பூனாவில், விமானப் படை அதிகாரிகளுக்கு, ஆப்தே பணி புரியும் விதம் மிகவும் பிடித்துப் போகவே அவருக்கு நிரந்தர பணி நியமனம் தரத் தயாராக இருந்தனர். ஆப்தேயும் அதை மிகுந்த மன மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்.
ராயல் இந்திய விமானப் படையில் ஒரு அதிகாரியாக இருப்பது,ஒரு நல்ல, மரியாதைக்குரிய வசதி வாய்ப்புகளுடன் கூடிய, ஓய்வு பெற்ற பிறகு பென்ஷனுடன் கூடிய…. அருமையான வாய்ப்பாக ஆப்தேக்கு தோன்றியது.
ஆனால் சில மாதங்களிலேயே ஆப்தே அந்த வேலையை ராஜினாமா செய்தார். தற்காலிக, போர் காலப் பணியே போதுமென்றார். அதற்கு அவர் கூறிய காரணம், ஆங்கிலேய அதிகாரிகளுக்கு ஏற்புடையதாக இருந்தது.
சில மாதங்களுக்கு முன்னர்தான், ஆப்தேயின் தந்தை மரணமடைந்து இருந்தார். விதவைத் தாய், சகோதர, சகோதரிகள் என ஒரு பெரிய குடும்பத்தையே தான் பார்த்துக் கொள்ள வேண்டியிருப்பதால், பூனாவை விட்டு வேறு ஊருக்கு நகர முடியாத நிலை இருப்பதாகக் கூறினார்.
நிரந்தர உத்தியோகத்தை (PERMANENT COMMISSION) ஏற்றுக் கொண்டால் பணி மாறுதல்களுக்கு வாய்ப்பு அதிகம் என்பது அவரது வாதமாக இருந்தது.
ஆப்தேயின் இந்த முடிவிற்கு வேறு ஒரு முக்கியக் காரணமும் இருந்தது.
தன்னுடைய குழந்தையின் உடல் நிலை காரணமாக, அவருடைய மனைவி சம்பா மன நிலை பேதலித்து, குழந்தையை பற்றியே புலம்பிய வண்ணம் இருந்தார். வேறு எதிலேயும் அவருக்கு கவனம் இல்லாது இருந்தது.
குழந்தையை ஓரு மன நலக் காப்பகத்தில் வைத்து மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு அவருடைய உறவினர்களும், நண்பர்களும் கூறிய யோசனையை ஆப்தே நிராகரித்தார். இப்படியொரு அப்பாவியான, தன்னையே நம்பி பிறந்து விட்ட குழந்தையை, மன நல காப்பகத்தில் சேர்ப்பது சரியில்லை, மேலும் தன் மனைவியை இத்தகைய செயல் முற்றிலுமாக நொறுங்கச் செய்யும் என்று கருதினார்.
இத்தகைய பிரச்சனைக்கு தீர்வே இல்லை. ஆனால் குறைந்த பட்சம் அருகில் இருந்தால் ஆசுவாசப்படுத்தவாவது முடியும், மாற்றலாகிப் போய் விட்டால் இது சாத்தியம் இல்லை என்று கருதியது, ராணுவத்தில் நிரந்தர உத்தியோகத்தை ஏற்காததற்கு முக்கிய காரணமாகும்.
பூனாவிலேயே தன்னை வைத்திருக்கும் வரையில் தற்காலிகப் பணியில் இருப்பது தவறில்லை என்று கருதினார்.
இந்த முக்கிய முடிவை எடுத்தப் பிறகு,போருக்கு பின் என்னவென்று,ஆப்தே முடிவுச் செய்ய வேண்டியிருந்தது.
இதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் போதே ராணுவத்திற்கு ஆட்கள் சேர்ப்பது நிறுத்தப்பட்டது. ஆப்தேவிற்கு, இப்போது நிறைய நேரமிருந்தது.
இந்த நிலையில்,கட்சியின் கொள்கையை பரப்புவதற்காக,ஒரு புது முயற்சியில் இறங்கப் போவதாகவும், அதில் தன்னுடன் இணைந்து பணியாற்ற விருப்பமா என நாதுராம் கோட்ஸே கேட்ட போது, ஆப்தே உடனே ஒப்புக் கொண்டார்.
அந்த புது முயற்சி, ஒரு தினசரி பத்திரிகையை தொடங்குவது. அதற்காக சாவர்க்கர் 15000 ரூபாய் கடனாகக் கொடுத்து உதவினார்.
( தொடரும் )
#காந்திகொலையும்பின்னணியும்
– எழுத்து: யா.சு.கண்ணன்




