ப.சிதம்பரத்துக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட்: சிபிஐ தகவல்!

இந்தியா சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்

p chidambaram - 2026

முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமீனில் வராத பிரிவில் வாரண்ட் பிறப்பிக்கப் பட்டுள்ளதாக சிபிஐ., தரப்பு நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டுள்ள மனுவில், சிதம்பரத்திற்கு ஜாமீனில் வராத பிரிவில் வாரண்ட் பிறப்பிக்கப் பட்டதாகவும், அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது! எங்கள் விசாரணைக்கு ப. சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை என்று சிபிஐ., கூறியுள்ளது. அதனால் அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று சிபிஐ கோரியது.

முன்னதாக, சிபிஐ., அலுவலகத்தின் 4வது தளத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் ப.சிதம்பரத்திடம் விசாரணை மேற்கொள்ளப் பட்டது. பின்னர், இன்று காலை தரை தளத்தில் உள்ள அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணைகளில் சிதம்பரம் சிபிஐ.,க்கு ஒத்துழைப்பு கொடுக்க வில்லை என்று கூறப் பட்டது.

சிபிஐ.,யின் விசாரணைக்கு ப.சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை என்பதாலும், சொன்ன பதிலையே திரும்ப திரும்ப சொல்வதால், காவலில் எடுத்து விசாரிக்க  சி.பி.ஐ. தீவிரம் காட்டியது.  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. திட்டம் இட்டது.

சிதம்பரத்திடம் 3 மணி நேரத்திற்கு மேல் நடத்தப்பட்ட விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என சி.பி.ஐ. வட்டார தகவல்கள் தெரிவித்தன. இதை அடுத்து, அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்ற வாதத்தை முன் வைத்து காவலில் எடுக்க சி.பி.ஐ. திட்டம் இட்டது.

இதை அடுத்து தில்லி சிபிஐ., சிறப்பு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார் ப.சிதம்பரம்.

ப.சிதம்பரம் தரப்பில் நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், கபில் சிபல், அபிஷேக் சிங்வி உள்ளிட்டோர் சி.பி.ஐ நீதிமன்றம் வந்தனர்.

முன்னதாக, சிதம்பரம் வந்தபோது, நீதிமன்ற வளாகத்திற்குள் ப.சிதம்பரத்திடம் பேச முற்பட்ட கார்த்தி சிதம்பரத்தை தடுத்து நிறுத்தியது சி.பி.ஐ.

சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹர் முன் சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார்.   சிபிஐ தரப்பு வழக்கறிஞர் பத்மினி சிங் நீதிமன்றம் வந்தார்.  நீதிமன்ற வளாகத்தில் நளினி, கார்த்தி சிதம்பரம் ஆகியோரும் வந்தனர்.  மூத்த வழக்கறிஞர்கள் கபில்சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகியோரும் நீதிமன்றத்தில் இருந்தனர்.

அதன் பின்னர் சிபிஐ நீதிமன்றத்தில் வாதம் தொடங்கியது.  அப்போது, ப.சிதம்பரத்துக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சிபிஐ தரப்பு கூறியது.  வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட 24 மணிநேரத்தில் ப.சிதம்பரத்தை ஆஜர்படுத்தியுள்ளோம் என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப் பட்டது. எங்களின் எந்த கேள்விக்கும் ப.சிதம்பரம் பதில் அளிக்கவில்லை என்றும்,  அவர் எங்களிடம் எதுவுமே பேசவில்லை; பேசாமல் இருப்பது அடிப்படை சுதந்திரமாக இருக்கலாம்; ஆனால் அவர் வழக்கு விசாரணைக்கு எதிராக செயல்படுகிறார் என்று கூறியது சிபிஐ.,!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.