தாய் இறந்ததால் மருத்துவரை சரமாரியாக குத்திய மகன்!

இந்தியா கிரைம் நியூஸ்
dr 1 - 2026

இந்தியாவில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இரவு, பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர். ஆனால் ஒரு சில பகுதிகளில் மருத்துவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் அரங்கேறி வருகின்றன.

சுகாதார ஊழியர்களுக்கு எதிரான தாக்குதல் , அவர்கள் வசிக்கும் பகுதியில் அனுமதி மறுக்கப்படுவது என பல பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தொய்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் யாரும் ஈடுபட வேண்டாம் என அரசு அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் மருத்துவர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லத்தூர் பகுதியை சேர்ந்த 60 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு கடந்த 25ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஏற்கெனவே உடல்நலக் குறைபாடால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவமனையின் அலட்சியத்தால்தான் அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

இதனையடுத்து, அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவரிடம் அவரது மகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த நபர் அங்கு இருந்த கூர்மையான ஆயுதத்தை எடுத்து மருத்துவரின் மார்பு, கழுத்து, கைகளில் குத்தினார்.

இந்த தாக்குதலில் கடுமையாக பாதிக்கப்பட்ட மருத்துவர், தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சம்பந்தப்பட்ட நபர் உடனடியாக கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மருத்துவர் தாக்கப்பட்டதற்கு மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவர்கள் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.