துணை முதல்வர் பதவியிலிருந்து சச்சின் பைலட் நீக்கம்! ராஜஸ்தானில் காங்கிரஸ் அதிரடி!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
rajastan-rebel-mlas
rajastan-rebel-mlas

ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து துணை முதல்வர் பதவியிலிருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டுள்ளார்! இவருடன் மேலும் 2 அமைச்சர்கள் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. சச்சின் பைலட்டின் மாநிலக் கட்சித் தலைவர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராக, கல்வி இணை அமைச்சர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை சச்சின் பைலட் புறக்கணித்தார். இதைஅடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இவரோடு விஸ்வேந்திர சிங் மற்றும் ரமேஷ் மீனா ஆகியோரது அமைச்சர் பதவிகளும் பறிக்கப்பட்டுள்ளது! இதனை காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா அறிவித்தார்.

முன்னதாக, முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் போர்க்கொடி உயர்த்தினார். இதை அடுத்து முதல்வர் அசோக் கெலாட் தமது பலத்தைக் காட்ட, 107 காங்கிரஸ் எம்.எல்.எ.க்கள் 15 சுயேச்சைகள் மற்றும் பிறரை அழைத்திருந்தார். 122 எம்.எல்.ஏ.க்களில் 106 பேர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மீதமுள்ள 16 எம்.எல்.ஏ.க்கள் தம்முடன் சேர்ந்திருப்பதாக சச்சின் பைலட் வீடியோ ஒன்றை வெளியிட்டார். ஆனால் அதில் சச்சின் பைலட் இல்லை. இந்த நெருக்கடிக்கு இடையில் ராஜஸ்தான் நிலவரம் குறித்து விவாதிக்க, பாஜக. மாநில அலுவலகத்தில் பாஜக தலைவர்கள் கூடினர். மாநிலத் தலைவர் சதீஷ் பூனியா எதிர்க்கட்சித் தலைவர் குலாப் சந்த் கட்டாரியா, எதிர்க்கட்சி உதவித் தலைவர் ராஜேந்திர ராத்தோர் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் இருந்தனர். ராஜஸ்தான் நிலவரம் குறித்தும், கட்சி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.