spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைஎழுவர் விடுதலையில் திருநாவுக்கரசர்களுக்கு வாய்ப்பூட்டு போடுக!

எழுவர் விடுதலையில் திருநாவுக்கரசர்களுக்கு வாய்ப்பூட்டு போடுக!

- Advertisement -

உலகிலேயே மிகவும் கொடுமையானதாக சட்டப்படி விடுதலை செய்யப்பட வேண்டிய எழுவரைச் சிறையில் அடைத்து வைத்திருப்பதைக் கூறலாம். இதனால், இவர்களும் இவர்களின் குடும்பத்தினரும் துயரங்களில் உள்ளனர்.

எழுவர் தொடர்பில், சட்டம் பயின்ற மக்களிடம் செல்வாக்கு பெற்றிருந்த, சட்டப்பேரைவத் துணைத்தலைவராக இருந்த திருநாவுக்கரசர் கொலையில் ஈடுபட்டவர்கள் மீது கருணை காட்டுவது ஏற்புடையதல்ல என்று உளறியிருக்கிறார். நல்லவர்களுக்குக் கருணை காட்ட என்ன தேவை உள்ளது? குற்றம் புரிந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும்தானே கருணை காட்ட வேண்டும்.

ஆளுநருக்கு இது தொடர்பில் யாரும் அழுத்தம் கொடுக்கக் கூடாது எனப் காங்கிரசுகட்சியின் தமிழகத் தலைவர் அழகிரி கூறியுள்ளார். “காலத்தாழ்ச்சியான நீதியும் அநீதியாகும்” என நீதித்துறையே கூறுகிறது. அவ்வாறிருக்க ஆளுநர் காலத்தாழ்ச்சியின்றி உடனே முடிவெடுக்க வேண்டும் என வலியுறுத்த ஏன் மனம் வரவில்லை? சோனியா குடும்பத்தினர் எழுவர் குறித்து வெளிப்படையாக ஒன்றும் மறைவாகக் கட்சியினரிடம் வேறொன்றுமாகக் கூறியுள்ளார்களா?

எழுவரைத் தண்டிப்பதில் காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகளும் நீதித்துறையினருமே இவர்களுக்குப் பொய்யான இட்டுக்கட்டப்பட்ட சான்றாவணங்களின்படித் தண்டனை வழங்கப்பட்டதை ஒத்துக் கொண்டுள்ளனர். இவற்றின் அடிப்படையில் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப் பெற்று இழப்பீடும் வழங்கப்பட்டிருக்க வேண்டும். மாறாகச் சட்டப்படியான குறிப்பிட்ட காலச் சிறைவாசத்திற்குப் பின்னரான விடுதலையை மத்திய அரசும் அதன் ஆணைக்கிணங்கத் தமிழக ஆளுநரும் மறுத்து இழுத்தடித்துக் கொண்டிருப்பது பெருங்கொடுமையாகும்.

சட்டத்தை மதிப்பதாகக் கூறும் காங்கிரசுகட்சியினர் தங்கள் கட்சிக் குற்றவாளிகளுக்குப் பரிசு்களாகப் பதவிகள் வழங்குகின்றனர். பிறருக்கு மரணத்தைப் பரிசாக வழங்க விரும்புகின்றனர்.

காங்கிரசுகட்சியின் பொறுப்பாளர்களாக இருந்த போலநாத்து பாண்டே(Bholanath Pandey), தேவேந்திர பாண்டே (Devendra Pandey) ஆகிய இருவரும் 20.12.1978இல் இந்திய வானூர்தி பறத்தி எண் 410 ஐக் கடத்தினார்கள். நெருக்கடி நிலைக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த சனதா கட்டி ஆட்சியில் நெருக்கடி நிலைத் துன்பஙு்களுக்குக் காரணமான இந்திரா காந்தியைக் கைது செய்திருந்தார்கள். அவரை விடுதலை செய்யவும் அவர் மகன் சஞ்சய் காந்திக்கு எதிரான அனைத்துக் குற்ற வழக்குகளையும் திரும்பப் பெறவும் வலியுறுத்தியே 126 பயணிகள் இருந்த இந்த விமானக் கடத்தல். அவர்கள் பயன்படுத்தியது பொம்மைத் துப்பாக்கியும் மட்டைப்பந்தும். எனினும் கடத்தல் குற்றம்தான். எழுவர் விடுதலையில் இன்றைக்குச் சட்டப்படி நடக்க வேண்டும் என்று கூறும் காங்கிரசுகட்சி இந்த இருவருக்கும் பரிசு வழங்கும் முறையில் சட்டமன்ற உறுப்பினராக்கியது; பதவிகள் அளித்தது தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புகளைத் தொடர்ந்து வழங்கியது.

