spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்அப்ரைஸல் என்ற அளவுகோல் எதற்கு? உண்மையின் பின்னே உறையும் சோகம்!

அப்ரைஸல் என்ற அளவுகோல் எதற்கு? உண்மையின் பின்னே உறையும் சோகம்!

இந்திய உற்பத்தி நிறுவனங்களில் ஏதாவது ஒன்றில் அக்கவுன்ட்ஸ் அல்லது அலுவலகப் பணிகளில் கொஞ்சம் நல்ல பெயரோடு வேலை செய்தாலே போதும்… வருஷாவருஷம் குறைந்தது பத்து சதமாவது இன்க்ரீமென்ட் என்று வந்துவிடும். தீபாவளிக்கு போனஸ் வந்துவிடும். அது ஒரு கடமையாகவே கருதப்படும். நான் வேலை பார்த்த ஒரு ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் 2008ம் வருடத்தில் பொருளாதார பஞ்சம் வந்தபோது கம்பெனி ரூ. 100 கோடி அளவுக்கு நஷ்டமானது. ஆனாலும் தொழிலாளர்களுக்கு 10% சம்பள உயர்வு கொடுக்கப்பட்டது. அதற்கு முதலாளி சொன்ன காரணம் தொழிலாளர்கள் தான் எனது “ப்ரெட் அண்ட் பட்டர்”. சம்பள உயர்வு கொடுத்தே ஆக வேண்டும் என்பது. ஆனால் பிபிஓ., ஐடி நிறுவனங்களில் இந்த ‘ப்ரெட் அன்டு பட்டர்’ சமாச்சாரம் எல்லாம் கிடையாது.  தொழிலாளர்கள் மீது முதலாளிக்கு “எனக்காக உழைப்பவர்கள்” என்கிற குறைந்தளவு சென்ட்டிமெண்ட் என்பதும் கிடையாது. காரணம் தொழிலாளர்கள் என்பவர்கள் யார் ? அவர்கள் வாழ்க்கைச்சூழல் என்ன என்பதெல்லாம் மேலை நாட்டில் வாழ்ந்து கொண்டு நம் நாட்டவர்களுக்கு உத்தரவு மட்டுமே போட்டு வேலை வாங்குபவர்களுக்கு தெரியாது. அவர்களுக்கு ‘எண்’ கணக்கு மட்டும் தான் வேண்டும். தொழிளாலர்களின் வாழ்க்கை கணக்கு பற்றி அக்கறை கிடையாது. கறிவேப்பிலை போல வேண்டுமென்றால் சேர்த்துக் கொள்ளவும் வேண்டாமென்றால் தூக்கி எறியவும் தயங்குவதில்லை. அப்ரெய்சல் என்றால் என்ன? ஒருவனை தர மதிப்பீடு செய்வது. எப்படி செய்கிறார்கள்? ‘ஒழுங்கா ஆபீஸ் வர்ரானா? டிசிப்ளீனா இருக்கானா? பொறுப்பா வேலை செய்றானா? இங்க்லீஷ் நல்லா பேசி கஸ்டமரை கவர்கிறானா? முக்கியமாக மேனேஜர் சொல்வதை ஏன் எதற்கு என்று கேட்காமல் ராப் பகலானாலும் நேரம் காலம் பார்க்காமல்…. முடியாது என்று எதையுமே சொல்லாமல் வேலை செய்கிறானா?’ இப்படி பல இத்யாதிகள். இவற்றையெல்லாம் வைத்து ஒரு ஆளுக்கான மதிப்பீட்டை அந்த மேனேஜர் நிர்ணயிக்க வேண்டும். அவர் நிர்ணயிக்கும் மதிப்பீட்டை வைத்து தான் ஒருவனது எதிர்காலமே அடங்கும். அந்த நபரிடம் என்றைக்காவது முறைத்துப் பேசி ஒரு நாள் ஒரு நேரம் மட்டுமாவது சண்டை போட்டுவிட்டால் தொலைந்தது சங்கதி. அப்புறம் நம் எல்லா மதிப்பிட்டு ரேட்டிங்கும் அவன் கையில். “ஏன் எனக்கு இந்த வருஷம் சம்பளம் ஒசத்தலை?” என்று கேட்டால் போதும், “ஆங் உனக்கு சரியா ரேட்டிங் வர்லை.. நீ லேட்டா வர்ர.., நீ கோ அப்பரேட்டிவ்வா இல்லை… நீ ஆபீஸ் டீசன்ஸி மெயின்டெயின் பன்றதில்லை,… சொன்னதை கேட்டு வேலை செய்யாததால பொரொடக்டிவிடி அடிவாங்குது’ என்று தனக்கு தோன்றுதெல்லாம் சொல்லி கேட்டவர் வயிற்றில் அடிப்பார்கள். இதே ஒரு மேனஜருக்கு சொம்படித்து கைக்கூலியாக இருப்பவனாக இருந்தால் அவன் செய்யும் வேலையிலேயே என்ன குறை இருந்தாலும் பரவாயில்லை, அவனது நிறைகள் தான் மேனேஜர் அல்லது டீம் லீடர் கண்களுக்கு தெரியும். இப்படி தனி மனிதர்களின் சொந்த விருப்பு வெறுப்புக்களுக்கு உட்பட்டே பலரது சம்பாளமும் அது சார்ந்த அவரது சொந்த வாழ்வும் இருக்கிறது. நிறுவனங்கள்  தொழிலாளர்களுக்கு கட்டாயம் இன்னென்ன காரியங்கள் செய்தாக வேண்டும் என்கிற வரை முறை பிபிஓ ஐடி நிறுவனங்களுக்கு இல்லை அல்லது அவ்வாறு இருக்கும் சட்டங்களில் இருந்து பல நிறுவனங்கள் பல்வேறு ஓட்டைகள் வழியாக விலக்கு பெற்று விடுவதால் பிபீஓ ஐடி தொழிலாளர்களின் வாழ்வும் எதிர்காலமும் கேள்விக்குரியதாகவே இருக்கின்றது. தொடர்ந்து சில வருஷங்களுக்கு சம்பள உயர்வை வேண்டுமென்றே கொடுக்காமல் இருந்தால் அவர்களாகவே போய்விடுவார்கள் என்கிற கணக்கில் சிலருக்கு குறிவைத்து குடுக்க மாட்டார்கள். அப்படியும் வெக்கம் சூடு சொரனை இல்லாமல் இருப்பதையாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டுமே என்று பேசாமல் இருந்து விட்டால் இன்னும் மோசம். அவன் தான் கேக்கலையே எதுக்கு குடுக்கனும் என்பார்கள். மேற்கொண்டு சிலருக்கும் மட்டும் கொடுக்கலாம் என்று இவர்கள் தேர்வு செய்யும் ஆட்கள் யாராக இருக்கும் என்றால், அந்த மேனேஜருக்கும் டீம் லீடருக்கும் தினசரி சொம்படிக்கும் மிக நல்லவர்களுக்காக மட்டும் தான் இருக்கும். பெர்பாமன்ஸ் அப்ரைசல் என்பதே பிடித்தவனுக்கு குடு பிடிகாதவனை துறத்து என்கிற ஓரவஞ்சனை திட்டம் தானே ஒழிய உண்மையிலேயே திறமை உள்ளவனுக்கு எதுவும் கிடைக்குமா என்பது சம்பந்த பட்ட இட ஆட்களை பொறுத்து மட்டுமே! ஒரு மனிதன் எட்டு மணிநேரம் செய்ய முடிகிற வேலை என்பதற்கு மாறாக மூன்று மடங்காக வேலை வாங்கி பலகோடி ரூபாய்களுக்கான உழைப்பு சுரண்டலை செய்துவிட்டு ஆனால் பெர்பார்மன்ஸ் இல்லை