மத்திய அமைச்சரவையில் 9 பேர் புதிதாக பதவியேற்பு! 4 பேர் காபினட் அமைச்சர்களாக உயர்வு!

Published:

புது தில்லி:
மத்திய அமைச்சரவையில் 9 பேர் புதிதாக இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர். நிர்மலா சீதாராமன் உள்பட நன்றாக செயல்பட்ட 4 பேர் காபினட் அந்தஸ்து அமைச்சர்களாக உயர்வு பெற்றனர்.

அமைச்சர்களின் செயல்பாட்டை உன்னிப்பாக கவனித்து வந்த மோடி, திருப்திகரமாக செயல்படாதவர்களை நீக்கிவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க தீர்மானித்தார். அதன்படி மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவையில் மாற்றம் செய்ய வசதியாக ராஜீவ் பிரதாப் ரூடி (திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர்– தனி பொறுப்பு), பக்கன் சிங் குலாஸ்டே (சுகாதாரம், குடும்பநலம்), சஞ்சீவ் குமார் பல்யான் (நீர்வளம்), பண்டாரு தத்தாத்ரேயா (தொழிலாளர் நலம்–தனி பொறுப்பு), மகேந்திரநாத் பாண்டே (மனிதவள மேம்பாடு), சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை மந்திரி கல்ராஜ் மிஸ்ரா ஆகியோர் தங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி பாஜக.,வைச் சேர்ந்த 9 பேரை தனது அமைச்சரவையில் இணைத்துக் கொண்டார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

அஸ்வினி குமார் சவுபே (பீகார்), வீரேந்திர குமார் (மத்திய பிரதேசம்), சிவ் பிரதாப் சுக்லா (உத்தரபிரதேசம்), அனந்த் குமார் ஹெக்டே (கர்நாடகா), ராஜ்குமார் சிங், ஹர்தீப் புரி (முன்னாள் வெளியுறவு அதிகாரி), கஜேந்திர சிங் செகாவத், சத்யபால் சிங் (மும்பை முன்னாள் போலீஸ் கமி‌ஷனர்), அல்போன்ஸ் கன்னன்தானம் (முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி) ஆகியோர் புதிய அமைச்சர்களாக இணைத்துக் கொள்ளப் பட்டனர்.

இன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

ஏற்கெனவே அமைச்சர்களாக இருந்த முக்தார் அப்பாஸ் நக்வி, பியூஸ் கோயல், நிர்மலா சீதாராமன், தர்மேந்திர பிரதான் ஆகியோர், சிறப்பாக செயல்பட்ட அமைச்சர்கள் என்று, அவர்கள் கேபினட் அமைச்சர்களாக உயர்த்தப்பட்டனர். அவர்கள் நால்வரும் காபினட் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். யாருக்கு எந்த துறை என்பது பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

விழாவில் பிரதமர் மோடி, பாஜக., தலைவர் அமித்ஷா, எம்.பி.க்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கூட்டணிக் கட்சிகளான சிவசேனா, ஐஜத., உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப் படவில்லை. கூட்டணிக் கட்சிகளை அடங்கிய மேலும் ஒரு அமைச்சரவை மாற்றம் விரைவில் நடக்கும் என்று தகவல்கள் வெளியாகின.

Related articles

Recent articles

spot_img