
குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) தொடர்பாக இளைஞர்கள் மற்றும் மக்களை எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துகின்றன; குடியுரிமைச் சட்டம் என்பது, குடியுரிமையை வழங்குவதற்குத்தானே தவிர பறிப்பதற்கல்ல என்று பேசினார் பிரதமர் மோடி!
சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு கோல்கத்தாவில் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர், பிரதமர் மோடி ஹவுராவில் உள்ள பேலூர் மடத்தில் நடந்த விவேகானந்தர் ஜெயந்தி விழாவில் பேசினார்.
அப்போது அவர், துடிப்புமிக்க 100 இந்தியர்களை என்னிடம் தாருங்கள் இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன் என்று கூறிய சுவாமி விவேகானந்தரை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். மாற்றத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் ஆற்றலும் நமக்குள் இருக்க வேண்டும்.
குடியுரிமைச் சட்டம் என்பது, குடியுரிமை தருவதற்கே; பறிப்பதற்கு அல்ல என்பதை நான் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுதந்திரத்திற்குப் பின்னர் மகாத்மா காந்தி உள்ளிட்ட பெரிய தலைவர்கள், பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினருக்கு இந்தியா குடியுரிமை வழங்கும் என்று நம்பினார்கள். அதை நீங்கள் நன்றாக புரிந்து கொண்டுள்ளீர்கள். ஆனால் சிலர் அரசியல் விளையாட்டுக்காக அதை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்.
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக இளைஞர்களும், மக்களும் தவறாக வழிநடத்தப் படுகிறார்கள்.
குடியுரிமைச் சட்டம் குறித்து புரிந்து கொள்ள எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை. சிஏஏ விவகாரத்தில் பாகிஸ்தானின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது. உண்மையில் சிஏஏ என்பது, சிறுபான்மையினரை பாதுகாக்கக் கூடியது என்றார்.