
ப.சிதம்பரம் கைதை கண்டிக்கும் போராட்டத்தில் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் பலர் பங்கேற்காததால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று கைது செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் இளைஞர் அணி சார்பில் சென்னை அண்ணாசாலை தாராபூர் டவர் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை அடையாறு பகுதியில் கராத்தே தியாகராஜன் தலைமையில் காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த தொண்டர்கள் பேரணியாக செல்ல முயன்றபோது போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது, அதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இருந்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கிருஷ்ணசாமி, குமரி அனந்தன் மற்றும் கோபண்ணா உள்ளிட்டோர் ஊர்வலமாக செல்ல முயன்றனர்.

இதற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் இருதரப்புக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்த ஆர்ப்பாட்டங்களில் பல்வேறு காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்கவில்லை என விமர்சனம் எழுந்து உள்ளது.

ப.சிதம்பரம் கைதை கண்டிக்கும் போராட்டத்தில் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் பலர் பங்கேற்காததால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

காங்கிரஸ் தலைவர்கள் கே. ஆர்.ராமசாமி, பீட்டர் அல்போனஸ், விஜயதாரிணி, ஈவிகேஎஸ் இளங்கோவன், தங்கபாலு, சுதர்சன நாச்சியப்பன் உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்கவில்லை.