தேவேந்திரர் உத்தரப்பிரதேசப் காங்கிரசு(காங்.) கட்சியின் பொதுச்செயலராக நியமிக்கப்பட்டார். போலாநாத்து இந்திய இளைஞர் காங்கிரசு(காங்.) கட்சியின் பொதுச்செயலராகவும் இந்தியத் தேசியப் காங்கிரசு(காங்.) கட்சியின் செயலராகவும் நியமிக்கப்பட்டார். அவர், 1991,1996, 1999, 2004, 2009, 2014 ஆகிய ஆண்டுகள் தொடர்ந்து சலேம்பூர்(Salempur) நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளராகவும் ஆக்கப்பட்டார்.

கடத்தல்காரர்களுக்குத் தொடர்ந்து பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்திய கட்சி, இன்றைக்கு அப்பாவிகளைச் சட்டப்படி விடுவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது.

இராகுல்காந்தியின் கட்சி தங்கள் குடும்பத்தினருக்காகக் கொலை செய்பவர்களுக்கு ஒரு நீதி, தன் குடும்பத்தில் ஒருவரைக் கொலை செய்தால் அதற்கொரு நீதி என்பதைக் கொள்கையாகக் கொண்டுள்ளனர். சான்றுக்கு இரண்டு பார்ப்போம்.

இந்திராகாந்தியின் படுகொலையின் தொடர்ச்சியாக 1984-ஆம் ஆண்டு, நவம்பர் 1 முதல் 4-ஆம் நாள் வரை காங்கிரசுகட்சியின் தலைவர்கள் தலைமையில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அரசு தரப்பில் 3,300 பேர் கொல்லப்பட்டதாகக் கூறினாலும் எண்ணிக்கை மிகுதியாக இருக்கும் என்றே பிற தரப்பில் கூறுகின்றனர்.

ஆயிரக்கணக்கிலான சீக்கியர்கள் எரிக்கப்பட்டும் வன்முறையாகத் தாக்கப்பட்டும் இறந்ததற்கும் பெண்கள் கற்பழிப்பிற்கு உள்ளானதற்கும் உடைமைகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டதற்கும் மனம் வருந்தவில்லை காங்கிரசு கட்சி. அதற்குப் “பெரிய மரம் தரையில் விழும்போது, பூமி சிறிதளவு அதிரும்” என்று சொன்னவர்தான் அன்றைய தலைமை அமைச்சர் இராசீவு காந்தி.

சீக்கியர் படுகொலைகளுக்குக் காரணமாகப் பெயரளவிற்குச் சிலர் மீது மட்டுமே குற்ற வழக்கு தொடரப்பட்டது. அவர்களுள் குறிப்பிடத்தகுந்த ஒருவர் சஞ்சன் குமார்(Sajjan Kumar). இவருக்குக் கீழமைவு மன்றத்தில் விடுதலை வழங்கப்பெற்று மேல் முறையீட்டில் 17.12.2018 அன்று வாணாள் தண்டைன வழங்கப் பெற்றது. ஆனால், அதற்கு முன்னதாகக் கொலைப்படைத் தளபதியைச் சிறப்பிக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற ஊரக மேம்பாட்டுக் குழு உறுப்பினர் முதலான பரிசுகள் வழங்கப்பெற்றன.

நானாவதி ஆணையம் மூலம் சீக்கியர் படுகொலைகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் காங்கிரசுகட்சியின் மூத்த தலைவர் கமல்நாதன் (Kamal Nath).

