கடை திறந்த சந்தோசம்… பட்டாசு வெடித்து பதற வைத்த குடிமகன்கள்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
crackers in wine shop

கர்நாடக மாநிலம் கோலாரில் மதுபானக் கடைகள் இன்று முதல் திறக்கப்பட்டதை அடுத்து, குடிமகன்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி தீர்த்திருக்கின்றனர்!

கொரோனா வைரஸ் பரவுதைத் தடுக்க நாடு முழுவதும் 40 நாட்கள் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இந்த லாக்டவுன் தற்போது மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் இந்த லாக்டவுன் நீட்டிப்பின் போது பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் நேற்று முதல் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன.

மதுபானக் கடைகள் திறக்கப்பட்டதை அடுத்து, பெரும்பாலான இடங்களில் காலை முதல் பல கிலோ மீட்டர் நீளத்துக்கு குடிமகன்கள் வரிசைகளில் காத்திருந்து மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர். இந்த திடீர் கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் பெரிதும் திணறினர்.

தில்லியில் மதுபானப் பிரியர்களின் கூட்டத்தால் மிரண்டு போய், பல இடங்களில் மதுபானக் கடைகளை இழுத்து மூட வேண்டிய சூழல் ஏற்பட்டது.

குடிமகன்கள் கூடி இருப்பது, சமூக விலகலை கடைபிடிக்காமல் இருப்பது ஆகியவற்றை முன்வைத்து சமூக வலைத்தளங்களிலும் படங்களை, வீடியோக்களைப் பதிவு செய்து, விவாதங்கள் நடைபெறுகின்றன. இந்த குடிமகன்களை தீனியாக்கி மீம்ஸ்களும் பறக்கின்றன.

தற்போது தமிழகத்தில் மதுபான கடைகள் திறக்கப்படவில்லை. வரும் 7ம் தேதி முதல் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டிருக்கிறது. இதனால் கர்நாடகா, ஆந்திரா எல்லை பகுதிகளுக்கு சென்று காத்திருந்து மதுபானங்களை வாங்கி வருகின்றனர் தமிழக குடிமகன்கள்.

மதுக்கடைகள் திறக்கப் பட்டதில் உற்சாகம் கரைபுரண்டு போன குடிமகன்கள் கர்நாடக மாநிலம் கோலாரில் சமூக இடைவெளியின்றி மதுபான கடை முன்பு கூடி நிற்கின்றனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் மதுபான கடை முன்பு பட்டாசுளை கொளுத்தி மகிழ்ந்தனர்.

40 நாட்கள் கடையைத் திறக்காமல் இன்று திறந்திருப்பது திரில்லாக இருக்கிறது என்று கூறி பட்டாசுகளை வெடித்து சந்தோசமாகக் கொண்டாடி, மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.