ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் நீதிபதியால் ஏற்பட்ட பரபரப்பு! உண்மையில் நடந்தது என்ன?!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Published:

srivilliputhur andal temple gopuram - 2026

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நேற்று ஆண்டாளை தரிசனம் செய்வதற்காக தன் மனைவியுடன் வந்திருந்தார் நீதிபதி மகாதேவன். அப்போது அவர், ஆலயத்தின் கருவறைக்குள் நுழைந்ததாகவும், கருவறைக்குள் வேறு எவரும் செல்லக்கூடாது என்று தடுத்த அர்ச்சகர்களை அவர் ஒருமையில் பேசியதாகவும், இனி எந்த நீதிபதி வந்தாலும் கருவறைக்குள் அழைத்துச் செல்லுமாறு கூறியதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட தகவல்களில், கோயில் ஸ்தலத்தார், அர்ச்சகர்கள், அறநிலையத்துறை அதிகாரிகளை நீதிபதி மகாதேவன் ஒருமையில் திட்டியதாகவும், தாமும் கருவறைக்குள் செல்வோம் என்று அடம்பிடித்து, எதிர்ப்பையும் மீறி உள்ளே சென்றதாகவும் கூறப்பட்டது.

ஆனால், நீதிபதி மகாதேவன், தனிப்பட்ட வகையில் கடவுள் நம்பிக்கையுள்ள, குறிப்பாக சைவ சித்தாந்தத்தில் தேர்ச்சி பெற்ற ஆன்மிகவாதி. ஆலயங்களில் அறநிலையத்துறையினர் செய்து வரும் மோசடிகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து, அறநிலையத் துறையை சீர்படுத்த சில பணிகளை நீதிமன்ற அதிகாரத்துக்கு உட்பட்டு செய்து வருகிறார். கோயில்களில் காணாமல் போயுள்ள சிலைகள், நிலங்கள், சொத்துகள், நகைகள் இவற்றை மீட்கும் நீதித்துறை விவகாரத்தால், அறநிலையத்துறை அதிகாரிகள், அவர்களை பணிக்கு நியமித்த திராவிட இயக்கங்களின் அரசியல்வாதிகள் என பலரும் நெருக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், கருவறையுள் நுழைந்ததன் மூலம், நீதிமன்ற சட்டதிட்டங்களை நெறிமுறைப் படுத்தும் இடத்தில் உள்ளவரான நீதிபதி மகாதேவன், ஏன் அவ்வாறு ஆலய சட்டதிட்டங்களை மீறினார் என்று பலரும் கேள்வி எழுப்பினர். மேலும், நாத்திகர்களின் கருவறை நுழைவுப் போராட்டத்துடன் இதனை ஒப்புமைப் படுத்தி, நீதிபதியே நுழைந்துவிட்டார், இனி என்ன இருக்கிறது என்ற வகையில் கருத்துகளை வெளியிட்டு வந்தனர்.

ஆனால் இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது. காரணம், திராவிடர் கழகத்தினர் மற்றும் நாத்திகவாதிகளின் கொள்கையான கருவறை நுழைவுப் போராட்டம் என்பது, பார்ப்பன விரோதம் என்ற அடிப்படையிலும், ஆண்டவன் எங்குமில்லை ஆலயங்களில் இருப்பவை வெறும் கல் என்ற வறட்டு வாதத்தை முன்வைத்தும் இயக்கப் படுபவை. ஆனால் ஆலயம் என்பது தூய்மையும், பக்தியும், வழிபாட்டு ஆசாரங்களும் பின்பற்றப்பட வேண்டியது என்பதற்கு ஆலயத்தைக் கட்டிய மன்னர்கள் காலத்தில் இருந்து நடந்து வரும் நெறிமுறைகளே சாட்சி.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!
judge mahadevan - 2026
நீதிபதி மகாதேவன்

நீதிபதி மகாதேவன் பயபக்தியுள்ள, சைவ இலக்கியங்களில் பெரும் தேர்ச்சி பெற்ற மனிதராக இருப்பவர். இறை நம்பிக்கை உள்ள ஒரு நபர் பக்தி மேலீட்டால் ஆர்வத்துடன் இறை மூர்த்தத்தின் அருகே இருந்து வணங்க விரும்பியிருப்பதில் தவறொன்றும் காண இயலாது.

இத்தகைய பின்னணியில் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்நிதியில் நீதிபதி வந்த போது என்ன நடந்தது என்பதை நாம் ஆலய அர்ச்சகர்களிடம் விசாரித்தோம். சந்நிதி கருவறைக்குள் அர்ச்சகர்கள் தவிர வேறு எவரும் செல்லக் கூடாது என்பது ஆகம நடைமுறை. கருவறைக்கு முன் உள்ள மண்டபத்துள், மேல் சட்டை அணியாமல் அர்ச்சகர் அல்லாத மற்ற அந்தணர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் செல்லலாம் என்பது நடைமுறை. அவ்வாறு கருவறைக்கு முன் உள்ள அர்த்த மண்டபத்தை அடுத்த உள்பகுதியில் ஸ்தலத்தார் உள்ளிட்ட பிரபந்தம் பாடும் நபர்கள், விஐபி.,க்கள் மேல் சட்டை இல்லாமல் சென்று தரிசித்துக் கொண்டிருந்தபோது, தாமும் அவ்வாறு செல்ல நீதிபதி மகாதேவன் விரும்பினாராம். அதற்கு அர்ச்சகர் ஒருவர் இங்கே மேல் சட்டை அணிந்து ஆடவர் உள்ளே வரக்கூடாது என்பதால் தாங்கள் இந்த படியின் அருகில் நின்று தரிசிக்கலாமே என்று கூறியுள்ளார்.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

தாம் உள்ளே செல்ல முற்பட்ட போது, தன்னைத் தடுத்ததால் ஏற்பட்ட ஏமாற்றத்தாலும் கோபத்தாலும், படியின் இந்தப் பகுதியில் நின்று தரிசிப்பதற்கும் படியை அடுத்து உள்ளே நின்று தரிசிப்பதற்கும் என்ன பெரிய வேறுபாடு வந்துவிடப் போகிறது என்று சொல்லிக் கொண்டே, படியை அடுத்து கதவின் அருகே நின்று கொண்டு தரிசனம் செய்துள்ளார்.

நீதிபதியே ஆயினும், ஆலய நெறிமுறையை மீறுவது தவறான முன்னுதாரணம் என்று கூறுகின்றார்கள் அர்ச்சகர்கள். அவர் தனது மேல் சட்டையைக் கழற்றிவிட்டு உள்ளே வந்திருக்கலாம், ஆனால் தமிழார்வமும் பக்தி இலக்கியங்களில் தேர்ச்சியும் கொண்டு ஆண்டாள் பேரில் பக்தி நிறைந்த நீதிபதி, தாமும் அந்த ஆலய நடைமுறைக்கு உட்பட்டு, மேல் சட்டையைக் கழற்றிவிட்டு அருகேயே நின்று தரிசித்திருக்கலாம்! ஆனால் அதனைத் தடுத்த அர்ச்சகரை ஒருமையில் பேசியது தவறு! ஆண்டவன் பணி செய்யும் ஒருவர் தம் ஆலய சட்டதிட்டத்தில் பிடிப்புடனும் உறுதியுடனும் இருப்பதை நீதிபதி பாராட்டியிருக்க வேண்டும், மாறாக ஒருமையில் பேசி அணுகியிருப்பது ஏமாற்றமளிக்கிறது என்கின்றனர் அங்குள்ளோர்.

ஆனால், இந்த விவகாரம் நாத்திகர்களால் வேறு விதத்தில் திரித்து பரப்பப் பட்டது. கருவறைக்குள் சென்றார் என்ற செய்திப் பகிரல்கள் பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

இருப்பினும் இந்த விவகாரம் குறித்து வேறு சிலர் கூறுகையில், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேலை முடக்க நினைத்து தோற்றுப் போனவர்கள் இப்போது அடுத்தடுத்து வலையை விரிக்கிறார்கள். அவருக்குக் கீழே பணிபுரியும் அதிகாரிகளை விட்டே அவருக்கெதிராக புகார் தர வைத்துள்ளார்கள். ஆனால் ஊடகங்கள் இவ்வளவு விளம்பரம் தந்தும் பிசுபிசுத்துப் போனது அந்தக் குற்றச்சாட்டு.

இப்போது வழக்கை விசாரித்து வரும் உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவனை குறிவைத்து வதந்திகளை கிளப்பியிருக்கிறார்கள். வழக்கம்போல ஊடகங்களில் தங்களுக்கு இருக்கும் செல்வாக்கை வைத்து நீதிபதி மகாதேவனை முடக்க நிச்சயம் அறநிலையத் துறையில் உள்ளவர்களே முயற்சி செய்வார்கள். இந்த வதந்தியில் அறநிலையத் துறையைச் சேர்ந்த சிலரும் கைகோத்துள்ளனர் என்று தெரிகிறது. அவர்கள் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆலய அர்ச்சகர்கள் மற்றும் கைங்கர்யபரர்களை நீதிபதி மகாதேவனுக்கு எதிராக புகார் தரும்படி மிரட்டப்படுவதாகத் தெரிகிறது என்கின்றனர்.

ஆக, முதலில் பொன் மாணிக்கவேல், அடுத்து நீதிபதி என்று இப்போது அறநிலையத்துறை மற்றும் நாத்திக, சிலைக்கடத்தல் பெரும்புள்ளிகளின் தாக்குதலுக்கு இலக்காகியிருப்பது நன்றாகத் தெரிகிறது!

Related articles

Recent articles

spot_img