதும் நியாயமாகி விடுகிறது.
இயற்கையான தேசிய மற்றும் அரசியல் பரிணாம வளர்ச்சியை தவறான சக்திகள் அடக்குமுறையால் ஒடுக்க நினைக்கும் போது ,புரட்சி வெடித்தே ஆக வேண்டும்
- இதுதான் சாவர்க்கரின் கொள்கை.
வெள்ளையனுக்கு இந்த நாட்டை அடிமைப்படுத்தி, அடக்கி ஆள எந்த உரிமையும் இல்லை. ஆனால், பல நேரங்களில் அடக்குமுறையை கையாண்டுதான் இந்த நாட்டை ஆண்டு வந்தான்.
தேசிய உணர்வும், சுதந்திர உணர்வும் பொங்கியெழுந்த போது, அவனை விரட்டி அடிக்க சுதந்திர போராளிகள் தோன்றினார்கள். பங்கிம் சந்திர சட்டர்ஜியை ( வந்தே மாதரம் தேசிய கீதத்தை தந்தவர் ) சந்தித்து விட்டு வரும்படியாக சுவாமி விவேகானந்தரை பணிக்கிறார் அவருடைய குருவான ராமகிருஷ்ண பரமஹம்ஸர்.
பங்கிம் சந்திர சட்டர்ஜியை சந்தித்து விட்டு வந்த சுவாமி விவேகானந்தர், ஆயுதமேந்தி ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போரிடும் மனோநிலையில் இருந்ததாக சுவாமி அரவிந்தர் குறிப்பிடுகிறார்.
பின்னாளில் எந்த ஆன்மீகம் அரவிந்தரை ஆட்கொண்டதோ, அது சற்று முன்னரே விவேகானந்தரை ஆட்கொண்டு விட்டது அவ்வளவே ! இப்போது நம் கதைக்கு வருவோம்…
கோட்ஸே ரத்தினகிரியில் சந்தித்த சாவர்க்கர் எப்படி இருந்தார்…. 46 வயது, வழுக்கைத் தலை, மென்மையான பேச்சு பார்ப்பதற்கு ஒரு கோயில் புரோகிதரை போன்ற தோற்றம்….
சிறையிலிருந்து வெளியே வந்த ஐந்து ஆண்டுகளுக்குள்ளாக அவருடைய உடலும், மனமும் நன்றாகத் தேறி விட்டன. இப்போது அவர் ஹிந்துக்களிடையே சமூக மற்றும் மதரீதியான சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் பணியிலே ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அதிகம் அதிகம் படித்தார்.. நிறைய கட்டுரைகளை, நாடகங்களை, நாவல்களை எழுதினார். என்ன, அவர் எழுத்துக்களில் அரசியல் இல்லை என்பதை அச்சிடுபவர் உறுதி செய்ய வேண்டியிருந்தது.
ஆனால் சாவர்க்கருக்கே உரிய அந்த கொப்பளிக்கும் சக்திக்கு போதிய தீனி இல்லாமல் இருந்தது. அவருடைய இயற்கையான விருப்பப் பணியான அரசியலில் அவரால ஈடுபட முடியவில்லை எனும் ஆதங்கம் இருந்து கொண்டே இருந்தது.
ஆங்கிலேய அரசுதான் அதற்கு தடை விதித்து இருந்ததே… சாவர்க்கர் அரசியலில் நேரடையாக ஈடுபடுவதுதான் தடை செய்யப்பட்டிருந்ததே ஓழிய, தனிப்பட்ட ரீதியில் யாருடனும் அரசியல் பேசுவதை ஆங்கிலேய அரசால் தடை செய்ய இயலவில்லை.
நாதுராம் மணிக்கணக்கில் அமர்ந்து, சாவர்க்கர் பேசுவதை கேட்டு புல்லரித்து போவார்… சாவர்க்கரின் மந்திர சக்திக்கு கட்டுப்பட்டவர் ஆனார்.
சில மாதங்கள் கழித்து, நாதுராமை தன்னுடைய செயலாளராக இருக்கும்படி சாவர்க்கர் கேட்டுக் கொண்டார்.
( தொடரும் )
– எழுத்து: யா.சு.கண்ணன்




