யமுனை நதிக் கரையில் அருண் ஜேட்லியின் உடல் தகனம்!

இந்தியா சற்றுமுன்
Arun Jaitley Funeral - 2026

உடல் நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நேற்று காலமானார். அவரது உடல் யமுனை நதிக்கரை ஓரம் அமைந்துள்ள நிகாம்பாத் காட் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

உடல்நலக் குறைவால் அவதிப் பட்டு வந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, கடந்த 9ஆம் தேதி தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த இரு வாரங்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப் பட்டது. செயற்கை சுவாசம் அளிக்கப் பட்டு சிகிசையில் இருந்த அவரது உடல், மருத்துவ சிகிச்சைகளை ஏற்க மறுத்தது. இந்த நிலையில் நேற்று அவரது உயிர் பிரிந்தது.

அருண் ஜேட்லியின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப் பட்டிருந்த அவரது உடலுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து இன்று காலை 10 மணி அளவில் அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, பண்டிட் தீன்தயாள் உபத்யாயா மார்க் பகுதியில் உள்ள பாஜக தலைமையகத்தில் வைக்கப் பட்டது. அங்கு ஏராளமான பாஜக., தொண்டர்கள், நிர்வாகிகள், மூத்த தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

மதியம் 1 மணிக்கு அருண் ஜேட்லியின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. யமுனை நதிக்கரையை ஒட்டியுள்ள நிகாம்பாத் காட் மயானத்திற்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டடு முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

அருண் ஜேட்லியின் சிதைக்கு அவரது மகன் தீமூட்டினார். மழைப் பொழிவுக்கு நடுவே தலைவர்கள் பலர் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.