மிஸ் இந்தியா ஆனார் தில்லி கர்காவ்னைச் சேர்ந்த அதிதி ஆர்யா

இந்தியா

miss-india-aditi-arya மும்பை: கர்காவ்ன் பகுதியைச் சேர்ந்த அதிதி ஆர்யா, ஃபெமினா மிஸ் இந்தியா 2015 பட்டம் வென்றார். 2015-ம் ஆண்டுக்கான இந்திய அழகியை தேர்வு செய்வதற்கான போட்டி நாடு முழுவதும் 13 நகரங்களில் நடந்தது. இதில் கலந்துகொண்ட அழகிகளில் 21 பேர் இறுதிப் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மும்பையில் உள்ள யஷ்ராஜ் ஸ்டூடியோவில் அமைக்கப்பட்ட அரங்கில் மிஸ் இந்தியாவின் 52வது எடிஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பல்வேறு பிரிவுகளைக் கடந்து, இறுதிப் போட்டி நடந்து வந்தது. இதில் 5 பேர் டாப்-5 அழகிகளாகத் தேர்வு செய்யபட்டுள்ளனர். அவர்களில் 3 பேரை நடுவர்கள் தேர்வு செய்தனர். இறுதியில் புது தில்லி கர்காவ்ன் பகுதியைச் சேர்ந்த அதிதி ஆர்யா என்பவர் முதல் இடத்தைப் பிடித்து இந்திய அழகியாகத் தேர்வு செய்யப்பட்டார். ஆஃப்ரீன் ரசேல் வஸ், வர்திகா சிங் ஆகியோர் 2-வது, 3-வது இடங்களைப் பிடித்தனர். அழகிகளைத் தேர்வு செய்ய நடிகர்கள் ஜான் ஆபிரகாம், அனில்கபூர், நடிகைகள் மனிஷா கொய்ராலா, ஷில்பா ஷெட்டி, சோனாலி பிந்த்ரே, அபு ஜானி, சந்தீப் கோஸ்லா ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். முன்னதாக, பிசி ஜூவல்லர்ஸ் தயாரித்த மகுடத்தை முந்தைய வருட அழகி கோயல் ரானா எடுத்து அதிதி ஆர்யாவுக்கு சூட்டினார். இந்த அழகிப் போட்டியில் முதலிடம் பெற்ற அதிதி ஆர்யா உலக அழகிப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்பார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.