உனக்கு கிடையாது, உனக்ககு ஆயிரம் குடுத்தால் அதிகம் என்று சொல்லுவதெல்லாம் மிகப்பெரிய அயோக்கியத்தனம். ஆனால் அதைதான் பிபிஓ ஐடி நிறுவனங்கள் செய்கின்றன. ஒரு பிபிஓ நிறுவனத்தில் ஆவரேஜ் பணியாளர் என்று ஒருவரை சொல்வதே ஒரு நாளைக்கு சராசரியாக ஒருவர் செய்ய முடிகிற வேலையில் இருந்து மூன்று மடங்கு வேலையை திணித்து அதை எவ்வளவு வேகமாக அவரை வைத்து செய்து வாங்க முடியுமோ அப்படி வேலை செய்ய வைத்தால். அதை மூச்சு முட்ட சமாளித்து செய்யும் ஒருவர்தான் ஆவரேஜ் தொழிலாளி. அந் நபரே ஓரிரு வருஷங்கள் மாடு மாதிரி உழைத்துவிட்டு ‘அய்யோ ரொம்ப குத்தாதீங்க இதுக்கு மேல முடியலை’ என்று விழிபிதுங்கி நின்றால் அவன் பிலோ ஆவரேஜ் அல்லது ‘Non-Performer’. அவனை மேற்கொண்டு கம்பெனியில் வைக்கலாமா வேண்டாமா என்கிற டிஷ்கஷன் ஓடும். பின் தொடர்ந்து அப்ரைசல் என்கிற அயோக்கியத்தனம் மூலமாக அவன் புறக்கனிக்கப்படுவான். ஒன்றும் தரப்பட மாட்டாது. ‘நீ சரி இல்லை. உன்னால் கம்பெனிக்கு ஒன்றும் லாபமில்லை , வேறு வேலை தேடுவது உனக்கு நல்லது என்று நேரடியாக சொல்லிவிடுவார்கள். ஆக அத்தகைய அதீத உடல் உழைப்பால் கண் பார்வை கெட்டுப்போய், தலை முடி கொட்டிப்போய், ராத்தூக்கம் போய், ஷுகர், பிரஷர் ,ஹார்ட் ப்ராப்ளம் என எல்லா வியாதியையும் வாங்கிகொண்டு ஒரு ‘நான் – பெர்ஃபார்மர்’ என்ற கெட்ட பெயருடன் வெளியேறுவதை தவிர அந்த அடிமாட்டு தொழிலாளிக்கு வேறு கதி கிடையாது. ஏற்கனவே அடிமாடான இவனுக்கு வெளியே வேலையும் செய்ய தெரியாது. எதிர்காலம் கேள்விக்குறிதான்??? ஒருமனிதன் ஒரு நாளில் சராசரியாக இவ்வளவு நேரம் மற்றும் இவ்வளவு வேலை தான் செய்ய முடியும் என்கிற அளவு கருதியே எட்டு மணி நேரம் என பணி நேரம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இன்றை பிபிஓ ஐடி நிறுவங்களில் குறைந்த பட்சம் 10 மணிநேர வேலையாக அது மாறிவிட்டது. சிலருக்கு அதுவும் 24*7 என்ற ரீதியில் எந்நேரம் பார்த்தாலும் லேப்டாப்பும் கையுமாக ஏதாவது ஒரு கஸ்டமருக்கு வெளிநாட்டில் இருப்பவருக்கு பதில் சொல்லிக் கொன்டிருப்பார்கள். இந்த அதீத பணிச்சுமைக்கெல்லாம் தனியாக எந்த பலனும், தொகையும் பெரும்பாலான நிறுவங்கள் கொடுப்பதில்லை என்பது ஒரு பரிதாபம். இந்திய தொழிலாளர் சட்டத்தின் எந்த விதிகளுக்குள் இவர்கள் உட்பட்டு செயல்படுகிறார்கள் என்பதும் புரியாது. வருஷம் முழுவதும் உழைத்து