காலைக் கவ்விய முதலையைத் தாக்கி மகளை மீட்ட 58 வயது வீரத் தாய்

vadodara-girl-rescued-by-motherவடோதரா: 58 வயதான தாயார், ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த தனது மகளை முதலை கவ்வியதைப் பார்த்து குதித்து முதலையிடம் இருந்து அவரைக் காப்பாற்றிய சாகசம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குஜராத் மாநிலத்தில் உள்ள திகாரியா முபாரக் கிராமத்தின் வழியாக ஓடுகிறது விஸ்வாமித்ரி ஆறு. வடோதராவில் இருந்து கி.மீ. தொலைவில் உள்ளது இந்த கிராமம். இந்த ஆற்றில், நேற்று காலை கன்டா (19) என்ற இளம் பெண் துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு முதலை அவரது வலது காலைக் கவ்வி தண்ணீருக்குள் இழுத்தது. முதலையின் பலம் வாய்ந்த பிடியில் சிக்கிய அந்த இளம் பெண் வலி தாளாமல் அலறித் துடித்தார். அப்போது அருகில் ஓடி வந்த அவரது தாய் திவாலினென் வாங்கர், மகளின் கையைப் பிடித்துக் கொண்டார். மகளை தண்ணீரில் இருந்து வெளியே இழுக்க முயன்றார். ஆனால் முதலை கன்டாவை தண்ணீருக்குள் இழுத்தது. இதனால் ஆத்திரமுற்ற திவாலி வாங்கர் தன் கையில் வைத்திருந்த பானையால் முதலையை தாக்கத் தொடங்கினார். அவரது தாக்குதலில் நிலை குலைந்த முதலை, கன்டாவின் காலை விட்டுவிட்டு ஆற்று நீருக்குள் ஓடி மறைந்தது. வலது காலில் பலத்த காயம் அடைந்த கன்டா உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திவாலினென் வாங்கரின் வீரச் செயலை கிராம மக்கள் பாராட்டினர். இது குறித்து கருத்து தெரிவித்த வனத் துறை அதிகாரி அசோக் பாண்ட்யா, இந்த ஆற்றைத் தங்கள் இருப்பிடமாகக் கொண்டு முதலைகள் வருவது குறித்து நாங்கள் ஏற்கெனவே கிராம மக்களை எச்சரித்துள்ளோம். கவனமாக இருக்க அறிவுரை கூறியுள்ளோம்.,. என்றார்.