இந்தியாவில் கரோனா பரவுதல் மற்றும் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்துதல் ஆகியவற்றைத் தடுக்கும் வகையில் போலிச் செய்திகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசின் செய்திக்குறிப்பு:
‘ஒரு நீதிப்பேராணை வழக்கினை விசாரிக்கும்போது உச்ச நீதிமன்றம், போலிச் செய்திகள் உருவாக்கிய பதற்றத்தால் இடம்பெயர் தொழிலாளர்கள் பெரும் அளவில் இடம் பெயர நேர்ந்ததை, தீவிர கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. இந்தத் தொழிலாளர்கள் வெளியே சொல்ல முடியாத துயரத்தை அனுபவிக்க இத்தகைய போலிச் செய்திகள் வழிவகுத்துள்ளன என்பதை நீதிமன்றம் கவனத்தில் கொண்டு தெரிவித்தது.
நீதிமன்றத்தின் இந்த அறிவுத்தலைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் அஜய்குமார் பல்லா அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு போலிச் செய்திகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கடிதம் எழுதியுள்ளார்.
பொதுமக்களுக்காக இந்திய அரசு ஒரு இணையதள முகப்பை உருவாக்கியுள்ளது என்றும் இதில் தகவல்கள், மற்றும் உறுதி செய்யப்படாத செய்திகளை சரிபார்த்துக் கொள்ளலாம் என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கள் அளவில் இது தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு இதே விதமான வழிமுறையை உருவாக்குமாறும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
நிவாரண முகாம்களில் இருக்கின்ற குடிபெயர் தொழிலாளர்களுக்கு தேசிய பேரழிவு மேலாண்மை ஆணையம் (NDMA) / மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) ஆகியவை அறிவித்துள்ள வழிகாட்டி நெறிமுறைகளின்படியும், இதர நலவாழ்வு நடவடிக்கைகளின்படியும் உணவு, மருந்துகள் போன்ற அடிப்படை வசதிகள் வழங்குவதை உறுதி செய்யவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
நாட்டில் கோவிட்-19 நோய்ப் பரவலைத் தடுப்பதற்காக மத்திய அரசு வழங்கியுள்ள அறிவிப்புகள் / ஆலோசனைக் குறிப்புகள் / ஆணைகள் ஆகியவற்றைக் கடைப்பிடிக்குமாறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது’.
இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.