மும்பை ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் பலி

இந்தியா சற்றுமுன்

மும்பை:
மும்பையில் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் பலியாகினர். ரயில் நிலையத்திற்கு ஒரே நேரத்தில் 4 ரயில்கள் வந்தன என ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மும்பையில் உள்ள எல்பின்ஸ்டன் சாலை ரயில் நிலையத்தில், எல்பின்ஸ்டன் சாலை, பரேல் புறநகர் ரயில் நிலையத்தை இணைக்கும் குறுகிய நடைமேடை மேம்பாலம் உள்ளது. இன்று காலை மழை பெய்ததைத் தொடர்ந்து ரயில் நிலையத்தில் நின்ற பயணிகள், மழை நின்றதும் வெளியேற அவசரம் காட்டினர். அப்போது அந்த நடைமேடை மேம்பாலத்தில், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி பொதுமக்களில் 22 பேர் உயிரிழந்தனர், 33 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து ஒரு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், பல்வேறு இடங்களில் இருந்து 4 ரயில்கள் ஒரே நேரத்தில் ரயில் நிலையத்திற்கு வந்தது. மழை வேறு பெய்தது. இதனால் நெரிசல் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நடைமேடை மேம்பாலத்தின் அகலம் உடனடியாக விரிவு படுத்தப்படும் என ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

இந்நிகழ்வுக்கு பிரதமர் மோடி தனது வருத்தங்களை பதிவு செய்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.