கொரோனா: அதிகரித்து வரும் பாஸிட்டிவ்! குழப்பமும், அதிர்ச்சியுமாய் கேரளா!

இந்தியா பொது தகவல்கள்
pinaray vijayan 1 - 2026

கேரள மாநிலம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் வெற்றியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இரண்டு நாள்களுக்கு முன்புவரை ஒருவர், இருவர் என்ற வகையில் தொற்று அறியப்பட்டு வந்தது.

இதனால் கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக விடுபடும் வகையில் கேரளா முன்னேறிக்கொண்டிருந்தது. இந்த நிலையில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், “தற்போதைய நிலைமை சமீபத்திய நாள்களை விட வித்தியாசமாக உள்ளது.

நெகட்டிவ் ரிசல்ட்டுகளை விட பாஸிட்டிவ் ரிசல்ட்டுகள் தான் இப்போது அதிகமாக வருகின்றன. நேற்று ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.19 பேரில் 10 பேர் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

காசர்கோட்டில் மூன்று பேருக்கும், மலப்புரம், பாலக்காடு மற்றும் கொல்லம் மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காசர்கோட்டில் உள்ள மூன்று பேரும், கண்ணூரில் உள்ள ஒன்பது புதிய நோயாளிகளும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.

அதேநேரம் பாலக்காடு, மலப்புரம், கொல்லத்தில் நோய் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ்நாட்டிலிருந்து திரும்பியவர்கள். இது, எல்லைகளில் கட்டுப்பாட்டை கடுமையாக்குவதன் அவசியத்தைக் காட்டுகிறது. நேற்றைய நிலவரப்படி, கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 426 ஆக உள்ளது. தற்போது, 117 பேர் இதில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எங்கள் அனுபவத்தின்படி, நோய் பரவுவது கணிக்க முடியாமல் உள்ளது. கொரோனா விவகாரத்தில் எங்களுக்கு சில விசித்திரமான அனுபவங்கள் கூட உள்ளன. நோய்த் தொற்று ஏற்பட்ட முதல் கிளஸ்டரில் பத்தினம்திட்டாவில் இருந்த 62 வயது பெண் இன்னும் குணமடையவில்லை. மார்ச் 8-ம் தேதி அறிகுறிகளுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது சாம்பிள் மார்ச் 10ல் எடுக்கப்பட்டது. மார்ச் 13 அன்று வைரஸ் பாசிட்டிவ் என உறுதிசெய்யப்பட்டது.

இதுவரை அவரிடமிருந்து 21 முறை சாம்பிள் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதில் ஏப்ரல் 2ல் எடுத்த சாம்பிள் மட்டும்தான் நெகட்டிவ் என வந்தது. மற்றபடி அனைத்து முறையும் அவருக்கு பாஸிட்டிவ் என்றுதான் வந்துள்ளது.

அவருக்கு, கடந்த 36 நாள்களாக கொரோனா பாஸிட்டிவ் ஆக உள்ளதால் சிகிச்சை பெற்றுவருகிறார். எனினும் அவருக்கு பெரிய சுகாதார பிரச்னை எதுவும் இல்லை. அவர், கடந்த 45 நாள்களாக மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

இது, எங்களுக்கு முன் உள்ள யதார்த்தங்களில் ஒன்றாகும். இந்த மாதிரியான சம்பவங்கள் கொரோனாவை விரட்டுவது எளிதான காரியம் இல்லை என்பதை உணர்த்துகிறது. அதனால் எந்தவிதமான கவனக்குறைவும் இருக்கக்கூடாது என்று அரசு அறிவுறுத்தி வருகிறது” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.