இவர் 1985, 1989, 1991,1998,1999, 2004, 2009 இல் மக்களவை உறுப்பினராக ஆக்கப்பட்டார். இவருக்கு 1991 – 1995 இல் சுற்றுச்சூழல் வனங்களுக்கான (தனிப் பொறுப்பு) மத்திய இணை அமைச்சர் பதவி; 1995 – 1996 இல் நெசவுத்தொழில்களுக்கான (தனிப் பொறுப்பு) மத்திய இணை அமைச்சர் பதவி; 2001 – 2004 வரை, காங்கிரசு கட்சியின் பொதுச்செயலாளர் பதவி; மே 23, 2004 இல் இருந்து வணிகம் & தொழில்துறையின் மத்திய அமைச்சர் பதவி; 2009 இல் சாலைப் போக்குவரத்து – நெடுச்சாலைகள் துறை மத்திய அமைச்சர் பதவி; 2018 இல் மத்தியப் பிரதேசத்தின் முதல்வர் பதவி எனத் தொடர் பரிசுகள் வழங்கப் பெற்றன.

தங்களுக்காகக் கொலைத்திட்டங்களை நிறைவேற்றியவர்களுக்குப் பதவிப்பரிசுகள் வழங்கும் கட்சிதான் இன்றைக்கு ஆளுநரைக் காலத்தாழ்ச்சியின்றி முடிவெடுக்க வேண்டினால் சட்டப்படி நடவடிக்கை இருக்க வேண்டும் என்கிறது.

எனவே, இனியும் காங்கிரசுகட்சியினர் நடிக்க வேண்டா. சோனியா குடும்பத்தினர், மன்னித்ததாக நாடகமாடாமல் தங்களுக்கு இன்னும் மன வருத்தம் இருப்பதாக வெளிப்படையாகச் சொல்லட்டும். ஆனால், இதனால், விடுதலை பாதிக்கப்படாது. குற்றம் செய்ததாகக் கருதித் தண்டனை வழங்கிய பின்னர் பிறரது கருத்துகளுக்கு இணங்க முடிவெடுக்காமல் வாலாயமாக வழங்கப்பெறும் விடுதலையை வழங்க வேண்டும்.

அல்லது உண்மையிலேயே அப்பாவிகள் சிக்க வைக்கப்பட்டுள்ளனர்; இவர்கள் சிறைத் தண்டனையால் அடைந்த துன்பங்கள் போதும்; விடுதலை செய்யப்பட வேண்டும் எனக் கருதினால், ஆளுநருக்கு எழுத்து மூலமாகத் தங்கள் குடும்பத்தின் சார்பிலும் கட்சியின் சார்பிலும் எழுவரையும் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி அது நிறைவேறுவதற்குப் பாடுபட வேண்டும்.

அக்கட்சித் தலைவர் இராகுல், இங்கே சட்டம் தெரியாமலும் மனித நேயமின்றியும் உளறிக் கொண்டிருக்கும் திருநாவுக்கரசர்களுக்கு வாய்ப்பூட்டு போட வேண்டும்.

நெடுங்காலம் சிறைவாசத்தில் வாழ்க்கையைத் தொலைத்த திருவாளர்கள் சுதேந்திரராசா என்கிற சாந்தன், சிரீகரன் என்கிற முருகன், பேரறிவாளன் என்கிற அறிவு, திருமதி நளினி, இராபர்ட்டு பயசு, செயகுமார், இரவிச்சந்திரன் ஆகியோர் விடுதலை செய்யப்பட இராகுல் காந்தியும் குரல் கொடுப்பதன் மூலம் தங்கள் தமிழின எதிர்ப்புச் செயல்பாடுகளுக்குக் கழுவாய் தேடிக்கொள்ளட்டும்!

  • கட்டுரை: இலக்குவனார் திருவள்ளுவன்
    mail id: [email protected]

1 COMMENT

  1. அயலெழுத்துக்கலப்பற்ற கட்டுரையை அவ்வாறே வெளியிடும் உங்கள் இதழறத்திற்கும் தமிழ்ப்பற்றிற்கும் பாராட்டு. நன்றி.
    அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! தமிழே விழி! தமிழா விழி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Follow us on Social Media

19,173FansLike
387FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,896FollowersFollow
17,300SubscribersSubscribe