லாபம் ஈட்டிக் கொடுக்கும் தொழிலாளர்களுக்கு அதில் கொஞ்சத்தை பிரித்து கொடுப்பதாகவே போனஸ் என்கிற விதி நிர்ணயிக்கப்பட்டிருக்கும். அதிலேயும் பெர்பார்மன்ஸ் போனஸ் தான் என்று சொல்லி ஏமாற்றி விடுவார்கள். கேட்டால் யாருக்கும் பெர்பார்மன்ஸ் இல்லை. எல்லாரும் தெண்டம் என்று ஒரே வார்த்தையும் சொல்லி வருஷம் முழுவதற்குமான உழைப்பை ஒரே சொல்லில் சுரண்டி விடுவார்கள். ஒன்றுமில்லாமல் சம்பளத்துக்கு வேலை செய், இல்லையேல் போய்விடு என்ற நிலைமைக்கு தள்ளி விடுவார்கள். உள்நாட்டு உற்பத்திக்கும் உதவாமல் வெளி நாட்டுக்காரனுக்கு வேலை செய்ததால் சொந்த வாழ்க்கைக்கும் பெரிய பயனும் இல்லாமல் ஏதோ கூலிக்கு மாரடிக்கும் கூட்டமாக இன்றைய ஐடி பிபிஓ நிறுவன தொழிலாளர்கள் நிலை ஆகிவிட்டது. ஒரு காலத்தில் சராசரி இந்திய நிறுவன தொழிலாளர்களின் சம்பளத்திற்கு மூன்று மடங்கு சம்பளமாக இருந்தது ஒரு பிபிஓ நிறுவனத்திற்கு புதிதாக சேருபவரின் சம்பளம். ஆனால் இன்றைக்கு இன்ஜினியரிங் படித்து வந்தாலும் ஒன்பது முதல் பன்னிரண்டாயிரம் தருவோம் என்பார்கள். எக்ஸ்போர்ட்டு கம்பெனி டெய்லர் அதைவிட அதிகம் சம்பாதிப்பான். ஐடியில் கொஞ்சம் கூடுதல் கிடைக்கும், இருந்தாலும் நம்பகத்தன்மை இருக்காத நிலைமையே! இப்படி நாளுக்கு நாள் ஐடி பிபிஓ துறைகளில் பணிப்பாதுகாப்பு கேள்விக்குறி ஆவதும், சம்பள உயர்வோ பிற வாழ்வியல் பலன்களோ எதுவுமே இல்லாத நிலைமைக்கு இறங்கிக் கொண்டிருக்கும் போது இந்நிறுவனங்களை ஏன் இந்திய தொழிலாளர் சட்டங்களுக்கு முழுமையாக உட்படுத்தக்கூடாது. குறைந்த பட்ச ஊதியம், போனஸ், வருஷமொரு முறை சம்பள உயர்வு என்பதை எல்லாம் கட்டாயமாக ஏன் வரையறை செய்ய கூடாது? ரத்தம் உறிஞ்சும் அட்டைகளைப்போல இளம் தொழிலாளர்களை சராசரிக்கும் பல மடங்குக்கு மேல் பிழிந்து வேலை வாங்கி விட்டு பிறகு நடுத்தர வயதை அவர்கள் தாண்டும் போது தூக்கி எறிந்து விட காய் நகர்த்தும் இந்த அவுட் சோர்ஸிங்க் துறைக்கு தொழிலாளர் நலன் சார்ந்த கட்டாய சட்டங்கள் சிலவற்றை ஏன் பிறப்பிக்கக் கூடாது? தொழிலாளர் நலன் மீது எந்த விதமான கவனத்தையும் செலுத்தாமல் மேக் இன் இன்டியா என்று சொல்லி இன்னும் அந்நிய முதலாளிகளுக்கு சிகப்புகம்பளம் விரித்து இன்னும் எத்தனை இளைஞர்களை அடிமைகளாக அந்நிய நாட்டிற்கு அடகு வைக்கப்போகிறோம்? இளைஞர்களே சிந்திப்பீர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe