‘நள்ளிரவு ஆனாலும் குளித்து தூங்கு..!’

 

 
நமது நாட்டில் குளிப்பது என்பது பெரும்பாலும் காலை நேரத்தில் நிகழும் ஒரு நிகழ்வு. கடினமான உழைப்பு கொண்ட சிலர் மட்டும் கசகசப்பான வியர்வையில் இருந்து விடுபட இரவிலும் குளிப்பதுண்டு. ஆனால் சீனாவில் நிலைமையே வேறு.
 
 
அங்கு ராத்திரி 10 மணிக்கு மேல் எதிர்படும் எல்லோரிடமும் கேட்கும் கேள்வி ஒன்றுதான். “குளிச்சாச்சா..?” என்பது தான் அது. அக்கறையான இந்த விசாரிப்பு புதிதாக அங்கு சென்றவர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை தரும். இரவுக்கு குளியல் என்பது சீனாவில் பாரம்பரியமாக தலைமுறை தலைமுறையாக கலந்து விட்ட ஒரு கலாச்சாரம்.
 
ஒருவேளை யாராவது குளிக்கவில்லை என்று பதில் தந்தால் அவ்வளவுதான். அவர்களை ஒரு அற்ப பதர் போல் படுகேவலமாக பார்ப்பார்கள். இரவில் குளிக்கா விட்டால் சீனர்கள் பார்வையில் அவர்கள் ஒரு அசுத்த ஜீவி. சீனர்கள் இரவில் குளித்து விட்டு சுத்த பத்தமாக தூங்கப்போவார்கள். குளிக்காமல் ஒரு நாளும் அவர்கள் தூங்கியதில்லை. குளித்து முடித்து இரவு உடையான நைட்டியை அணிந்து விட்டால் எந்த வேலையாக இருந்தாலும் சரி பெண்கள் வீட்டை  விட்டு வெளியே வர மாட்டார்கள். நம்மூர் பெண்கள் போல் நைட்டியோடு ஊரை வலம் வரும் பழக்கமெல்லாம் அங்கில்லை. 
 
 
ஆண்களும் கூட அப்படிதான், இரவு உடைக்கு மாறிய பின் வெளியே எங்கும் சுற்றப்போக மாட்டார்கள். தூய்மையோடு தூங்க வேண்டும் என்பது சீனர்களின் ரத்தத்தோடு கலந்து விட்டப்பழக்கம். 
 
சரி, இரவில் தான் குளிக்கிறார்கள் என்றால் காலையில் என்ன பண்ணுவார்கள்? சும்மா சும்மா குளித்துக்கொண்டே இருக்கமுடியுமா..? அதனால் காலையில் பல் தேய்த்து, முகம் கழுவிவிட்டு ஆபீசுக்கு அடித்துப்பிடித்து ஓடுவார்கள். காலையில் குளிப்பதெல்லாம் அவர்கள் சரித்திரத்தில் இல்லாத ஒன்று. 
 
 
காலையில் அரக்கப்பரக்க குளிக்க வேண்டும். நிம்மதியாக  தேய்த்துக் குளிக்க முடியாது. ராத்திரி என்றால் நம் இஷ்டத்துக்கு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் குளிக்கலாம். அதோடு பகல் முழுவதும் பார்க்கும் வேலை, டென்ஷன், அழுக்கு, வியர்வை, களைப்பு எல்லாம் ஓடிப்போய்  விடும் என்று நீண்ட லெக்சர் கொடுக்கிறார்கள் சீனர்கள்.
 
இவர்களின் இரவுக் குளியலை பார்த்து மற்ற நாட்டினர் ஆச்சரியப்பட்டு கேட்பது, “நீங்கள் ஏன் இரவில் குளிக்கிறீர்கள்?” என்று அதற்கு அவர்கள் தரும் பதில், “நீங்கள் ஏன் காலையில் குளிக்கிறீர்கள்?” என்பதுதான்.
 
சீனர்களின் ஆத்திச்சூடியில் ‘கூழானாலும் குளித்துக்குடி’ என்பது ‘நள்ளிரவு ஆனாலும் குளித்து தூங்கு’ என்றிருக்கிறது போலும்.!